வரும் ஜூன் மாதம் முதல் தேதியிலிருந்து (நாளை முதல்), தகுதியுள்ள குடும்ப அட்டைதாரர்கள் தமிழக அரசு வழங்கும் இலவச அரிசியை பதட்டமின்றி பெற்றுக்கொள்ளலாம் எனவும், இலவச அரிசி வினியோகத்தைக் கண்காணித்திட மாவட்டத்தின் எட்டு வட்டங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சி.நா.மகேஷ்வரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி 01.06.2011 முதல் தொடர்ந்து தகுதியுள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரிசி இலவசமாக வழங்கப்படவுள்ளது. நியாயவிலை அங்காடிகளில் பதியப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்குத் தேவையான நூறு சதவிகித அரிசி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் அவர்களது குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு அரிசி இலவசமாக வழங்கப்படும்.
எனவே, குடும்ப அட்டைதாரர்கள் எந்தவித பதட்டமுமின்றி நியாயவிலை அங்காடிகளுக்குச் சென்று, அவர்களது குடும்ப அட்டைக்குத் தகுதியான அளவு அரிசியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் இலவச அரிசி வழங்கும் திட்டத்தைக் கண்காணித்திட தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எட்டு வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையில் எட்டு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
உரிய காலத்தில் கடை திறக்கப்படவில்லையென்றாலோ, வழங்கப்படும் அரிசியின் தரம் - அளவு ஆகியவற்றில் குறைபாடுகள் இருந்தாலோ சம்பந்தப்பட்ட வட்டங்களிலுள்ள வட்ட வழங்கல் அலுவலர்களுக்கும், மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கும் தொலைபேசி மூலம் தகவல் அளித்திட குடும்ப அட்டைதாரர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின்படி, திருச்செந்தூர் வட்டத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி வினியோகம் குறித்த குறைபாடுகளை, 944 5000 373 என்ற கைபேசி எண்ணிலோ அல்லது மாவட்ட வழங்கல் அலுவலரது 944 5000 370 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்புகொண்டு தெரிவிக்கலாம். |