நடைபெற்று முடிந்துள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வென்றுள்ளோம்... சிறுபான்மையினர் பிரச்சினைகளை சட்டப்பேரவையில் சுதந்திரமாக எடுத்துரைப்போம் என 28.05.2011 அன்று காயல்பட்டினம் வந்திருந்த மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் தெரிவித்துள்ளார்.
மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாலோசனைக் கூட்டம் காயல்பட்டினம் வாவு வஜீஹா வனிதையர் கல்லூரியில் 28.05.2011 அன்று மாலை 05.30 மணிக்கு மாவட்டத் தலைவர் ஆஸாத் தலைமையில் நடைபெற்றது. தலைமையுரையைத் தொடர்ந்து, மாநில பேச்சாளர் இப்னு தைமிய்யா துவக்கவுரையாற்றினார்.
பின்னர் மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ் உரையாற்றினார். அவரது உரையில் இடம்பெற்ற செய்திகள் பின்வருமாறு:-
மக்கள் சேவையில் தமுமுக:
1995இல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் - தமுமுக என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அப்போதைய சூழலில் மனித ஒழுக்கத்தை நிலைநிறுத்த தமுமுக முயன்றது. காலபோக்கில் மனிதாபிமான செயல்களை அடிப்படையாகக் கொண்டு விரிவான செயல்திட்டத்தோடு, அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்தது.
சென்னை முதல் குமரி வரை உள்ளவர்களுக்கு 98 ஆம்பலென்ஸ்களை அர்ப்பணித்து சமய சார்பாற்ற முறையில் மக்களுக்காக சேவை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே இவ்வளவு அதிகமான ஆம்புலன்ஸ் வாகனங்கள் மக்கள் சேவையில் ஈடுபடுத்தப்படுவது வேறெங்குமில்லை.
அதேபோல் ரத்ததான இயக்கம் துவங்கி அதிக அளவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ரத்ததானம் செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஆழிப்பேரலை - சுனாமி தாக்கியபோது, தமிழக கடலோர மாவட்டங்களில் தமுமுகவினர் தீவிர களப்பணியாற்றினர்.
மனிதநேய மக்கள் கட்சி துவக்கம்:
நம் நாட்டில் அரசியல் என்பது மிக மோசமான காலகட்டத்தில் சென்று கொண்டிருந்தபோது மக்களுக்கு சேவை செய்வதற்காக 2009ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதியன்று மனித நேய மக்கள் கட்சியைத் துவக்கினோம். அரசியல் கட்சிகளின் மத்தியில் வித்தியாசமான வகையில் சேவையாற்றும் வகையில் எமது செயல்பாடுகளை அமைத்துகொண்டோம்.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதியில் தனித்து போட்டியிட்டு 4 சதவீத வாக்குகளை பெற்றோம். அதன்பிறகு 2011 சட்டசபைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இணைந்து 3 தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். ஒரு தொகுதியில் தோல்வியடைந்தாலும், அத்தொகுதி மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றோம்.
தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி:
இத்தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் தனிசின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். சட்டசபையில் முன் வரிசையில் அமரும் வகையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறுப்பான்மை மக்களின் கருத்துக்களை சட்டசபையில் ஒலிக்க செய்யமுடியும்.
சமச்சீர் கல்வித் திட்டம்:
கடந்த திமுக அரசு அறிமுகப்படுத்தியுள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தில் ஏராளமான கோளாறுகள் உள்ளன. சமச்சீர் கல்வித் திட்டம் குறித்து அப்போதைய அரசு கேட்டுக்கொண்டதற்கிணங்க, 109 பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டு ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது முத்துக்குமார் தலைமையிலான நிபுணர் குழு. ஆனால் அக்குழுவின் பரிந்துரைகள் எதையும் கண்டுகொள்ளமாலேயே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த கடந்த ஆட்சியில் உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது பொறுப்பேற்றுள்ள அதிமுக அரசு இத்திட்டத்தை வல்லுனர் குழுவைக் கொண்டு முறையாக ஆய்வு செய்து செயல்படுத்தும் வகையில் ஓராண்டுக்கு ஒத்தி வைத்துள்ளது சரியான முடிவுதான்.
சமச்சீர் கல்வித்திட்டத்தின் கீழ் அரபி, உர்தூ உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட மனித நேய மக்கள் கட்சி கோரும்.
சட்டப்பேரவை வளாக இடமாற்றம்:
போதிய வசதிகள் எதுவும் முறையாகச் செய்யப்படாத நிலையில் அவசர கதியில் திறந்துவைக்கப்பட்ட புதிய சட்டப்பேரவை வளாகத்தைத் தவிர்த்துவிட்டு, பழைய சட்டப்பேரவை வளாகத்தில் செயல்பட அதிமுக அரசு முடிவு செய்துள்ளது வரவேற்கத்தக்கது.
காயல்பட்டினத்தை உள்ளடக்கி கிழக்கு கடற்கரை சாலை:
முஸ்லிம் சமுதாய மக்கள் பெரும்பான்மையாக வாழும் காயல்பட்டினத்தைத் தொட்டுச் செல்லும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையை அமைக்கப்பட வேண்டும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். சிறுப்பான்மை கல்வி நிறுவனங்களுக்கு அங்கீகாரம் வழங்கும்போது தற்காலிகமாக 3 ஆண்டுகளுக்கு மட்டும் அங்கீகாரம் என்று இல்லாமல், நிரந்தர கல்வி நிறுவனமாக அங்கீகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், அதிமுக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படாது என்ற கருத்து குறித்து செய்தியாளர்கள் விளக்கம் கேட்டபோது,
அப்படி எதுவும் நடக்கப்போவதில்லை... மரியம் பிச்சை என்ற ஒரு முஸ்லிமுக்கு அமைச்சர் பொறுப்பளித்தது இந்த அரசு. ஆனால் அவர் இறைநாட்டப்படி விபத்தில் காலமாகிவிட்டார். அக்குறை விரைவில் போக்கப்படும் என்று நம்புவோம்... என்றார்.
கூட்டத்தில் மமக மாவட்ட துணைத் தலைவர் காஜா முகைதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் நொலாஸ்கோ, யூசுப், மாவட்டப் பொருளாளர் முகம்மது நெய்னா, மாவட்ட மருத்துவ அணி செயலாளர் முகம்மது கிதுரு, மாவட்ட தொண்டரணி செயலாளர் புஹாரி, மாவட்ட சுற்றுச்சூழல் அணி செயலாளர் தமிழ் தங்கவாப்பா, தூத்துக்குடி மாநாகர தலைவர் அபூபக்கர் சீத்திக், மாநாகர செயலாளர் மீராசாமிப், காயல் நகர தலைவர் ஜாஹீர் ஹுஸைன், காயல் ரத்ததான கழக துணைத் தலைவர் முர்ஷித் முஹ்ஸின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
|