முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான, புதிய அரசின் இரண்டாவது அமைச்சரவை (கேபினட்) கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு, கோட்டையில் நடக்கிறது. கவர்னர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதிய தலைமைச் செயலகத்தை எவ்வாறு பயன்படுத்துவது, தேர்தல் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவது போன்றவை குறித்த முக்கிய முடிவு இக்கூட்டத்தில் எடுக்கப்பட உள்ளது.
சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., அமோக வெற்றி பெற்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடித்தது. மூன்றாவது முறையாக தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். முதல்வர் மற்றும் புதிய அமைச்சர்கள், கடந்த 16ம் தேதி சென்னை பல்கலை நூற்றாண்டு மண்டபத்தில் பதவியேற்றனர். அதன்பின், கடந்த 23ம் தேதி புதிய எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர். இதைத் தொடர்ந்து, 27ம் தேதி சபாநாயகர் தேர்தல் நடந்தது.
வரும் 3ம் தேதி கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டத்தொடர் துவங்குகிறது. ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையின், முதல் கூட்டம் கடந்த 22ம் தேதி நடந்தது. இதில், மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடும் தேதி அறிவிக்கப்பட்டது. சமச்சீர் கல்வி பாடத்திட்டங்கள் தரமாக இல்லாததால், இந்த ஆண்டு நிறுத்தி வைக்கவும், பள்ளிகள், பழைய பாடங்களையே பின்பற்றவும் முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து, இரண்டாவது அமைச்சரவை (கேபினட்) கூட்டம், இன்று காலை 9.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தலைமையில் கோட்டையில் நடக்கிறது. இதில், பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. இலவச அரிசி திட்டம், திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு இலவச தங்கம் உள்ளிட்ட திட்டங்களை மக்களுக்கு சேரும் வகையில் அமல்படுத்துவது குறித்து அமைச்சர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வான மாணவ, மாணவியருக்கு லேப்-டாப் வழங்குதல், தனியார் பள்ளிகளின் கட்டண நிர்ணயம் தொடர்பான பிரச்னை, கவர்னர் உரையில் இடம் பெறும் திட்டங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.
புதிய தலைமைச் செயலக கட்டடத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து, ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மொத்தம் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமைச் செயலகத்தை, கோட்டைக்கு மீண்டும் மாற்றுவதற்கு அ.தி.மு.க., கூட்டணிக் கட்சிகளும், ம.தி.மு.க.,வும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
மேலும், புதிய தலைமைச் செயலக வளாகத்துடன் இணைப்பு வளாகமாக, அதனருகில் பல அடுக்கு கட்டடங்களை கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த பணியை தொடருவதா அல்லது நிறுத்தி வைப்பதா என்பது பற்றியும் அரசு முடிவு எடுக்க வேண்டியுள்ளது.
"புதிய தலைமைச் செயலக கட்டடத்தை என்ன செய்ய போகிறீர்கள்' என, கடந்த வாரம் முதல்வரிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "அமைச்சரவை கூடி முடிவு செய்யும்' என, பதிலளித்து இருந்தார். இதன்படி, இன்றைய அமைச்சரவை கூட்டத்தில், புதிய தலைமைச் செயலக கட்டடம் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது.அமைச்சரவையின் முடிவும், கோர்ட்டில் தெரிவிக்கப்பட உள்ளது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதில் முறைகேடுகள் நடந்ததா என்பது பற்றி விசாரிக்க உத்தரவிடுவது பற்றியும், அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படுமென தெரிகிறது.
தவிரவும் மின்சார பற்றாக்குறையை தவிர்க்க நீண்ட கால அணுகுமுறை உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து அரசு தன் பாதையை தெளிவுபடுத்தும் வகையில் இந்த ஆலோசனைகள் இருக்கும். உயர் அதிகாரிகள் பதவிமாற்றங்கள் முடிந்த நிலையில், அமைச்சர்கள் தங்கள் பணியை சிறப்பாக செய்வதற்கு வசதியாக இந்த முடிவுகள் உதவிடும் என்று கூறப்படுகிறது.
நன்றி:
தினமலர் (29.05.2011)
|