10ஆம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறும் - திருமறை குர்ஆனை மனனம் செய்து முடித்த ஹாஃபிழ் மாணவர்களுக்கு அமீரக காயல் நல மன்றம் சார்பில் ஆண்டுதோறும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மன்றத்தின் செயற்குழு தீர்மானித்துள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் அமீரக காயல் நல மன்றத்தின் மே மாத செயற்க்குழுக் கூட்டம், 20.05.2011 அன்று மாலை 05.00 மணிக்கு, மன்றத் தலைவர் ஹாஜி ஜே.எஸ்.ஏ.புகாரீ இல்லத்தில் அவரது தலைமையில் நடைபெற்றது. ஹாஜி எம்.எஸ்.நூஹ் ஸாஹிப் கிராஅத் ஓதி கூட்டத்தைத் துவக்கி வைத்தார்.
நகர்நலன் குறித்த செயற்குழு உறுப்பினர்களின் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 - 10ஆம், 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தேர்ச்சி பெற்றோருக்கு பாராட்டு:
நடப்பாண்டு நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற நகரின் அனைத்துப் பள்ளி மாணவ-மாணவியரையும் எம் மன்றம் பாராட்டுகிறது. அத்துடன், வருங்காலங்களில் ப்ளஸ் 2 தேர்வில் மாநில அளவில் சாதனைகள் புரிந்திட மாணவர்களை வாழ்த்துகிறது.
தீர்மானம் 2 - நகர சாதனை மாணவர்களுக்கு பணப்பரிசுகள்:
இவ்வாண்டு ப்ளஸ் 2, 10ஆம் வகுப்பு எஸ்.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன் அரசுப் பொதுத் தேர்வுகளில் நகரளவில் முதல் மூன்றிடங்களைப் பெற்ற மாணவ-மாணவியருக்கு பின்வருமாறு பணப்பரிசுகள் அறிவிக்கப்படுகிறது:-
ப்ளஸ் 2 தேர்வுகள்:
முதலிடம் ரூ.7,500
இரண்டாமிடம் ரூ.5,000
மூன்றம் இடம் ரூ.3,000
பத்தாம் வகுப்பு (எஸ்.எஸ்.எல்.சி.) தேர்வுகள்:
முதலிடம் ரூ.5,000
இரண்டாமிடம் ரூ.3,000
மூன்றம் இடம் ரூ.2,000
பத்தாம் வகுப்பு (மெட்ரிகுலேஷன்) தேர்வுகள்:
முதலிடம் ரூ.5,000
இரண்டாமிடம் ரூ.3,000
மூன்றம் இடம் ரூ.2,000
அத்துடன், இவ்வாண்டு ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் உளவியல் பாடத்தில் மாநில அளவில் மூன்றாமிடம் பெற்ற மாணவி ஆர்.முத்துமாரிக்கு ரூ.5,000 பணப்பரிசு அறிவிக்கப்படுகிறது.
தீர்மானம் 3 - 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறும் ஹாஃபிழ் மாணவர்களுக்கு ஊக்கப்பரிசு:
புதுமைகளை புகுத்துவதில் அமீரக காயல் நல மன்றம் என்றுமே முன்னோடியாகத் திகழ்கிறது என்பதை மீண்டும் உறுதி செய்யும் முகமாக 2011-12 கல்வியாண்டிலிருந்து, பத்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறும் - திருக்குர்ஆனை மனனம் செய்துள்ள ஹாஃபிழ் மாணவர்களுக்கு, அந்தந்த ஆண்டுகளில் அவர்களின் எண்ணிக்கைகளைக் கருத்தில் கொண்டு ஊக்கத் தொகைகளும், அதன் எண்ணிக்கைகளும் அறிவிக்கப்படும் என தீர்மானிக்கப்படுகிறது.
அத்துடன், சோதனை முயற்சியாக நடப்பாண்டில் நடைபெற்று முடிந்துள்ள 10ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள ஹாஃபிழ் மாணவர்களில் முதலிடம் பெற்ற மாணவருக்கு ஊக்கத்தொகையாக ஐந்தாயிரம் ரூபாய் ஊக்கப்பரிசு வழங்குவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது.
தீர்மானம் 4 - நகர நல்லாசிரியர் கவுரவிப்பு நிகழ்ச்சி:
ஆண்டுதோறும் அமீரக காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்டு வரும் நகர நல்லாசிரியர் கவுரவிப்பு நிகழ்ச்சியை இவ்வாண்டு முதல் தனித்து நடத்தாமல், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மற்றும் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகள் இணைந்து நடத்தும் “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” நிகழ்ச்சியின் ஓரம்சமாக நடத்துவதென தீர்மானிக்கப்படுகிறது.
அத்துடன், அவ்விழாவில் தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்பின் தரவரிசை அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நகரின் சிறந்த முதல் இரண்டு அல்லது மூன்றிடங்களைப் பெறும் பள்ளிகளின் ஆசிரியர் நலனுக்காக ஊக்கத்தொகைகளை வழங்குவதெனவும் தீர்மானிக்கப்படுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்துவதே சாலச்சிறந்ததாக இருக்கும் என்று கருதும் அமீரக காயல் நல மன்றம், இது விஷயத்தில் அனைத்துலக காயல் நல மன்றங்களின் பொருளாதார ஒத்துழைப்புகளும் கிடைக்கப்பெற்றால், இத்திட்டத்தை இவ்வாண்டிலிருந்தே விரிவாகவும், பெரிதாகவும் செய்து, ஆசிரியர்களை முழு மகிழ்ச்சி பெறச் செய்திட இயலும் என்று இச்செயற்குழு கருதுகிறது.
அறிவிக்கப்பட்டுள்ள இவ்வனைத்து பரிசுகளையும், இக்ராஃ - தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் இணைந்து, வரும் ஜூன் 24ஆம் தேதியன்று நடத்திட திட்டமிட்டுள்ள “சந்தியுங்கள் மாநிலத்தின் முதன்மாணவரை” பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது அவ்வமைப்புகளின் ஒப்புதலுடன் வழங்குவதெனவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 5 - புதிய திட்டங்கள், கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவோர் கவுரவிப்பு:
நமது நகருக்குப் பயனளிக்கும் வகையில் புதிய திட்டங்களையோ, புதுமையான கண்டுபிடிப்புகளையோ அறிமுகப்படுத்தும் பொதுநல அமைப்புகள் மற்றும் தனி நபர்களை அடையாளங்கண்டு, ஆண்டுதோறும் அவர்களை கவுரவிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது. இதற்கான செயல்திட்டங்கள், அவற்றுக்கான விதிமுறைகள் குறித்து முடிவு செய்யப்பட்ட பின்னர் முறையாக அறியத் தரப்படும்.
தீர்மானம் 6 - தமிழகத்தின் புதிய அரசுக்கு வாழ்த்து:
நடைபெற்று முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் இமாலய வெற்றி பெற்றுள்ள அ.இ.அ.தி.மு.க. கட்சிக்கும், அதன் பொதுச் செயலாளரான முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதாவிற்கும் அமீரக காயல் நல மன்றம் மனமார்ந்த பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
அத்துடன், திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்டு வென்றுள்ள அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் அவர்களையும் எம் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது.
அத்துடன், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளை மறந்து காயல்பட்டினத்தைச் சார்ந்த அரசியல் அங்கத்தினர் நகர்நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டுமென இக்கூட்டம் கோருகிறது.
தீர்மானம் 7 - சிறப்பு மலர் தொடர்பான சிறப்புக் கூட்டம்:
அமீரக காயல் நல மன்றத்தால் தயாரித்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ள சிறப்பு மலர் ஆக்கப்பணிகள் தாமதித்துக்கொண்டே செல்வதைக் கருத்திற்கொண்டு, அதைத் துரிதப்படுத்தும் வகையில் அதற்கென சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி ஆவன செய்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நன்றியுரைக்குப் பின் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சாளை ஷேக் ஸலீம்,
துணைத் தலைவர்,
காயல் நல மன்றம்,
ஐக்கிய அரபு அமீரகம். |