காயல்பட்டினத்தில் லாரி நிறுத்தியிருந்தது தொடர்பாக இரு பிரிவினர்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக இரு பிரிவினரைச் சேர்ந்த 9 பேரை ஆறுமுகனேரி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் முன்பு பேரூராட்சி கவுன்சிலராக இருந்தார். தற்போது அதிமுகவில் இருந்து வருகிறார். இவரது மகன் வடிவேல் (27). இவர் திருச்செந்தூரில் தள ஓடு, ஹாலோ பிளாக், சிமெண்ட் மற்றும் வீட்டு கட்டிடப் பொருட்கள் விற்பனை செய்து வருகிறார்.
இவர், காயல்பட்டினம் விசாலட்சுமி அம்மன் கோவில் தெருவில் வியாழக்கிழமை இரவு தள ஓடுகளை இறக்கிக்கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேனை ஓட்டி வந்த காயல்பட்டினம் சீதக்காதி நகரைச் சேர்ந்த ஷேக் நூர்தீன் மகன் முகம்மது சுலைமான் (23) லாரியை ஓரமாக விடுமாறு கூறியிருக்கிறார். இதில் இரு பிரிவினருக்கிடையில் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.
அங்கிருந்து முகம்மது சுலைமான் அப்போது சென்று விட்டு பின்னர் சிறிது நேரம் கழித்து சிலரை அழைத்து வந்து வடிவேலை தாக்கியுள்ளதாகவும், அடுத்த சிறிது நேரத்தில் வடிவேல் தனது தந்தை முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கவே திருச்செந்தூரிலிருந்து சிலரை காரில் அழைத்து வந்து பேருந்து நிலையத்தில் இருந்த முகம்மது சுலைமானை தாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு, காயல்பட்டினம் பேருந்து நிலையத்தில் கடும் கூட்டம் கூடியது. உடனடியாக அங்கு விரைந்து வந்த காவல்துறையினர், கூட்டத்தைக் கலைத்தனர். சம்பவ இடத்தை திருநெல்வேலி டிஐஜி வரதராஜூலு, தூத்துக்குடி காவல்துறை கண்காணிப்பாளர் நரேந்திரநாயர் பார்வையிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்தனர்.
முகம்மது சுலைமான் தூத்துக்குடி அரசு மருத்துவமனையிலும் வடிவேல் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஆறுமுகனேரி காவல்துறையினர் இரு பிரிவினர் மீதும் வழக்குப்பதிவு செய்து, ஒரு பிரிவைச் சேர்ந்த காயல்பட்டினம் மேல நெசவுத் தெரு கம்சா மொகைதீன் மகன் செய்யது அகமது கபீர் (32), முகம்மது அப்துல்லா மகன் முகம்மது இக்பால் (33), ஹாஜி அப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த சாகுல் ஹமீது மகன் ஷேக் சுலைமான் (36), மேல நெசவு தெரு ஜகுபர் ஹூஸைன் மகன் சில்பா என்ற செய்யது அகமது கபீர் (26), வேன் டிரைவரான விசாலட்சுமி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கணேசன் மகன் சண்முகசுந்தரம் (23) ஆகிய ஐவரையும் கைது செய்தனர்.
மற்றொரு பிரிவைச் சேர்ந்த திருச்செந்தூர் மேல நாடார் தெரு ஆறுமுகம் மகன் முருகேசன் (50), மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற அவரது மகன் வடிவேல் (23), திருச்செந்தூர் தெற்கு நாடார் தெருவைச் சேர்ந்த அழகேசன் மகன் சரவணன் ஆகியோரைக் கைது செய்தனர்.
அனைவரும் திருச்செந்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் காயல்பட்டினத்தில் பதட்டம் நிலவியது. இன்று காலையில் அமைதியாக இருந்ததால் பந்தோபஸ்து திரும்பப் பெறப்பட்டது. மதியம் காயல்பட்டினத்தில் சாலை மறியல் நடைபெற்றதால் மீண்டும் பந்தோபஸ்து போடப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
காயல்பட்டினம் ஸீ கஸ்டம்ஸ் சாலை - பிரதான வீதி சந்திப்பில் இன்று மதியம் நடைபெற்ற சாலை மறியல் காட்சிகள் பின்வருமாறு:-
|