காயல்பட்டினம் ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் 22ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் பட்டமளிப்பு விழா இம்மாதம் 24, 25, 26 தேதிகளில் நடைபெற்றது. அதில், கல்லூரியில் மூன்றாண்டு பாட்த்திட்டத்தின் கீழ் கற்றுத் தேர்ந்த 31 மாணவியருக்கு “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டம் வழங்கப்பட்டது.
துவக்க நாளான 24.06.2011 அன்று, கல்லூரியின் மூன்றாமாண்டு மாணவியரின் ஏற்பாட்டில், இஸ்லாமிய கண்காட்சி நடைபெற்றது.
மறுநாள் 25.06.2011 அன்று, மூன்றாமாண்டு மாணவியரின் சார்பில் அலசல் அரங்கம், பட்டிமன்றம், ஷைத்தானின் ஊசலாட்டங்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மூன்றாம் நாளான 26.06.2011 அன்று காலை அமர்வில், கல்லூரியின் தீனிய்யாத் பிரிவு சிறுமியர் கலந்துகொண்ட பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர், உலகளாவிய இஸ்லாமிய பெண்கள் என்ற தலைப்பில், செங்கோட்டையைச் சார்ந்த பட்டம் பெறும் மாணவி என்.ஆயிஷா பெனாசிர் உரையாற்றினார். அவரைத் தொடர்ந்து, கல்வியின் அவசியம் எனும் தலைப்பில் காயல்பட்டினம் மாணவி எம்.ஜெய்னப் நாச்சி அரபியிலும், பி.ஹுஸைனிய்யா தமிழிலும் உரையாற்றினர். பின்னர், சிறுமியர் மற்றும் தீனிய்யாத் பிரிவு மாணவியரின் உரைகள் இடம்பெற்றன.
அன்று மாலை அமர்வு ஆண்கள் நிகழ்ச்சியாக நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் எஸ்.ஓ.அபுல்ஹஸன் கலாமீ தலைமையில் நடைபெற்ற இவ்வமர்வில், துவக்கமாக பட்டம் பெறும் மாணவியருக்கு கல்லூரி முதல்வரும், அல்ஜாமிஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜிதின் கத்தீபுமான மவ்லவீ எம்.ஐ.அப்துல் மஜீத் மஹ்ழரீ அறிவுரை வழங்கினார்.
பின்னர், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குவைத் தஃவா மையத்தின் அழைப்பாளர் மவ்லவீ ஹாஃபிழ் ஜமாலுத்தீன் ஃபாஸீ பட்டமளிப்புப் பேருரையாற்றினார்.
பின்னர், கல்லூரியில் மூன்றாண்டு கல்வித் திட்டத்தில் பயின்று தேர்ச்சி பெற்ற 31 மாணவியருக்கு “ஆலிமா சித்தீக்கிய்யா” பட்டமும்,
சென்னை பல்கலைக்கழகத்தில் அஃப்ஸலுல் உலமா தேர்வெழுதி தேர்ச்சி பெற்றோருக்கு பதக்கமும்,
பள்ளி மாணவியருக்கான தீனிய்யாத் பிரிவில் பயின்று 8 ஆண்டு பாடத்திட்டத்தை நிறைவு செய்த 26 மாணவியருக்கு பட்டமும் வழங்கப்பட்டன. பட்டம் பெற்ற மாணவியர் அனைவரும் அவரவர் பிரிவிற்கென தனித்தனி சீருடையுடன் மேடையில் அமர்ந்திருந்தனர்.
நிகழ்ச்சிகளனைத்திலும் காயல்பட்டினம் நகரின் அனைத்துப் பகுதிகளைச் சார்ந்த மகளிர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பெண்கள் நிகழ்ச்சிகளின்போது ஆண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
படங்கள்:
M.M.செய்யித் இப்றாஹீம்,
சென்னை. |