கடந்த 10.07.2011 அன்று காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டின் நிறைவுவிழாவின்போது, காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களுக்கும், இன்னும் பலருக்கும் அவர்களின் சமுதாயச் சேவையைப் பாராட்டி ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கப்பட்டது.
‘சேவைச் செம்மல்‘ விருது பெற்றமைக்காக, அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முதல்வரைப் பாராட்டி, அந்த மத்ரஸாவின் முன்னாள் மாணவர் மன்றம் சார்பில் இம்மாதம் 25ஆம் தேதி பாராட்டு விழா நடத்தப்பட்டது.
அணிவகுப்பு மரியாதை:
துவக்கமாக, அல்மத்ரஸதுல் ஹாமிதிய்யா முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களை, மத்ரஸா அணித்தலைவர்கள் பிரிவு, தஃப்ஸ் பிரிவு, பைத் பிரிவு மாணவர்கள் பைத் இசைத்து, தஃப்ஸ் முழங்க, அணிவகுப்பு மரியாதையுடன் விழா மேடைக்கு அழைத்து வந்தனர்.
விழா நிகழ்வுகள்:
பின்னர் துவங்கிய விழாவிற்கு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ் தலைமை தாங்கினார். காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியின் துணைத்தலைவர் மவ்லவீ நஹ்வீ இ.எஸ்.புகாரீ ஆலிம், அதன் முன்னாள் இமாம் ஹாஜி டி.எம்.கே.சுல்தான் அப்துல் காதிர், ‘தமிழ் மாமணி‘ கவிஞர் எஸ்.செய்யித் அஹ்மத், ஹாஜி எஸ்.ஏ.முஹம்மத் அலீ உள்ளிட்ட நகரப் பிரமுகர்கள் முன்னிலை வகித்தனர்.
ஹாமிதிய்யா பேராசிரியர்களான ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் ஆகியோர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினர்.
ஹாமிதிய்யா பேராசிரியர் ஹாஃபிழ் சொளுக்கு முஹ்யித்தீன் அப்துல் காதிர் தவ்ஹீத் கிராஅத் ஓதி விழாவைத் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பாக மும்பை முஷ்தாக் அஹ்மத் ஆக்கம் செய்த வாழ்த்துக் கவிதையை, ஹாஜி எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய் வாசித்தார்.
அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா பேராசிரியர்களான ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.ஏ.கே.முஹம்மத் முஹ்யித்தீன், ஹாஃபிழ் நஸீம் காதிர் ஸாஹிப் ஆகியோர் முன்னாள் மாணவர்கள் சார்பாக அரபியில் வாழ்த்துப் பாடல் பாடினர். பின்னர், இந்நாள் மாணவர்கள் சார்பாக இளவல் என்.எம்.இசட்.அஹ்மத் முஹ்யித்தீன் வாழ்த்து மடல் வாசித்தார்.
வாழ்த்துரை:
பின்னர் வாழ்த்துரை துவங்கியது. துவக்கமாக, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மஹ்ழரா அரபிக்கல்லூரி பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் பாக்கவீ ஃபாழில் அஹ்ஸனீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா பேராசிரியரும், காயல்பட்டினம் இளைஞர் ஐக்கிய முன்னணி செயலருமான ஹாஜி எஸ்.ஏ.கே.முஹ்யித்தீன் அப்துல் காதிர் வாழ்த்துக் கவிதை வாசிக்க, பாடகர் எஸ்.ஏ.காஜா முஹ்யித்தீன் ஜிஷ்தீ வாழ்த்துப் பாடல் பாடினார்.
பின்னர், முன்னாள் மாணவர்கள் சார்பாக, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஏ.சுல்தான் அப்துல் காதிர் ரஹ்மானீ, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனரும், ஹாமிதிய்யா பேராசிரியருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ‘தமிழ் மாமணி‘ கவிஞர் எஸ்.ஏ.நெய்னா ஆக்கம் செய்த வாழ்த்துக் கவியை ஹாமிதிய்யா பேராசிரியர் ஹாஜி என்.டி.முஹம்மத் இஸ்மாஈல் புகாரீ வாசித்தார்.
பின்னர், விழா தலைவர் ஹாஜி எம்.எம்.உவைஸ், ஹாமிதிய்யா முதல்வருக்கு சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினார். பின்னர். ஹாமிதிய்யா பைத் பிரிவு மாணவர்கள் வாழ்த்துப் பாடல் பாடினர்.
அதனைத் தொடர்ந்து, நகரின் பல்வேறு பொதுநல அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சார்பில் ஹாமிதிய்யா முதல்வருக்கு சால்வை அணிவித்தும், நினைவுப் பரிசுகள் வழங்கியும் கண்ணியப்படுத்தப்பட்டது. பின்னர், காயல் எஸ்.இ.அமானுல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முன்னாள் மாணவர்கள் சார்பில் ஹாஃபிழ் ஷாஹுல் ஹமீத் ஃபைஸல், ஹாஃபிழ் எம்.ஏ.சி.ஈஸா ஷஃபீக், ஹாஃபிழ் வெள்ளி முஹம்மத் முஹ்யித்தீன், ஷேக் சுலைமான் உள்ளிட்டோர் வாழ்த்து மடல் வாசித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா முதல்வருக்கு ஹாஜி ஒய்.எஸ்.ஃபாரூக் மோதிரம் அணிவித்தார்.
சிங்கை கா.ந.மன்றம் சார்பில் ஹாஃபிழ்களுக்கு பரிசு:
பின்னர், சிங்கப்பூர் காயல் நல மன்றம் சார்பில், அண்மையில் நாகர்கோவில் கோட்டாறில் நடைபெற்ற மும்மாவட்ட அளவிலான திருக்குர்ஆன் மனனப் போட்டியில் முதல் மூன்றிடங்களை வென்ற காயல்பட்டினம் மாணவர்களுக்கு, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி பணப்பரிசு விழா மேடையில் வழங்கப்பட்டது.
இதுபற்றி ஹாஃபிழ் எஸ்.கே.ஸாலிஹ் அறிமுகம் செய்து பேசினார். அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா முதல்வர், சாதனை ஹாஃபிழ் மாணவர்களுக்கு பணப்பரிசை வழங்கினார்.
முன்னாள் மாணவர்கள் நினைவுப் பரிசு:
பின்னர், முன்னாள் மாணவர்கள் சார்பில் முதல்வருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அப்பரிசை குருவித்துறைப் பள்ளியின் முன்னாள் இமாம் டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ்இமாம் உடன் இணைந்து, ஹாமிதிய்யா பேராசிரியர்களான எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி என்.டி.ஷெய்கு மொகுதூம் ஆகியோர் வழங்கினர்.
பின்னர், முன்னாள் மாணவர்கள் சார்பில் ஹாமிதிய்யா முதல்வருக்கு தங்க நகை பரிசாக வழங்கப்பட்டது. அப்பரிசை, மவ்லவீ எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, எம்.ஜே.ஸிராஜுத்தீன், ஹாஃபிழ் எஸ்.ஏ.அஹ்மத் முஸ்தஃபா, ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ ஆகியோர் இணைந்து வழங்கினர். பரிசு பற்றிய விபரங்களை ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ வழங்கினார்.
பின்னர், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் கவுரவ பேராசிரியர் மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ வாழ்த்துரை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, ஹாமிதிய்யா முதல்வரும், ‘சேவைச் செம்மல்‘ விருது பெற்றவருமான ஹாஜி நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ ஏற்புரையாற்றினார்.
தனது கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் நடத்தப்பட்ட ஒரு நிகழ்வு இது என்றும், இப்படியொரு நிகழ்ச்சியை நடத்த அரும்பாடுபட்ட அனைத்து முன்னாள் மாணவர்களுக்கும், ‘சேவைச் செம்மல்‘ விருது வழங்கிய இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டுக் குழுவினருக்கும் அவர் தனதுரையில் நன்றி தெரிவித்தார்.
முன்னாள் இமாமுக்கு ஊக்கத்தொகை:
பின்னர், இவ்விழாவில் முன்னிலை வகித்த காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளியில் பல்லாண்டு காலம் இமாமாக சேவையாற்றிய டி.எம்.கே.ஷெய்கு அப்துல்லாஹ் பேஷ் இமாமுக்கு ரூபாய் பத்தாயிரம் ஊக்கத் தொகையை, ஹாமிதிய்யா முதல்வர் வழங்கினார்.
இறுதியாக, ஹாமிதிய்யா பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எஸ்.முத்து அஹ்மத் நன்றி கூற, ஹாஃபிழ் செய்யித் அஹ்மத் முத்துவாப்பா துஆவுடன் விழா நிறைவுற்றது.
விழாவில், ஹாமிதிய்யாவின் முன்னாள் - இந்நாள் மாணவர்கள், நகரின் அனைத்துப்ப பகுதிகளிலிருந்தும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிடவசதி செய்யப்பட்டிருந்தது. அசைபட உருப்பெருக்கி மூலம் அவர்களும் விழா நிகழ்வுகளைக் கண்டுகளித்தனர்.
விழா ஏற்பாடுகளை, முன்னாள் மாணவர் மன்ற ஒருங்கிணைப்புக் குழுவினரான ஹாஜி எம்.ஐ.தமீமுல் அன்ஸாரீ, ஹாஜி கம்பல்பக்ஷ் எஸ்.எச்.மொகுதூம் முஹம்மத், எஸ்.ஐ.அஹ்மத் முஸ்தஃபா ஆகியோர் ஒருங்கிணைப்பில், மன்ற அங்கத்தினர் செய்திருந்தனர்.
விழாவின் அனைத்து படக்காட்சிகளையும் காண இங்கே சொடுக்குக! |