இவ்வாண்டு ரமழான் மாத துவக்கத்தை முன்னிட்டு, வட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு, காயல்பட்டினம் கற்புடையார் பள்ளி வட்டம் கடற்கரை முஹ்யித்தீன் பள்ளியில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு 31.07.2011 அன்று மாலை 05.30 மணிக்கு நடைபெற்றது.
பள்ளியின் இமாம் அரபி அமானுல்லாஹ் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ‘நோன்பின் மாண்பு‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ரமழான் மாதத்தின் சிறப்புகள், இம்மாதத்தில் செய்ய வேண்டியவை - செய்யக் கூடாதவை, பசித்திருப்பதின் நன்மைகள், துஆ இறைஞ்சுவதன் சிறப்பு, தஹஜ்ஜத் தொழுகையின் சிறப்பு, சிறுவர் - சிறுமியரை நோன்பு நோற்க பழக்கப்படுத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தனதுரையில் விளக்கிப் பேசிய அவர், மஃரிப் தொழுகைக்கான அழைப்பொலி (பாங்கு) ஒலிப்பதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னரே, அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு பெண்கள் துஆ கேட்பதில் ஆர்வம் காண்பிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்கரை முஹ்யித்தின் பள்ளி வட்டார பொதுமக்கள் கலந்துகொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய். |