தமிழகத்தின் பல இடங்களிலும் இன்றிரவு ரமழான் தலைப்பிறை காணப்பட்டதால், நாளை (ஆகஸ்ட் 02) ரமழான் துவக்க நாள் என, காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் சற்று முன் நடைபெற்ற நகர உலமாக்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரமழான் துவக்கம், நோன்புப் பெருநாள், ஹஜ் பெருநாள் கொண்டாட்டங்களுக்கான தேதிகளை பிறை பார்க்கப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியில் ஓராண்டும், ஜாவியா அரபிக்கல்லூரியில் ஓராண்டும் நகரின் மார்க்க அறிஞர்கள் (உலமாக்கள்) ஒன்றுகூடி, கலந்தாலோசனை செய்து முடிவுகளை அறிவிப்பது வழமை.
அந்த அடிப்படையில் இவ்வாண்டு ரமழான் துவக்க தினத்தை முடிவு செய்திடும் பொருட்டு காயல்பட்டினம் ஜாவியா அரபிக்கல்லூரியில் இன்று (01.08.2011 திங்கட்கிழமை) இரவு 07.00 மணிக்கு, நகர அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாக்களின் (மார்க்க அறிஞர்களின்) கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு, காயல்பட்டினம் மவ்லவீ ஹாஃபிழ் கத்தீப் கே.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் ஃபாஸீ தலைமை தாங்கினார்.
கூட்டத்தில், ரமழான் தலைப்பிறை பார்க்கப்பட்ட தகவல்கள் தமிழகமெங்கிலிருந்தும் சேகரிக்கப்பட்டது. இறுதியில், திருநெல்வேலி, கோவை, திருச்சி மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் ரமழான் தலைப்பிறை தென்பட்டதை உறுதி செய்து, இன்று ரமழான் பிறை ஒன்று என்றும், நாளை ரமழான் முதல் நோன்பு நோற்கப்படும் என்றும் உலமாக்களால் ஏகமனதாக அறிவிக்கப்பட்டது.
இறுதியாக, மஹ்ழரா அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் மவ்லவீ எஸ்.டி.அம்ஜத் அலீ மஹ்ழரீ துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில், மவ்லவீ ஹாஃபிழ் கலீஃபத்துல் குலஃபா முத்துவாப்பா ஃபாஸீ, அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியின் கத்தீபும், ஜாவியா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மவ்லவீ எஸ்.எம்.முஹம்மத் ஃபாரூக் அல்ஃபாஸீ, அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரியின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ, ‘முத்துச்சுடர்‘ என்.டி.எஸ்.முஹம்மத் ஸாலிஹ் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஃபாஸீ, மவ்லவீ ஹாஃபிழ் ஏ.கே.அபூ மன்ஸூர் மஹ்ழரீ, மவ்லவீ ஹாஃபிழ் என்.ஹாமித் பக்ரீ மன்பஈ, மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ மற்றும் ஜாவியா அரபிக்கல்லூரி, மஹ்ழரா அரபிக்கல்லூரி உலமாக்களும், நகர உலமாக்களும் திரளாகக் கலந்துகொண்டனர். ஜாவியா வெளிவளாகத்தில், நகர பொதுமக்களும் திரண்டிருந்தனர்.
தகவல்:
மவ்லவீ A.K.அபூ மன்ஸூர் மஹ்ழரீ.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய்,
காயல்பட்டினம்.
செய்தி திருத்தப்பட்டுள்ளது. படங்கள் இணைக்கப்பட்டுள்ளன. |