அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர ஆபரேட்டர்களுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலவச சேனல்களுடன், கட்டணச் சேனல்களுக்கான சிக்னல்களும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு உயிர் கொடுத்து அதைச் செயல்பட வைப்பதற்கான பணிகளில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, கேபிள் டி.வி. நிறுவனத்துக்குத் தனியாக தலைவர் நியமிக்கப்பட்டார். ஐ.ஏ.எஸ். அந்தஸ்துள்ள அதிகாரிதான் இதுவரை தலைவர் பொறுப்பு வகித்து வந்தார்.
ஆனால், முதல் முறையாக கேபிள் டி.வி., நிறுவனத்துக்கு அதிமுக பிரமுகரான ராதாகிருஷ்ணன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்டவாரியாக தகவல்களைத் திரட்டி வருகிறார்.
ஆபரேட்டர்களுக்கு அழைப்பு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் இப்போது ஆயிரத்துக்கும் குறைவான ஆபரேட்டர்களே உள்ளனர். அவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி, கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஆபரேட்டர்களைச் சேர்ப்பதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. 29ஆம் தேதி முதல் அரசு கேபிள் டி.வி. இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து அவற்றை ஆகஸ்ட் 03ஆம் தேதிக்குள் அளிக்க வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் இணையும் ஆபரேட்டர்களுக்கு இலவச சேனல்களுடன் கட்டண சேனல்களும் அளிக்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
உள்ளூர் சேனல்களை மூட உத்தரவு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை அமல்படுத்த அரசு தீவிரமாகி வரும் நிலையில், சென்னையைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் இயங்கிவரும் உள்ளூர் சேனல்களை மூடுவதற்கு அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதிகளவில் இந்தச் சேனல்கள் இருந்தால் அவற்றை அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்குள் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்படும் எனத் தெரிகிறது.
அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தை சுமூகமாக நடத்துவதற்கு வழிவகை செய்யும் விதமாக உள்ளூர் சேனல்கள் மூடப்படும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஓரிரு மாதங்களில் செயல்பாடு: அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தைச் செயல்பட வைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ஓரிரு மாதங்களில் அவை முழுமையான செயல்பாட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான சட்ட மசோதா வரவிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரில் கொண்டு வரப்படும் எனவும் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக, அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் ஆபரேட்டர்களைச் சேர்க்க அரசு தயாராகி விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி:
தினமணி (28.07.2011) |