சிறப்புத் தகுதி மதிப்பெண் பெற்ற காயல்பட்டினத்தைச் சார்ந்த ஏழை-எளிய மாணவர்கள் பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் சேர பொருளாதார உதவி புரிவதைக் குறிக்கோளாய்க் கொண்டு ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் காயல்பட்டினம் மாணவர் நலச் சங்கம் (கஸ்வா) அமைப்பின் சார்பில், இம்மாதம் 24ஆம் தேதியன்று, காயல்பட்டினம் ஜலாலிய்யா நிக்காஹ் மஜ்லிஸில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். உள்ளிட்ட இந்திய சிவில் சர்வீஸ் படிப்புகளுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
11ஆம், 12ஆம் வகுப்பு மாணவ-மாணவியர் மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்காக நடத்தப்பட்ட இம்முகாமை எல்.கே.மேனிலைப்பள்ளி மாணவர் ஹாஃபிழ் எம்.எம்.எஸ்.ஜிந்தா இஃப்ஹாமுத்தீன் கிராஅத் ஓதி துவக்கி வைத்தார். கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஷகீல் அஹ்மத் அனைவரையும் வரவேற்றார். உள்ளூர் பிரதிநிதி ஹாஃபிழ் எம்.ஐ.யூஸுஃப் ஸாஹிப் கஸ்வா அமைப்பு குறித்து அறிமுகவுரையாற்றியதோடு, நிகழ்ச்சிகளையும் நெறிப்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையின் செயலாளர் ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் வாழ்த்துரை வழங்கினார். பின்னர், காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (கே.எஸ்.ஸி.) செயலாளர் பேராசிரியர் ஹாஜி கே.எம்.எஸ்.சதக்கு தம்பி, சிறப்பு விருந்தினர்கள் குறித்து அறிமுகவுரையாற்றினார்.
பின்னர், இந்திய சிவில் சர்வீஸ் படிப்புகளில் முஸ்லிம் மாணவர்கள் ஆர்வப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்ற கருத்தின் அடிப்படையில், பாளையங்கோட்டை ஸதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் முதல்வர் முனைவர் எம்.முஹம்மத் ஸாதிக் உரையாற்றினார்.
அவரைத் தொடர்ந்து, ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் படிப்புகளில் இந்திய முஸ்லிம்களின் நடப்பு நிலை குறித்தும், சிவில் சர்வீஸ் படிப்புகள் இலகுவானதே என்ற கருத்திலும், இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சென்னை க்ரஸெண்ட் ஐ.ஏ.எஸ். கல்வி வழிகாட்டு மையத்தின் இயக்குனர் முனைவர் ஐ.முஹம்மத் பிலால், அசைபட உருப்பெருக்கி துணையுடன் உரையாற்றினார்.
அடுத்து, சிவில் சர்வீஸ் படிப்புகள் பற்றிய தகவல்கள், முஸ்லிம் சமுதாயம் அக்கல்வியைப் பயில வேண்டியதன் அவசியம், இக்கல்விக்காக முஸ்லிம் சமுதாய மாணவர்களுக்கு பல்வேறு இடங்களிலும் கிடைக்கப்பெறும் வழிகாட்டுதல்கள் மற்றும் பயிற்சி வகுப்புகள், இப்படிப்புகளுக்கான கல்வித்தகுதி, அதற்கு விண்ணப்பிக்கும் முறைமைகள் குறித்து, இம்முகாமில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட - சென்னையிலுள்ள தென்னிந்திய ரெயில்வே பிரிவின் முதன்மைக் கணக்கு அதிகாரியும், நிதி ஆலோசகருமான ஹபீப் சுல்தான் முஸத்திக் உரையாற்றினார்.
பின்னர் கேள்வி நேரத்தின்போது, முகாமில் கலந்துகொண்ட மாணவ-மாணவியர் மற்றும் பார்வையாளர்கள், இந்திய சிவில் சர்வீஸ் படிப்புகள் பற்றிய பல்வேறு சந்தேகங்களைக் கேட்டு விளக்கம் பெற்றனர்.
பின்னர், சிறப்பு விருந்தினர்களுக்கு கஸ்வா அமைப்பின் சார்பில் நகரப் பிரமுகர்கள் நினைவுப்பரிசுகள் வழங்கி, சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, இந்நிகழ்ச்சி சிறப்புற நடைபெறுவதற்காக நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு ஒத்துழைப்புகளை வழங்கிய அனைவருக்கும் கஸ்வா சார்பில் சால்வை அணிவித்து கண்ணியப்படுத்தப்பட்டது.
இறுதியாக, கஸ்வா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் எஸ்.எம்.எஸ்.செய்யித் அஹ்மத் நன்றி கூற, துஆவுடன் முகாம் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன.
முகாமில், காயல்பட்டினம் நகரின் அனைததுப் பள்ளிகளிலிருந்தும் திரளான மாணவ-மாணவியரும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை, உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கம் மேற்கொண்டது.
முகாம் நிறைவுற்ற பின், இந்திய சிவில் சர்வீஸ் (ஆட்சிப்பணி) படிப்புகளில் தனியார்வம் கொண்ட மாணவ-மாணவியருக்கென அன்று மாலை 05.00 மணிக்கு இக்ராஃ கூட்ட அரங்கில் பிரத்தியேக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்கள் இருவரும் மாணவ-மாணவியருக்கு பல்வேறு ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் வழங்கினர்.
காயல்பட்டினம் நகரிலிருந்து இந்திய சிவில் சர்வீஸ் படிப்புகளுக்கு சில மாணவர்களையாவது ஆர்வப்படுத்தி படிக்கச் செய்ய வேண்டும் என்ற கஸ்வாவின் முக்கிய குறிக்கோளை அடைந்திட கூடுதல் முனைப்பு காட்டப்படும் என கஸ்வா நிர்வாகக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |