இவ்வாண்டு ரமழான் மாத துவக்கத்தை முன்னிட்டு, வட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திடும் பொருட்டு, காயல்பட்டினம் காயிதேமில்லத் நகரில் புதிதாகக் கட்டப்பட்டு, அண்மையில் திறப்பு விழா கண்ட பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளியில் மார்க்க சிறப்பு சொற்பொழிவு 31.07.2011 அன்று இரவு 07.00 மணிக்கு நடைபெற்றது.
பள்ளியின் இமாம் அரபி ஹாஃபிழ் ஷெய்க் அலீ மவ்லானா கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ ஹாஃபிழ் எஸ்.செய்யித் அப்துர்ரஹ்மான் தங்ஙள் அஹ்ஸனீ ஃபாழில் பாக்கவீ, ‘நோன்பின் மாண்பு‘ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
ரமழான் மாதத்தின் சிறப்புகள், பிறை பார்க்கும் விஷயத்தில் நபிகளார் காட்டிய நடைமுறைகள், நபிவழி நின்று ஒற்றுமை பேண வேண்டியதன் அவசியம், இந்த நோன்பு காலத்தில் ஐவேளைத் தொழுகைகளையும் அவ்வல் ஜமாஅத்துடன் தொழ உறுதியெடுத்தல், கை, கால், கண், வாய், செவி கொண்டு விலக்கப்பட்ட (ஹராமான) எந்தக் காரியத்தையும் செய்யாதிருத்தல் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து தனதுரையில் அவர் விளக்கிப் பேசினார்.
துஆ, ஸலவாத்துடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிவாசல் சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
களத்தொகுப்பு:
M.W.ஹாமித் ரிஃபாய். |