விரைவில் நடைபெறுமென எதிர்பார்க்கப்படும் உள்ளாட்சித் தேர்தலின்போது, காயல்பட்டினம் நகர மக்களுக்கு நகர்மன்றத் தேர்தல் நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக துவக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது MUNICIPAL ELECTION GUIDANCE ASSOCIATION - MEGA எனும் ‘நகர்மன்றத் தேர்தல் வழிகாட்டு அமைப்பு‘.
செப்டம்பர் 8 அன்று நடந்த காயல்பட்டணம் முஸ்லிம் ஐக்கிய பேரவையின் ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து - மெகா அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
நிறைவான அருளன்பின் இறைஏகன் திருப்பெயரால்!
அன்புநிறை காயல் சொந்தங்களே! அஸ்ஸலாமுஅலைக்கும்!
நல்லதோர் நகர் மன்றம் உருவாக வேண்டும் என்ற உறுதியோடு,கடந்த ஆகஸ்ட் மாதம் MEGA என்னும் தேர்தல் வழிகாட்டும் குழுவை அமைத்து, அறிவித்து களப்பணியும் ஆற்றி வருகிறோம். இதே குறிக்கோளுடன் வேறுசில அமைப்புகளும் தேர்தலுக்கு பல வாரங்கள் முன்பே பணியாற்றத் துவங்கி இருப்பதும் மிகுந்த மகிழ்ச்சிக்கும்,பாராட்டுக்கும் உரிய செய்தியாகும்.
கடந்த எட்டாம் தேதி அன்று, முஸ்லிம் ஐக்கியப் பேரவை கூட்டம், ஜலாலியாவில் கூட்டப்பட்டு, நிறைவேற்றப்பட்ட பதினோரு தீர்மானங்களையும் அறிந்தோம். அதன் பல்வேறு தீர்மானங்களை MEGA மனப்பூர்வமாக வரவேற்கிறது.
குறிப்பாக, தீர்மானம் ஐந்து, ஆறு, ஏழு ஆகியன உறுப்பினர்களை அந்தந்த ஜமாஅத்தே தேர்ந்தெடுக்க வலியுறுத்தும் MEGAவின் அடிப்படைக் கொள்கையை வலியுறுத்துகிறது.
பத்தாவது தீர்மானமாக வடிக்கப்பட்டிருக்கின்ற, அரசியல்வாதிகள் கட்சி சார்பில் போட்டியிடுவதை தவிர்ப்பதற்கு வழிவகை செய்யும் தீர்மானம் மிகவும் பாராட்டுக்குரியது.
அதே நேரத்தில் நான்காவது தீர்மானம், இருபத்து எட்டாயிரம் வாக்காளர்களின் மனநிலை மற்றும் ஜனநாயக உரிமையை, நூறு பேர்கொண்ட ஒரு குழு முடிவு செய்யும் என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய விஷயமாகும்.
அது மாத்திரமல்ல. ஜமாஅத்களில் சிறிதென்றும், பெரிதென்றும் நமதூரில் இருக்கிறது. சில ஜமாஅத்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட
பள்ளிகளும் இருக்கிறது. அப்படியிருக்க ஒரு ஜமாஅத்திற்கு இரண்டு பிரதிநிதிகள் என்பது பல்வேறு கேள்விகள் எழுவதற்கு வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
அதுபோல, சமூக அமைப்புகளுக்கு பிரதிநித்துவம் வழங்கப்படுவதாக சொல்வது, பலவித சர்ச்சைகளை உண்டாக்கும். நமதூரின் பெரும்பான்மையான சமூக அமைப்புகள் ஏதோ ஒரு பள்ளியை அல்லது ஜமாஅத்தை சார்ந்தே இருக்கிறது. அப்படியிருக்க, தனிப்பட்ட முறையில் சங்கங்களுக்கு
பிரதிநித்துவம் என்பது புதுப்புது அதிகார மையங்களை உண்டாக்கிவிடக்கூடும். இது ஜமாஅத்களுக்கு பலம் சேர்ப்பதைத் தடுத்து மாறாக பலவீனம் அடையச் செய்துவிடும்.
இறுதியாக, நகரின் அனைத்து ஜமாஅத்களின் கூட்டமைப்பாக விளங்கும் ஐக்கியப்பேரவை, ஜமாஅத்களுக்கும், சங்கங்களுக்கும் பிரதிநித்துவம் வழங்கிவிட்டு, 25 தனிநபர்களை தானே தேர்ந்தெடுத்து பிரதிநித்துவம் வழங்குவதாகக் கூறுவது, பல்வேறு சந்தேகங்களுக்கு
வழிவகுப்பதால், நாங்கள் அதனை அறவே ஏற்கவில்லை என்பதை பணிவுடன் தெரிவிக்கிறோம்.
நகர மக்களின் உரிமையை தனிநபர் ஆதிக்கம் தடுத்துவிடாமல் இருக்க, நாங்கள் பெரிதும் மதிக்கின்ற பேரவையின் மரியாதைக்குரிய பெரியவர்கள், இருபத்து ஐந்து தனி நபர்களுக்கு பிரதிநித்துவம் வழங்கும் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யவேண்டுமாறு பணிவுடன்
வேண்டுகிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
கவிமகன் காதர்,
செய்தித் தொடர்பாளர், MEGA. |