பிரபல புற்றுநோய் நிபுணரும், சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா அவர்கள் - அக்டோபர் 01 அன்று - காயல்பட்டினம் வருகிறார். அவரைக் கொண்டு நகரில் புற்றுநோய் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Cancer Fact Finding Committee - CFFC சார்பில் அன்றைய தினம் காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரை வரவேற்று கத்தர் காயல் நல மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லையில்லா வல்லமையின் அல்லாஹ்வின் திருப்பெயரால்!
மருத்துவ மாமேதையே வருக!
புற்று என்னும் உயிர்க்கொல்லி நோய், காயல் மாநகரை வளைத்து வளைத்து தாக்கிய தருணம்...
இதன் கொடூரத் தாக்குதல் பச்சிளங்குழந்தைகளைக் கூட விட்டு வைக்காமல், கோரத்தாண்டவம் ஆடிய நிலையில், புற்றென்னும் அரக்கனை காயல் மாநகரிலிருந்து எப்படியேனும் விரட்டியடிக்க
வேண்டும் என்று 2009ஆம் ஆண்டு, தனது பதின்மூன்றாவது செயற்குழுக் கூட்டத்தில், கத்தர் காயல் நலமன்றம் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியது. ‘புரிந்து கொள்வோம், புற்று நோயைக் கொல்வோம்‘ என்ற தாரக மந்திரத்துடன், கத்தர் நலமன்றம் இறையருளால் தனது களப்பணியை காயல்மாநகரில் துவக்கியது.
அன்றைய தினம் எமது மன்றம், மருத்துவ மாமேதை சாந்தா அம்மையார் அவர்களை அணுகி
எங்களுடைய களப்பணிக்கு ஆதரவை கோரியும், நமது நகருக்கு வருகை தருமாறும் அன்பு
வேண்டுகோள் விடுத்தது. அந்தச் சூழலில், உடல் நலம் குன்றியிருந்த அம்மையார் அவர்கள்,
இன்னொரு சந்தர்ப்பத்தில் காயலுக்கு வருவதாக உறுதியளித்து, நல்ல பல ஆலோசனைகளை
வழங்கி, எங்களது பணிசிறக்க வாழ்த்தினார்கள்.
இறையருளால், அந்த மாமேதை அம்மையார் அவர்கள் பல நல்லவர்களின் முயற்சியால் 01.10.2011 அன்று காயலுக்கு வரவிருப்பதை அறிந்து, எமது மன்றம் மிகுந்த உவகையுடன் அவர்களை வருக, வருக என வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறது.
இப்படி ஒரு மகத்தான பணியைத் துவங்கிய காலத்தில், எங்களுடன் தோளோடு தோள்நின்ற ஹாங்காங் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்கள், காயல் சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள், திருச்சி ரோஸ் கார்டன் நிறுவனர் மருத்துவப் பெருந்தகை திரு.கோவிந்தராஜன் குழுவினர், மதிப்பிற்குரிய கே.எம்.டி.மருத்துவ அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் எம்மோடு ஒத்துழைத்து உழைத்த அனைத்து நல்லவர்களையும், நன்றியுடன் பாராட்டுகிறோம்.
அதன் தொடர்ச்சியாக CFFC என்னும், புற்றுநோய்க்கு எதிரான மகத்தான அமைப்பைத் துவங்கி நல்ல
பல ஆய்வுப்பணிகள் நடப்பதற்கு காரணமாக இருந்த ஜனாப்.சாளை சலீம், ஜனாப்.ஃபாஜுல் கரீம் மற்றும் குழுவினரை நிறைந்த நன்றியுடன் பாராட்டுகிறோம்.
இன்ஷாஅல்லாஹ் எதிர்வரும் செப்டம்பர் 25ஆம் நாள், ஞாயிற்றுக்கிழமை அன்று கே.எம்.டி. மருத்துவமனையில் கத்தர் மற்றும் ஹாங்காங் காயல் நல அமைப்புகள் இணைந்து நடத்தும் இலவசப் புற்றுநோய் பரிசோதனையில் கலந்து பயன் பெறுமாறு நகர மக்கள் அனைவரையும். கத்தர் காயல் நலமன்றம் அன்புடன் வேண்டுகிறது. வல்லவன் அருளோடு, வள்ளல் நபி ஆசியுடன்
நமது நகர மக்களை, இந்த கொடியநோய் அண்டாதிருக்க, இருகரமேந்தி துஆ செய்வோமாக!
இவ்வாறு கத்தர் காயல் நல மன்றம் தனதறிக்கையில் தெரிவித்துள்ளது
தகவல்:
முஹம்மத் யூனுஸ்,
துணைத் தலைவர்,
கத்தர் காயல் நலமன்றம். |