தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் விஜய் தொலைக்காட்சி உள்பட ஸ்டார் நிறுவனத்தின் அனைத்துக் கட்டணச் சேனல்களும் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தச் சேனல்களை மாதம் ரூ.70 கட்டணத்திலேயே சந்தாதாரர்கள் பார்க்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கேபிள் டி.வி. இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோக நிலை ஏற்படுத்தப்பட்டு, அதன் மூலம் பொதுமக்களிடம் இருந்து அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இதைக் கருத்தில் கொண்டு, கேபிள் டி.வி. நிறுவனத்தின் நடவடிக்கையைப் புனரமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழக அரசு மேற்கொண்டது.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மூலம், சென்னை நீங்கலாக ஏனைய 31 மாவட்டங்களிலும் நிறுவப்பட்டுள்ள ஒளிபரப்பு மையங்களை 24 மணி நேரமும் பராமரிக்கவும், ஒளிபரப்புச் சேவையை தங்குதடையின்றி மக்களுக்கு வழங்கவும் தமிழக அரசால் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பின் மூலம் 90 சேனல்களை ஒளிபரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் சேவையை, கடந்த 2-ம் தேதி தொடங்கி வைத்தார் முதல்வர் ஜெயலலிதா.
முதல் கட்டமாக இந்த நிறுவனத்தின் சார்பில் இலவசச் சேனல்கள் அளிக்கப்பட்டு வருகின்றன. கட்டணச் சேனல்களைப் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கெனத் தனியாக விலை நிர்ணயக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் தலைவர், தமிழக அரசின் நிதித்துறை (செலவினங்கள்) செயலாளர், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர், உள்துறை கூடுதல் செயலாளர், தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் உள்ளனர்.
இந்தக் குழுவினர் சம்பந்தப்பட்ட கட்டணச் சேனல்களின் நிர்வாகங்களுடன் பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளனர்.
இதையடுத்து விஜய் டி.வி. உள்பட ஸ்டார் குழுமத்தின் அனைத்துச் சேனல்களும் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளன.
அதன்படி செவ்வாய்க்கிழமை முதல் விஜய், ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளாநெட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏ.எக்ஸ்.என்., எச்.பீ.ஓ., நேஷனல் ஜியோகிரபிக், என்.டி.டி.வி., சி.என்.என்., டைம்ஸ் நௌவ், ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்டச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படும்.
கட்டணச் சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டாலும், வாடிக்கையாளர்களிடம் இருந்து மாதக் கட்டணமாக ஏற்கெனவே வசூலிக்கப்பட்டு வரும் ரூ.70 மட்டுமே வாங்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளது.
சன் குழுமச் சேனல்களும், ராஜ் குழுமச் சேனல்கள் மட்டுமே தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி.யில் இடம்பெற வேண்டிய முக்கியக் கட்டணச் சேனல்கள் ஆகும். இந்தச் சேனல்களைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், ஓரிரு வாரங்களில் அந்தச் சேனல்களும் தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் சேர்க்கப்படும் என அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல்:
தினமணி |