காயல்பட்டினம் பைபாஸ் ரோட்டில் உச்சினிமாகாளியம்மன் கோயில் தெரு உள்ளது. இத்தெருவிலிருந்து நீண்ட தூரத்தில் உள்ள காலி இடத்தை இப்பகுதி மக்கள் மயானமாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மயானத்திற்கு செல்லும் வழியில் மயான சாலை என குறிப்பிட்டு கல்லால் ஆன 3 பலகை வைத்திருந்ததாகவும், இதில் 2 கல் பலகைகளை நள்ளிரவில் சேதப்படுத்தப்பட்டதாகவும் கூறி உச்சினிமாகாளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் காலையில் நடுரோட்டில் திரண்டனர். பஸ் மறியல் செய்ய போவதாக அறிவித்தனர்.
இதுகுறித்து தகவலறிந்தும் திருச்செந்தூர் தாசில்தார் வீராசாமி, வருவாய் ஆய்வாளர் சுரேஷ், விஏஒ செல்வலிங்கம், ஆத்தூர் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அங்கு போராட்டம் நடந்த முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது மயான சாலை என குறிப்பிட்டு வைக்கப்பட்ட கல்பலகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அதே இடத்தில் மயான சாலை என குறிப்பிட்டு பெயர் பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து உடைக்கப்பட்ட கல் பலகையை தாசில்தார் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பேச்சுவார்த்தையில் தாசில்தார வீராசாமி, வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிட்ட இடத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிந்து, மயான சாலை என குறிப்பிட்டிருந்தால் அதே இடத்தில் பெயர் பலகை வைக்கப்படும். அப்படி இல்லை என்றால் கல் பலகை அகற்றப்படும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்கள் கலைந்த சென்றனர்.
இந்த பேச்சுவார்த்தையில் உச்சினிமாகாளியம்மன் கோயில் ஊர்கமிட்டி தலைவர் ராஜேந்திரன், செயலாளர்கள் ராஜ்குமார், அருணாசலம், பொருளாளர் ஜெயகுமார், கவுன்சிலர் கணேசன் பால்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புகைப்படம்/தகவல்:
www.tutyonline.net
|