தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் தேதிகள் இன்று இரவு அறிவிக்கப்பட்டன. இதனை சென்னையில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் தலைவர் சோ ஐயர் அறிவித்தார்.
தேர்தல்கள் இரண்டு கட்டமாக நடைபெறும். 9 மாநகராட்சிகளுக்கும், 60 நகராட்சிகளுக்கும், 259 பேரூராட்சிகளுக்கும், 191 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் முதல் கட்டத்தில் 17.10.2011 அன்று வாக்குபதிவு நடைபெறும்.
65 நகராட்சிகளுக்கும், 270 பேரூராட்சிகளுக்கும், 194 ஊராட்சி ஒன்றியங்களுக்கும் இரண்டாம் கட்டத்தில் 19.10.2011 அன்று வாக்குபதிவு நடைபெறும்.
இரண்டாம் நிலை நகராட்சியான காயல்பட்டினம் - அக்டோபர் 17 அன்று தேர்தலை சந்திக்கும். காயல்பட்டின நகர்மன்றத்தில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. மேலும் - நகர்மன்ற தலைவர் நேரடியாக தேர்வுசெய்யப்பட உள்ளார்.
இம்முறை - நகர்மன்ற தலைமை பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் (செப்டம்பர் 22) விண்ணப்பங்கள் பெறப்படும். செப்டம்பர் 29 - வேட்பாளர் மனு சமர்ப்பிக்க இறுதி நாள். செப்டம்பர் 30 அன்று - மனுக்கள் பரிசீலிக்கப்படும். மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3 - இறுதி நாள்.
வாக்குகள் எண்ணிக்கை - அக்டோபர் 21 அன்று நடைபெறும். அக்டோபர் 25 அன்று புதிய உள்ளாட்சிகளின் முதல் கூட்டங்கள் நடைபெறும். துணைத்தலைவர் தேர்வு - அக்டோபர் 29 அன்று நடைபெறும்.
திருச்சி மாநகராட்சியுடன் திருவெறும்பூர் பேரூராட்சியை இணைத்தது தொடர்பான அரசாணையை ரத்து செய்து இன்று உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. அதனை தொடர்ந்தே தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகராட்சிக்கான தேர்தல் பின்னர் நடத்தப்படும் என தெரிகிறது.
மாநகராட்சி/நகராட்சி தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு நடைபெறும்.
[செய்தி திருத்தம்:] காயல்பட்டின நகர்மன்ற தேர்தல் - முதல் கட்டத்தில் - அக்டோபர் 17 அன்று நடைபெறும். ஆரம்ப தகவல்கள் அடிப்படையில் - அக்டோபர் 19 இல் நடைபெறும் என முதலில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. |