பிரபல புற்றுநோய் நிபுணரும், சென்னை அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவருமான டாக்டர் வி.சாந்தா - அக்டோபர் 01 அன்று - காயல்பட்டினம் வருகிறார். அவரைக் கொண்டு நகரில் புற்றுநோய் குறித்த கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Cancer Fact Finding Committee - CFFC சார்பில் அன்றைய தினம் காயல்பட்டினம் கே.எம்.டி.மருத்துவமனையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அவரது வருகையின்போது, தம் மன்றங்கள் சார்பில் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டுள்ள புற்றுநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு செயல்திட்டங்கள் மற்றும் விபரக் குறிப்புகளைப் பகிர்ந்து ஒத்துழைப்பளிப்பது குறித்தும், நடப்பாண்டில் இக்ராஃவைக் கொண்டு செய்து முடிக்கப்பட வேண்டிய கல்வித் துறை செயல்திட்டங்கள் குறித்தும் விவாதிப்பதற்காக, சஊதி அரபிய்யா - ஜித்தா, ரியாத் காயல் நற்பணி மன்றங்களின் கூட்டுக் கலந்தாலோசனைக் கூட்டம், 06.09.2011 அன்று காலையில், ரியாத் காயல் நற்பணி மன்ற தலைவர் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ தலைமையில், உலக காயல் நல மன்றங்களின் கல்வித்துறைக் கூட்டமைப்பான காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்க கூட்ட அரங்கில் நடைபெற்றது.
நடப்பு கல்வியாண்டில் இக்ராஃவின் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவ-மாணவியர், அவர்களுக்காக பெறப்பட்டுள்ள உதவித்தொகை அனுசரணைகள், இக்ராஃவின் நிர்வாகச் செலவினங்கள் குறித்து, இக்ராஃ நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மதிடம் விளக்கம் பெறப்பட்டது.
இக்ராஃவின் செயல்பாடுகள் மற்றும் சேவைகள் முழுமையான - தங்குதடையற்ற - தொய்வில்லாத முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமானால், அதன் நிர்வாகச் செலவினங்களை அனைத்துலக காயல் நல மன்றங்கள் முழுமையாக ஏற்றே ஆக வேண்டும்... அவ்வாறு செய்யாத வரை, செயல்திறன் மிக்க இக்ராஃவின் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி கூஸ் எஸ்.ஏ.டி.அபூபக்கர் வலியுறுத்திப் பேசியதோடு,
சஊதி அரபிய்யாவின் தம்மாம், ரியாத், ஜித்தா காயல் நற்பணி மன்றங்கள் ஒருங்கிணைந்து, இக்ராஃ கல்விச் சங்கம் மூலம் செயல்படுத்திய - நகரில் புற்றுநோய் பாதிப்பு குறித்த தகவல் சேகரிப்பு (கேன்சர் சர்வே) விபரங்கள், அதன் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் மேல் நடவடிக்கைகள் குறித்தும் விளக்கிப் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, வரும் அக்டோபர் 01ஆம் தேதியன்று, புகழ்பெற்ற சென்னை - அடையாறு புற்றுநோய் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் சாந்தா நெல்லை வரவிருப்பதாகவும், அவ்வமயம் காயல்பட்டினத்திற்கும் அவர் வந்து செல்ல வேண்டுமென சென்னை - தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மத் கேட்டுக்கொண்டதனடிப்படையில் அவர் காயல்பட்டினம் வரவுள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன், அவரது வருகையை, நகரின் புற்றுநோய் தடுப்பு முயற்சிகளுக்கு எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளலாம் என கூட்டத்தில் நீண்ட நேரம் விவாதிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் செயலாளர் எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், சென்னை - தி.நகர் எல்.கே.எஸ். கோல்டு ஹவுஸ் அதிபர் ஹாஜி எஸ்.செய்யித் அஹ்மதுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
அவருடன் பேசிப்பட்ட அம்சங்களின் அடிப்படையில், கேன்சர் சர்வே உள்ளிட்ட - காயல் நல மன்றங்களின் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு - தடுப்பு - விபர சேகரிப்பு உள்ளிட்டவற்றை அடிப்படையாகக் கொண்டு அறிக்கை ஒன்றை ஆயத்தம் செய்து டாக்டர் சாந்தாவிடம் சமர்ப்பிப்பதென தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டதில், ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் ஹாஜி எம்.இ.எல்.நுஸ்கீ, கூஸ் எஸ்.ஏ.டி.அபூபக்கர், ஏ.டி.ஸூஃபீ, எம்.என்.ஹஸன், வி.எம்.ஏ.அமீன், இஸ்மாஈல், எச்.ஏ.உமர் ஃபாரூக் ஃபாஸீ, பி.எஸ்.ஜே.ஜெய்னுல் ஆபிதீன் ஆகியோரும்,
ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் சார்பில், எம்.ஏ.செய்யித் இப்றாஹீம், சட்னி செய்யித் மீரான், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், கே.ஏ.முஹம்மத் நூஹ், என்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர், அரபி ஷுஅய்ப், உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.எம்.இஸ்மாஈல் நஜீப் ஆகியோரும்,
இக்ராஃ கல்விச் சங்கத்தின் சார்பில் அதன் நிர்வாகி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், மக்கள் தொடர்பாளர் ஹாஜி என்.எஸ்.இ.மஹ்மூத் ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
டாக்டர் சாந்தா வருகை குறித்து கலந்தாலோசித்திடும் பொருட்டு முன்னதாக காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியிலும், அதனைத் தொடர்ந்து பிரதான வீதியிலுள்ள செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்திலும் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.
செய்யித் இப்றாஹீம் ஆலிம் கட்டிடத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஹாஜி டி.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் தலைமையேற்க, வி.ஐ.புகாரீ, எம்.எம்.ஷாஹுல் ஹமீத், எம்.டபிள்யு.ஹாமித் ரிஃபாய், டி.எஸ்.ஏ.யஹ்யா முஹ்யித்தீன், எல்.டி.இப்றாஹீம், ஜே.பி.கிதுரு முஹம்மத், எம்.என்.தாஹா, எம்.என்.சுலைமான், பி.எஸ்.ஐ.அபூபக்கர், மண்டேலா நூஹ், எம்.எம்.மூஸா, மவ்லவீ எஸ்.ஏ.கே.செய்யித் முஹம்மத் தாவூதீ ஆகியோர் கலந்துகொண்டனர்.
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய். |