கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கெதிராக அதன் சுற்றுவட்டாரங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக ஆறுமுகனேரி, காயல்பட்டினம் பகுதியில் நேற்றுடன் இரண்டாவது நாளாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் போலீஸார் தடியடி மற்றும் குலசேகரன்பட்டினம் பகுதியில் துப்பாக்கி சூட்டில் மீனவர் மரணம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் பதட்டம் நிலவியது.
இதனால் திருச்செந்தூர்-தூத்துக்குடி நெடுஞ்சாலையில் உள்ள வீரபாண்டியன் பட்டினம், காயல்பட்டினம் மற்றும் ஆறுமுகனேரி பகுதியில் போக்குவரத்து திங்கட்கிழமை மாலை முதல் பாதிக்கப்பட்டது.
மாலையில் ஆறுமுகனேரி பஜார் வரை வந்த பேரூந்துகள் மூலக்கரை, அம்மன்புரம், சோனகன்விளை வழியாக திருப்பி விடப்பட்டன.ஆறுமுகனேரி பஜாரில் அடைக்கலாபுரம் மற்றும் காயல்ரபட்டினம் சாலைகளில் தடுப்பு அமைக்கப்பட்டு போக்குவரது தடை செய்யப்பட்டிருந்தது.
நேற்றிரவு வீரபாண்டியன்பட்டினத்தில் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்செந்தூரில் பயணிகளை ஏற்ற சென்ற போது மறிக்கப்பட்டது.இதனால் ஆறுமுகனேரியில் திருநெல்வேலி-திருச்செந்தூர் பயணிகள் ரயில் சுமார் ஒரு மணி நேரம் வரை நிறுத்தி வைக்கப்பட்டது.
இரவில் பேரூந்துகள் ஆறுமுகனேரி வராமல் நல்லூர் விலக்கு, நல்லூர், அம்மன்புரம், சோனகன்விளை வழியாக திருப்பி விடப்பட்டன.
செவ்வாய்கிழமையும் ஆறுமுகனேரி, காயல்பட்டினம் வழியாக அரசு பேரூந்துகள் இயக்கப்படவில்லை.ஒரு சில தனியார் பேரூந்துகளும், காயல்பட்டினத்திற்கு மினி பேரூந்துகளும் மட்டுமே இயக்கப்பட்டன. ஆறுமுகனேரி பஜாரில் போலீஸ் பந்தோபாஸ்து போடப்பட்டுள்ளது.
|