சஊதி அரபிய்யா, ஜித்தா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் பிரதிநிதிகள் குழு சென்ற 28ஆம் தேதி வெள்ளியன்று நகர் நலப்பணிகள் குறித்து மன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்காக யான்பு சென்றிருந்தது. அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜும்ஆ தொழுகை முடித்து நிகழ்ச்சி நடைபெறவுள்ள கலவா எம்.எ.முஹம்மது அபூபக்கர் அவர்கள் இல்லத்திற்கு சென்ற ஜித்தா நற்பணிமன்றக் குழுவினர், அங்கு குழுமியிருந்த காயல் சகோதரர்களுக்கு முகமன் தெரிவித்து பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டனர்.
காயல்ஹவுஸ் என்றழைக்கப்படும் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்தாய்வுடன்கூடிய சிறப்புக் கூட்டத்திற்கு எம்.எ.முஹம்மது அபூபக்கர் முன்னிலை வகித்தார். எஸ்.எல்.முஹம்மது நூஹு தலைமை ஏற்றார். சகோ.என்.எஸ்.ஹுசைன் ஹல்லாஜ் கிராஅத் ஓதி கூட்டத்தை துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நெடு தூரம் பயணமேற்கொண்டு மேலானதொரு சேவையை மனதில் ஏந்தி இங்கு வந்திருக்கின்ற ஜித்தா கா.ந.மன்றத்தினரையும், அந்த சேவையில் நாங்களும் இணைந்து செயலாற்றுகிறோம் என்று உரக்கச்சொல்லி கிடைத்த ஓய்வினை நகர் நலனுக்காக செலவிட இங்கே வந்தமர்ந்துள்ள யான்பு சகோதரர்களையும் மனதார வாழ்த்தி வரவேற்கிறேன் என்றார் சகோ.முஹம்மது ஆதம் சுல்தான்.
அறிமுகவுரை:
ஜி.கா.ந. மன்றத் தலைவர் குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன் மன்றப்பணிகள் குறித்த சில குறிப்புக்களை அறிமுகவுரையாகத் தந்தார். அவர் தனது உரையில்: 'நம் மன்றம் என்னென்ன பணிகள் செய்து வருகிறது என்பதை தாங்கள் யாவரும் நன்கறிவீர்கள்' என்ற அவர்; 'பொதுநலப்பணிகளில் கால்பதித்த இம்மன்றம் பத்தாண்டை தாண்டியுள்ளது' என்றும், 'இந்நாட்களில் இறைவன் அருளால் இம்மன்றம் செய்த பணிகள் அளப்பரியது' என்றும், 'காரசார வாதப்பிரதிவாதங்கள் மூலம் இம்மன்றம் ஏற்றுக்கொண்ட பணிகளுக்கு எப்படி செயல் வடிவம் கொடுக்கிறது என்பதை ஒவ்வொரு செயற்குழுவிலும் காணலாம்' என்றும் கூறினார்.
மேலும் யான்புவில் பணி புரிபவரும், இம்மன்ற ஆரம்பகால நிர்வாகிகளில் ஒருவரும், நல மன்றத்தில் தம்மை வலுவாக ஐக்கியப்படுத்தியவருமான சகோ.ஹாமித் ரிஃபாயின் மெச்சத்தக்க மன்றப்பணிகளை நினைவுபடுத்திய அவர், 'உங்களின் உயரிய ஆலோசனைகளாலும், உங்களின் அன்பான ஆதரவாலும், மிக முக்கியமாக உங்களின் உன்னத சந்தாக்களினாலும் நம் மன்றம் மிகப்பெரிய சேவையை நம் நகர் மக்களுக்கு செய்து வருகிறது' என்றார்.
'யான்பு காயல் சகோதரர்களின் ஒத்துழைப்போடு நம் மன்றம் மேலும் பல பணிகளை சிறப்பாக செய்ய ஆவல் கொள்கிறது' என்றும், 'அதற்காக யான்புவில் மன்றப் பிரதிநிதிகள் கொண்ட ஒரு குழு நியமிப்பது அவசியமென்றும் கூறினார். மேலும் நம் மன்றம் மூலம் முன்னெடுக்கப்பட்டு தற்போது உலக காயல் நல மன்றங்களின் பேராதரவினால் சிறப்பாக கல்வி சேவையை செய்து வரும் 'இக்ரஃ' வின் பணிகளை கோடிட்ட அவர், அது போன்று மருத்துவத்திற்கும் 'ஷிஃபா' என்றதொரு தனி அமைப்பு தற்போது நகரில் துவக்கப்பட்டுள்ளதாகவும் அதன் மருத்துவ சேவைகள் விரைவில் நகர் மக்களுக்கு கிடைக்க விருப்பதாகவும் கூறினார்.
'இந்த இடத்தில் உங்கள் அனைவரையும் கூடிப்பார்ப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது' என்றும் கூறிய அவர், 'நம் மன்றம் செய்யும் அனைத்து நற்பணிகளுக்கும் உங்களின் அன்பும், ஆதரவும், ஆலோசனைகளும் அதிகமதிகம் தேவை மட்டுமின்றி நம் மன்றம் அதன் பணிகளை உத்வேகத்துடன் செய்ய நீங்கள் ஊக்கமளிக்குமாறும்' வேண்டி அமர்ந்தார்.
தலைமையுரை:
'நகர் மக்களுக்கு இம்மன்றம் செய்யும் உதவிகள் அறிந்து சந்தோஷமடைகிறேன்' என்றும், 'நல்லதொரு சேவையை ஆற்றிவரும் இம்மன்றம், உதவிகள் கிடைக்கப்பெற்ற பயனாளிகள் அதன் மூலம் நிவர்த்தி அடைந்துள்ளார்களா? என்று, அளித்த உதவிகளை FOLLOW UP பண்ண வேண்டும்' என்றும் கேட்டுக்கொண்டார் தலைமையுரை ஆற்றிய எஸ்.எல்.முஹம்மது நூஹு அவர்கள். மேலும் 'நம் நகர் பெண்கள் பரவலாக நுண்ணிய உயிர் கொல்லி நோய்க்கு ஆட்படுவதாகவும், அது நமக்கு மிகுந்த கவலை அளிப்பதாகவும், இது விஷயமாக நம் நகர் அமைப்புக்கள், நல மன்றங்கள் பல கோணங்களில் ஆய்வு மேற்கொண்டு பல அதிர்ச்சி தரத்தக்க செய்திகளை தந்துள்ளதாக தெரிவித்த அவர், நம்நகர் அருகாமையில் இயங்கும் ஒரு தொழிற்சாலையும் இந்த கொடிய நோய் உருவாக காரணமாக உள்ளது என்பதை நாம் மறுக்க முடியாது என்றும் கூறினார்.
'நாம் உளத்தூய்மையுடன் செய்யும் ஒவ்வொரு சேவைகளும் வல்ல அல்லாஹ்விடத்தில் மிகப்பெரும் பேற்றை பெற்றுத்தரும் என்றும், நம் நகர் சந்தித்த பெரும் இடையூறுகளெல்லாம் நாம் செய்யும் இதுபோன்ற நன்மைகள் கொண்டு அகற்றப்பட்டுள்ளது என்றும், இறுதி நபியின் சமூகத்தில் பிறந்து இவ்வாறு நற்காரியங்கள் செய்ய அல்லாஹ்வால் அனுமதி வழங்கப்பட்ட நாம் பெருமைப்பட வேண்டும் என்றும், அவ்வாறு நாம் அளிக்கும் உதவிகள், நாம் செய்யும் பணிகள் அல்லாஹ்விடத்தில் நிரந்தர நன்மையை நமக்கு அள்ளித்தரும் என்றும் கூறிய அவர், ஜித்தா நற்பணி மன்றம் மேற்கொள்ளும் அனைத்து சேவைகளிலும் யான்பு காயலர்களின் பங்களிப்பும் இருக்குமென்றும், மன்றத்தின் சேவைகள் தொடரவும், நகர் வாழ்வோர் நலம் பெறவும் யாவரும் பிரார்த்திக்குமாறு வேண்டி அமர்ந்தார்.
கருத்துரை:
# 'சில தவிர்க்க முடியாத காரணங்களாலும் ஏற்கனவே நியமிக்கப்பட்ட மன்றப் பிரதிநிதி தாயகம் சென்றுவிட்டதாலும் சகோதரர்களிடம் சந்தாக்களை பெற்று அனுப்பவதில் சிறு கால தாமதம் ஏற்பட்டுவிட்டதென்றும், இனி அது போன்று ஏற்படாமல் சந்தாக்கள் தொய்வின்றி கிடைக்க உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படுமென்றும், மன்றப்பணிகள் தடையின்றி நடந்தேற எம்மாலான அனைத்து உதவிகளையும் தர யான்பு காயல் சகோதரர்கள் தயாராக உள்ளார்கள் என்ற தனது கருத்தை தரமாகத்தந்தார் சகோ.இசட்.எ.சுல்தான் லெப்பை.
# 'உண்டாகும் உடல் நலமின்மையால்..., மேற்சென்று கற்க பலமின்மையால்..., தொழில் செய்ய களமின்மையால்... ஏற்படும் சோகங்களை மனதில் புதைத்து கண்ணீர் சிந்தும் தேவையுடையோர் நம் நகரில் இவ்வளவு பேர் உள்ளார்களா? என்ற செய்திகள் நம் நகரில் நல மன்றங்கள் தோன்றிய பிறகுதான் வெளியே தெரிகிறது' என்று தனது கருத்தை பதித்த சகோ.ஹுமாயூன் கபீர், நம்மைச் சார்ந்தோர் துயருறும்போது நாம் களத்தில் இறங்கி கரம் கொடுக்க வேண்டும் என்று நம் மார்க்கத்தில் விதியாக்கப்பட்டுள்ளது என்றும், அல்லல்படும் அண்டைவீட்டாரை, நஷ்டப்படும் நகரிலுள்ளோரை கண்டு அலட்சியமாக இருப்பது சிறந்ததல்ல என்றும், பயனாளிகள் வாழ்வு சிறக்க நாம் எவ்வளவு கொடுத்தாலும் தகும் என்றும் கூறினார்,
கல்வி புரட்சியைக்கொண்டும், மருத்துவ புரட்சியைக்கொண்டும் நாம் ஒரு பெரும் இலக்கை அடைய வேண்டும் என்றும், அதாவது நகரில் கல்லாமை இல்லாமையும், நோய் இல்லாமையும் அவசியம் ஏற்படுத்தியே தீர வேண்டும் என்றும், அதன் மூலம் நாமும் நம் வருங்கால சந்ததியினரும் சிறப்புற வாழ நாம் வழிகோல வேண்டுமென்றும் கேட்டுக்கொண்ட அவர், யான்பு வாழ் காயல் சகோதரர்களாகிய நீங்கள் பெரும் உறுதுணையாக இருந்து மன்றப்பணிகளில் பங்கெடுக்க வேண்டுமென்று கூறி தனது கருத்துரையை நிறைவு செய்தார்.
# 'ஜித்தா நல மன்றத்தின் அளப்பரிய பொது நல சேவைகள் கண்டு அகமகிழ்கிறேன்’ என்று தனது கருத்துரையை துவக்கிய சகோ.முஹம்மது ஆதம் சுல்தான், ‘மிக புன்னியமானதொரு காரியத்தை முதுகில் சுமந்துள்ள நீங்கள் ஒரு நன்னோக்கத்தில், அதாவது வெற்றிப்பாதையில் உள்ளீர்கள்’ என்றும், ‘பல வேலைப் பளுவுக்கிடையில் இப்பொதுப்பணிகளை நகர் நலன் கருதி சிரமேற்கொண்டு செய்து வரும் நீங்கள் மிகுந்த பாராட்டுக்குரியவர்கள்’ என்றும், ‘இது போன்ற பொது காரியங்களில் ஈடுபடும் சமயம் பல புதிய நுணுக்கங்கள் நமக்கு கிடைக்குமென்றும்’ கூறினார்.
‘மருத்துவ உதவி கோரும் நம் நகர் பயனாளிகளை நேரில் சென்று பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அது சமயம் பார்த்த காட்சிகள் கண்ணீரை வரவழைப்பதாக இருந்ததாகவும், அவர்களின் துயர் துடைக்க இது போன்ற நல மன்ற உதவிகள் நம் நகர் மக்களுக்கு அதிகம் தேவை’ என்றும், ‘அதற்காக நாம் யாவரும் இம்மன்றத்தின் மூலம் அதிகபட்ச உதவிகளை நம் நகர் மக்களுக்கு வழங்கவேண்டும்’ என்றும் கேட்டுக்கொண்டார்.
மேலும்; ‘கருணை உள்ளமும், கடின உழைப்பும், கனிவான பார்வையும் கொண்ட நம் சகோதரர்களால் இயக்கப்படும் இது போன்ற நல மன்றங்களை அல்லாஹ் மென்மேலும் சிறப்பாக்குவான்’ என்றும்,
‘நம்மால் முடியாதது ஒன்றுமல்ல, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்து நற்பணிகளில் இறங்கினால் நாம் மேற்கொள்ளும் அனைத்து காரியங்களையும் அவன் இலகுவாக்குவான்’ என்றும், ‘ஜித்தா சகோதரர்களோடு கரம் கோர்த்து யான்பு சகோதரர்களும் மன்றப்பணியாற்றுவார்கள்’ என்றும், இந்நல மன்றத்தின் சேவைகள் சிறப்பாக தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்களை வழங்குவதாக கூறி தனது கருத்துரையை முடித்தார்.
மன்ற செயலபாடுகள்:
மன்றசெயல்பாடுகளை ஓரிரு வரிகளில் இரத்தினச்சுருக்கமாக அறியத்தந்த சகோ.சட்னி செய்யிது மீரான்; கல்வி மற்றும் மருத்துவ உதவி கோரி இறுதியாக விண்ணப்பித்த மனுக்களில் சிலதை யான்பு சகோதரர்கள் அறியும் பொருட்டு வாசித்து காட்டினார். வின்னப்பித்தவரின் மேலதிக விபரங்கள், அம்மனுக்கள் மீதான மீள்பரிசீலனை ஏதும் தேவையிருப்பின் நம் மன்ற காயல் பிரதிநிதி சகோ.நஜீப் இஸ்மாயீல் அவர்களை தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்வோம்' என்றும் கூறிய அவர்; 'நாம் செய்யும் உதவிகளும் அதை பெற்ற பயனாளிகளும் மனமுருகி நமக்காக கேட்கும் பிரார்த்தனை தான் நமது வெகுமதி என்றும், அந்த பொன்னான வெகுமதியை நாம் அதிகம் பெறவும், நகர் மக்களுக்கு நன்மைகள் பல செய்யவும் உங்களது ஆதரவையும், அரவணைப்பையும் வேண்டியே இங்கு வந்துள்ளோம் என்று கூறி அமர்ந்தார்.
யான்பு பிரதிநிதிகள்:
மன்றப்பணிகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், கருத்து பகிர்வுகள் நடத்தவும் மற்ற இதர தேவைகளுக்கும் கண்டிப்பாக ஒரு குழு அவசியம் என கேட்டுக்கொள்ளப்பட்டதற்கு இணங்க, யான்பு மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து தங்கள் பெயர்களை பதிவு செய்தார்கள், அதன்படி
யான்பு ராயல் கமிஷன் பகுதிக்கு:
1. சகோ. சி.எஸ்.ஜாகிர் ஹுசைன்
2. சகோ. கே.பி.செய்யிது அஹ்மது
3. சகோ. என்.எஸ்.ஹுசைன் ஹல்லாஜ், என மூவரும்...,
யான்பு ஏனைய பகுதிகளுக்கு:
1. சகோ. ஹாஜி எஸ்.எல்.முஹம்மது நூஹு
2. சகோ. முஹம்மது ஆதம் சுல்தான்
3. சகோ. கலவா எம்.எ.முஹம்மது அபூபக்கர்
4. சகோ. இசட்.எ.சுல்தான் லெப்பை
5. சகோ. எம்.எ.முஹம்மது இப்ராஹீம்
6. சகோ. எஸ்.ஹெச்.அன்சாரி
7. சகோ. எம்.டபிள்யு.ஹாமீது ரிஃபாயி, என ஏழு பேரும்...
ஆக, பத்து பிரதிநிதிகள் அடங்கிய யான்பு குழு அறிவிக்கப்பட்டு, அவர்கள் விரைவில் கூடி மேற்கொண்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்க இருப்பதாகவும் சொன்னார்கள். அடிக்கடி யான்பு வந்து இதுபோன்ற கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தினால் எங்களுக்கு உற்சாகமாகவும், மன்றப்பணிகளில் நேரில் பங்கு கொண்டது போலவும் இருக்கும் என்று பல சகோதரர்கள் கேட்டுக்கொண்டனர்.
மன்றத்தின் சந்த்தாக்களை அதிகரிக்க வேண்டும், அதற்காக நாம் பயணமேற்கொண்டு நகர் மக்களை
சந்தித்து மன்றப்பணிகளை எடுத்துச்சொல்லி அவர்களையும் நம்மோடு இணைத்து செயலாற்றவேண்டும் என்று உறுப்பினர்களை ஆர்வமூட்டிய சகோ.எம்.எம்.மூஸா ஸாஹிப் யான்பு பயணத்தை துரிதமாக்குங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதன்படி அவர் தலைமையில் யான்பு பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
ஜித்தா உறுப்பினர்கள்:<
1. சகோ. எஸ்.ஹெச்.ஹுமாயூன் கபீர்
2. சகோ. குளம் எம்.எ.அஹ்மது முஹ்யித்தீன்
3. சகோ. எம்.எம்.மூஸா ஸாஹிப்
4. சகோ. சட்னி எஸ்.எ.செய்யிது மீரான்
5. சகோ. அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப்
6. சகோ. எஸ்.எம்.அய்.செய்யிது முஹம்மது சாஹிப்
7. சகோ. எம்.எஸ்.எல்.முஹம்மது ஆதம்
8. சகோ. கே.எஸ்.டி.முஹம்மது அஸ்லம்
7. சகோ. சட்னி எஸ்.எ. உமர் ஒலி, என ஒன்பது பேரும்…
மக்கா உறுப்பினர்கள்:
1. சகோ. எஸ்.ஹெச்.சீனா மொகுதூம் முஹம்மது
2. சகோ. ஒய்.எம்.முஹம்மது ஸாலிஹ்,
என இருவரும், ஆக பதினோருபேர் கொண்ட குழு யான்பு சென்றது.
நன்றியுரை:
'இந்த கலந்தாய்வு சிறப்புக்கூட்டத்தை நனி சிறப்பாக நடத்தி தந்த வல்ல ரஹ்மானை முதலில் போற்றியவனாக....! ‘தொலைவில் இருந்து வந்த எங்களுக்கு உற்சாக வரவேற்பளித்து, மனதார உபசரித்து, நிகழ்ச்சி முழுவதும் அமர்ந்து மன்றத்தின் செயல்பாடுகளை மனதில் ஏந்திய உங்கள் யாவருக்கும், மேலும்; அழகிய இட வசதியும் அருமையான மதிய உணவும் தந்து எங்கள் மீது அன்பை பொழிந்த காயல் ஹவுஸ் சகோதரர்கள் மற்றும் யான்பு காயல் கண்மணிகள் அனைவர்களுக்கும் ஜித்தா நல மன்றம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என்ற மன்றத்தின் நன்றிகளை சகோ.முஹம்மது ஆதம் தெரிவிக்க, துஆகஃப்பாராவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்!
தகவல்:
அரபி முஹம்மது ஷுஅய்ப்,
இணைச்செயலர், ஜி.கா.ந.சார்பாக
ஜித்தா.
நிழற்படங்கள்:
முஹம்மது ஸாலிஹ்,
மக்கா.
|