மக்கா, சவுதி அரேபியா - ஹஜ் கமிட்டியின் முதல் விமானம் சென்னையில் இருந்து ஜித்தாவிற்கு (02 -10 -2012 ) நேற்று வந்தடைத்தது. இதில் நமது காயல் ஹாஜிகள் சுமார் 20 பேரும் அடங்குவர். அவர்களை ஜித்தா காயல் நல மன்றத்தின் நிர்வாகிகள் சந்திந்து வரவேற்றனர். இது தொடர்பாக அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு.
ஏக இறைவனின் திருப்பெயரால்!!
அஸ்ஸலாமு அலைக்கும்!
தமிழக ஹஜ் கமிட்டியின் முதல் விமானம் சென்னையில் இருந்து 02 -10 -2012 செவ்வாய் அன்று புறப்பட்டு வல்ல இறை அருளால் ஜித்தா வந்து சேர்ந்தது. வல்லோன் அல்லாஹ்வின் விருந்தாளிகளாக நமது காயல் நகர மக்கள் சுமார் இருபது ஹாஜிகள் உள்ளடக்கிய இந்த முதல் குழுவினர் நலமுடன் புனித மக்கா வந்தடைந்து சிறப்பான முறையில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றினர், அல்ஹம்துலில்லாஹ். இவர்கள் அனைவரும் மக்காவில் ஆற்காடு நவாப் கட்டிடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
புனித மக்கா வந்திருக்கும் நமதூர் ஹாஜிகளை ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் நிர்வாகிகள்,உறுப்பிணர்கள் மற்றும் புனித மக்கா - காயல் ஹஜ் சேவை மற்றும் வழிகாட்டு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஹாஜிகள் தங்குமிடம் வந்து சந்திந்து உவகையுடன் வரவேற்றனர். ஜித்தா காயல் நற்பணி மன்றம் சார்பில் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டி கையேடு அவர்களுக்கு வழங்கப்பட்டு, அவர்களுக்கு தேவைப்படும் உதவிகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களை அவர்களின் கைபேசி மூலம் தொடர்பு கொள்ளுமாறு வேண்டிகொள்ளபட்டது. நமதூர் சகோதரர்களை சந்தித்ததில் ஹாஜிகள் தாங்கள் மகிழ்ச்சியை பரிமாரிகொண்டனர்.
இந்திய ஹஜ் கமிட்டியினர் சென்னை, ஜித்தா மற்றும் மக்காவில் செய்திருந்த ஏற்பாடுகள் மிக திருப்தி அளிப்பதாக ஹாஜிகள் மகிழ்வுடன் தெரிவித்தனர்.
தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் சென்ற வாரம் வருகை தந்த காயல் நகர ஹாஜிகள் அனைவரையும் அவர்கள் தங்குமிடங்கள் சென்று சந்தித்து ஜித்தா காயல் நற்பணி மன்ற நிர்வாகிகள் தாங்கள் வாழ்த்துக்களையும் மகிழ்ச்சியையும் பரிமாரிகொண்டனர்.
அடுத்து இங்கு வர உள்ள நமதூர் ஹாஜிகளையும் உளம் மகிழ்ந்து அன்புடன் வரவேற்கின்றோம். வல்லோன் அல்லாஹ் நம் அனைவரின் ஹஜ்ஜினையும் கபுலாக்கி,இலகுவாக்கி எல்லா நல்ல அமல்களையும் ஏற்று சிறப்புடன் தாயகம் திரும்ப நல்லருள் புரிவனாக ஆமீன்.
தகவல்:
ஜித்தா காயல் நல மன்றம்,
ஜித்தா - சவுதி அரேபியா |