ஒரு வீட்டிற்கு ஒரு காஸ் சிலிண்டர் இணைப்புதான் என்ற விதிமுறையை தீவிரமாக அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி ஒரே பெயரில் ஒன்றுக்கு மேற்பட்ட காஸ் சிலிண்டர் இணைப்புகள் வைத்துள்ளவர்கள் - வரும் அக்டோபர் 31 க்குள் தங்கள் கூடுதல் இணைப்பை திரும்பி
வழங்கவேண்டும். அவ்வாறு வழங்காதபட்சத்தில் - அனைத்து இணைப்புகளும் துண்டிக்கப்படும் என பெட்ரோலிய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இரண்டு காஸ் சிலிண்டர் பெற விரும்புபவர்கள் - முறையாக Double Bottle Connection (DBC) திட்டம் மூலம் விண்ணப்பித்து இரண்டாம் சிலிண்டர் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் ஒரு சந்தாதாரராகவே கணக்கிடப்பட்டு, ஒரு இணைப்புக்கு - தற்போது வரைமுறைபடுத்தப்பட்ட அளவிற்கு - மானியம் வழங்கப்படும்.
இந்தியாவில் மூன்று அரசு நிறுவனங்கள் (INDIAN OIL CORPORATION, BHARAT PETROLEUM, HINDUSTAN PETROLEUM) காஸ் இணைப்புகளை
வழங்குகின்றன. சந்தாதாரர் விபரங்கள் முழுமையாக கணினிமயமாக்கப்பட்டதால் - ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்பு வைத்துள்ளவர் விபரத்தை எளிதாக
கண்டுபிடித்து விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய அரசு - ஒவ்வொரு காஸ் சிலிண்டருக்கும் மானியமாக சுமார் 350 ரூபாய் வழங்குகிறது. இந்தியாவில் மொத்தம் 12.5 கோடி இணைப்புகள்
உள்ளன. இந்த வகை மானியமாக மட்டும் - மத்திய அரசு, ஆண்டுக்கு சுமார் 25,000 கோடி ரூபாய் செலவு செய்கிறது. மானிய வகை செலவை
குறைக்கும் நோக்கில் - இந்திய அரசு, ஆண்டுக்கு 6 முறை மட்டுமே - மானியத்துடன் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆறுக்கும் கூடுதலாக காஸ் சிலிண்டர் பெற விரும்புவோர், மானியம் நீக்கி சந்தை விலையில் கூடுதல் சிலிண்டர் பெற வேண்டும். செப்டம்பர் 14
முதல் இந்த வழிமுறை அமலுக்கு வந்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் மீதியுள்ள ஆறு மாதத்தில் 3 முறை தான் மானிய விலையில் காஸ் சிலிண்டர் வழங்கப்படும் என பெட்ரோலிய அமைச்சகம்
தெரிவித்துள்ளது. எத்தனை முறை மானிய சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது என்ற விபரம் - காஸ் சிலிண்டர் வழங்கும்போது, ரசீதில் அச்சடித்து
(1/3, 2/3, 3/3, 1/6, 2/6, 3/6, 4/6, 5/6, 6/6) வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு சந்தாதாரரிடமும் DOMESTIC GAS CONSUMER CARD (DGCC) எனப்படும் நீல வர்ண புத்தகம் இருக்கும். அதில் உள்ள சந்தாதாரருக்கான
பிரத்தியேக வரிசை எண்ணும், ரசீதில் உள்ள வரிசை எண்ணும் சமமாக உள்ளதா என காஸ் சிலிண்டர் பெறும்போது சரிபார்த்துகொள்ளும்படி
அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மானியம் இல்லாத சிலிண்டர் விலை (14.2 kg) சுமார் 750 ரூபாய் என செப்டம்பர் இறுதி வரை இருந்தது. அக்டோபர் 1 முதல் அது சுமார் 880 ரூபாய் என உயர்ந்துள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் மானியம் இல்லாத சிலிண்டரின் விலை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |