பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
பாகம் 1 மற்றும் பாகம் 2 இல் கண்டது போல், கேள்விக்குரிய வகையில் - தற்காலிக தேவைக்காக, ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு - ஓர் ஆண்டிற்கு ஒரு முறை பணி நீட்டிப்பும் வழங்கப்பட்டது. அவ்வப்போது - சிறு அளவில், சம்பள உயர்வும் கொடுக்கப்பட்டது.
மேலும் - ரோஜா உதவிக்குழுவிற்கு தான் நகர்மன்றம் பணி வழங்கியது என்பதால் (குறிப்பிட்ட பணியாளர்களுக்கு அல்ல), இந்நிறுவனம் முதலில் அனுப்பிய 10 நபர்களில் சிலர் இடையில் பணியில் இருந்து நின்றதால், அவ்விடத்திற்கு வேறு நபர்கள் அனுப்பப்பட்டனர்.
2010ம் ஆண்டு வாக்கில் ரோஜா சுயஉதவிக் குழுவின் மூலம் நகராட்சியில் 11 பேர் வேலை செய்தனர் (தீர்மானம் அனுமதித்தது 10 பேர் தான்). அவர்கள் - ஏ.விவேகானந்தன், எஸ்.சுபுஹாணி, க.காளிதாஸ், எஸ்.சந்தானம், பா.சின்னத்தம்பி, எஸ்.துளசிமணி, பி.ரஞ்சித், ஆ.முத்துக்குமார், ஆ.முகமதலி, வெ.சங்கர் மற்றும் பா.சிவா. இதில் எஸ்.சுபுஹாணி, க.காளிதாஸ் மற்றும் பி.ரஞ்சித் ஆகியோர் இடையில் நின்றவர்கள். இந்த பட்டியலோடு, மகேஷ் என்பவர் பின்னர் இணைக்கப்பட்டார்.
தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தப்பணியாளர்கள், கடந்த நகர்மன்றத்தின் இறுதி வாரங்களில் - தங்கள் பணியினை நிரந்தரமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க துவங்கினர். இந்த தகவல், அப்போது (ஆகஸ்ட் 12, 2011) தினமலர் நாளிதழில் வெளிவந்தது.
அந்த செய்தியில் - இப்பணியாளர்கள் ஒவ்வொருவரும் 30,000 ரூபாய் டெபாசிட் கட்டியதாகவும் கூறப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் - நகராட்சியினால் ஏதாவது டெபாசிட் தொகை இப்பணியாளர்களிடம் இருந்து பெறப்பட்டதா என்ற கேள்விக்கு இல்லை என்ற பதில் சில காலங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. நகராட்சிக்கு அதிகாரப்பூர்வமாக இந்த பணம் செல்லவில்லை என்றால், இந்த பணம் யாருக்கு சென்றது என்று இதுவரை தகவல் இல்லை.
நகராட்சியின் துப்பரவு பணிகளை மேம்படுத்த எனக்கூறி பணியமர்த்தப்பட்ட ரோஜா சுய உதவிக்குழுவின் பெரும்பாலான பணியாளர்கள், காலப்போக்கில் - பேருந்து நிலைய வசூல, குடிநீர் விநியோகம், தெரு விளக்கு பராமரிப்பு, வீட்டு வரி / குடிநீர் வரி வசூல், வங்கிப்பணிகள் என பல்வேறு பணிகளை செய்து வந்தனர். நிரந்தர பணியாளர்களுக்கு உதவியாளர்களாக மாறினர்.
ஜூலை 29, 2011 இல் நடந்த நகர்மன்ற கூட்டத்தில் - தனது மகனை தலைமையாக கொண்ட ரோஜா ஆண்கள் சுயஉதவிக்குழு உட்பட அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களுக்கும் 30 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க கோரி 18வது வார்டு உறுப்பினர் எஸ்.காசிராஜன் மற்றும் இதர நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கையின் அடிப்படையில், ஒப்பந்தப்பணியாளர்களுக்கு 25 சதவீதம் சம்பள உயர்வும் வழங்கப்பட்டது.
அக்டோபர் 2011இல் நகர்மன்றத் தேர்தல் நடைபெற்று புதிய நிர்வாகம் பதவிக்கு வந்தது. காட்சிகள் மாறியது. சில உண்மைகளும் வெளிவர துவங்கின.
[தொடரும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
|