பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
புதிய நிர்வாகம் (அக்டோபர் 2011இல்) பதவிக்கு வருவதற்கு முன்னர் - முந்தைய நிர்வாகத்தால், கடைசியாக மார்ச் 2011இல், ஒப்பந்தப்பணியாளர்களுக்கு ஓர் ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருந்தது. அது மார்ச் 2012 இல் (புதிய நிர்வாகம் பதவிக்கு வந்து 5 மாதங்களில்) காலவதியாகவே, மீண்டும் அவர்களுக்கு பதவி நீட்டிப்பு - மார்ச் 29, 2012 இல் நடந்த நகர்மன்ற கூட்டம் மூலம் வழங்கப்பட்டது.
இம்முறை - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளின் அறிவுரையின் அடிப்படையில், தற்காலிக பணி என்பதால் - 89 நாட்களுக்கு தான் பணி நீட்டிப்பு வழங்கவேண்டும் என நகர்மன்றத் தலைவர் கூறவே, 89 நாட்களுக்கு மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது (தீர்மானம் எண் 193).
ஏப்ரல் 30, 2012இல் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - ஒப்பந்தப்பணியாளர்கள் சம்பந்தப்பட்ட தணிக்கை தடை உட்பட எந்த தணிக்கை தடைகளும் காயல்பட்டினம் நகராட்சி குறித்து இருக்க கூடாது என்ற நோக்கில், நகர்மன்றத் தலைவர் - ZERO AUDIT OBJECTIONS நகராட்சியினை உருவாக்க இரு மாதங்களுக்கு ஒரு முறை சிறப்பு கூட்டங்கள் நடத்த வேண்டும் என முன்மொழிந்தார். இப்பொருள் - தீர்மானம் எண் 228ஆக நிறைவேறியது.
நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் - ஜூன் 2012இல் - முதல் கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் அழைப்பு விடுத்தார். நகர்மன்றத் தலைவருக்கும், பெருவாரியான உறுப்பினர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் துவங்கிய காலகட்டம் அது. உறுப்பினர்கள் எவரும் அழைக்கப்பட்ட சிறப்பு கூட்டத்திற்கு வரவில்லை.
மேலும் அம்மாதம் (ஜூன் 2012) முதல் தொடர்ந்து 3 மாதங்கள் - நகர்மன்றக் கூட்டத்தில் இருந்து உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஒப்பந்தப்பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட 89 நாட்கள் பணி நீட்டிப்பு, ஜூன் 2012 மாதம் முடிவுற்றாலும், நகர்மன்றக் கூட்டம் நடைபெறாததால் - அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை. மீண்டும் நகர்மன்றக்கூட்டம் அக்டோபர் 22, 2012இல் துவங்கவே, விடுபட்ட காலகட்டதையும் சேர்த்து, டிசம்பர் 2012 இறுதி வரை - ஒப்பந்தப்பணியாளர்களுக்கு, பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது (தீர்மானம் எண் 268/270).
புதிய நகர்மன்றம் பொறுப்பேற்கும்போது - வி.கண்ணையா என்பவர் ஆணையராக இருந்தார். நகராட்சி பொறியாளரான (MUNICIPAL ENGINEER) இவருக்கு, ஆணையர்கள் தட்டுப்பாட்டினால், கூடுதல் பொறுப்பாக - ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
சில மாதங்களில் மாற்றம் செய்யப்பட்ட இவருக்கு பதிலாக, எஸ்.சுப்புலெட்சுமி என்பவர் ஆணையர் பொறுப்புக்கு வந்தார். நகராட்சி பொறியாளரான இவரும், சிறிது காலமே ஆணையர் பொறுப்பில் இருந்தார்.
ஏப்ரல் 2012இல் ஜி.அசோக் குமார் என்பவர் - காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையராக நியமனம் செய்யப்பட்டார். பல ஆண்டுகள் தலைமை செயலகத்தில் பணிப்புரிந்துள்ள இவர், ஆணையர்களுக்கான தேர்வெழுதி, நகராட்சி நிர்வாகத்துறைக்கு மாறி வந்தவர். தனது முதல் பொறுப்பாக பெரியகுளம் நகராட்சியில் ஆணையரான இவர், அங்கு சிறிது காலம் தான் இருந்தார். அங்கு நடந்த சில குளறுபடிகளால், பணி நீக்கம் செய்யப்பட்ட இவர், சில மாதங்கள் காத்திருந்தப்பின், காயல்பட்டினம் நகராட்சிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
காயல்பட்டினத்திற்கு ஆணையர் என்ற தகுதியுடன் அனுப்பப்பட்ட முதல் ஆணையரான ஜி.அசோக் குமார் - நகருக்கு வந்த சில காலங்களிலேயே - சில நகர்மன்ற உறுப்பினர்கள், சில நகர்மன்ற நிரந்தர பணியாளர்கள் மற்றும் சில ஒப்பந்தப் பணியாளர்களின் முழு கட்டுப்பாட்டில் செயல்புரிய துவங்கினார். குற்றச்சாட்டுகள் பல எழ துவங்கின. வங்கி கணக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. முறையற்ற முறையில், கட்டிட அனுமதிகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தவிர வேறு பல முறைக்கேடுகளும் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
நகராட்சியின் அனைத்து ஆவணங்களும் - நகர்மன்றத் தலைவர் கேட்கும் போது வழங்கப்படவேண்டும் என விதிகள் கூறினாலும், அவைகள் நகர்மன்றத் தலைவருக்கு மறுக்கப்பட்டது. முறைக்கேடுகள் குறித்த நகர்மன்றத் தலைவரின் புகார்களையும் - அதிகாரிகள் விசாரிக்க ஆர்வம் காட்டவில்லை.
இதற்கிடையில் - ஒப்பந்த பணியாளர்களின் பணிக்காலம் - டிசம்பர் 2012 இறுதியில் முடிவடைவதால், அவர்களுக்கு மேலும் பணி நீட்டிப்பு வழங்குவது குறித்து இரு தீர்மானங்கள் - டிசம்பர் 31, 2012 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - முன் வைக்கப்பட்டன.
10வது வார்டு உறுப்பினர் பதுருல் ஹக் முன் மொழிந்த தீர்மானம். அதில் - ஒப்பந்தப்பணியாளர்களின் பணி நாட்கள் ஓர் ஆண்டு நீட்டிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது
நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் முன் மொழிந்த தீர்மானம். புகார்களை விசாரித்தே, அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கவேண்டுமா, இல்லையா என முடிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஒப்பந்தப் பணியாளர்களுக்கு 89 நாட்கள் மட்டும் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு, நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களின் பணியில் திருப்தி இல்லாதது குறித்து பெறப்படும் ஆதாரப்பூர்வமான புகார்களின் அடிப்படையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்திட மன்றம் தீர்மானிக்கிறது என்ற தீர்மானமும் (தீர்மானம் எண் 428) நிறைவேற்றப்பட்டது.
[தொடரும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
|