பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
2006ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த தேர்தலை தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியின் புதிய நிர்வாகம் பதவியேற்றது.
பதவியேற்று ஏறத்தாழ 9 மாதங்கள் கழித்து, ஜூலை 10, 2007 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் இரு வாகன ஓட்டுனர்கள் - நகராட்சியின் துப்பரவு பணிகளுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்களை இயக்க நியமனம் செய்யப்பட்டார்கள். அக்கூட்டத்தில் பொருள் எண் 18 ஆக இடம்பெற்ற இவ்விசயத்திற்கு, செயல் அலுவலர் கீழ்க்காணுமாறு குறிப்பு எழுதியிருந்தார்.
மினி லாரிகள் இயக்குவதற்கு ஓராண்டிற்கு தனி நபர் ஓட்டுனர் டெண்டர்கள் கோரப்பட்டதில் கீழ்கண்ட விபரப்படியான டெண்டர்கள் வரப்பட்டுள்ளது.
(1) திரு அஸ்கர் (சிவன் கோவில் தெரு, காயல்பட்டணம்) - ரூபாய் 2950 ஒரு மாதத்திற்கு
(2) திரு எம். முத்துக்குமார் (அருணாச்சலபுரம், காயல்பட்டணம்) - ரூபாய் 3600 ஒரு மாதத்திற்கு
(3) திரு செந்தில் (சேதுராஜா தெரு, காயல்பட்டணம்) - ரூபாய் 3200 ஒரு மாதத்திற்கு
(4) திரு எஸ்.முத்துக்குமார் (அருணாச்சலபுரம், காயல்பட்டணம்) - ரூபாய் 3300 ஒரு மாதத்திற்கு
(5) திரு சாஹுல் ஹமீது (எல்.எப்.சாலை, காயல்பட்டணம்) - ரூபாய் 3500 ஒரு மாதத்திற்கு
(6) திரு செல்வக்குமார் (குலம்சாகிப் தம்பி தோட்டம், காயல்பட்டணம்) - ரூபாய் 2800 ஒரு மாதத்திற்கு
(7) திரு ரமேஷ் (சேது ராஜா தெரு, காயல்பட்டணம்) - ரூபாய் 3400 ஒரு மாதத்திற்கு
பெறப்பட்ட டெண்டர்களில் குறைவான ரேட் எடுத்துள்ள திரு செல்வக்குமார் மற்றும் திரு அஸ்கர் காயல்பட்டணம் ஆகியோர்களது டெண்டர்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
அப்போதைய துணைத் தலைவர் சி.எஸ்.சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் - இப்பொருள் தீர்மானம் எண் 183ஆக நிறைவேற்றப்பட்டது.
தீர்மான வாசகம்:
பொது சுகாதார வாகனம் ஓட்டுனருக்கு குறைந்த ரேட் கொடுத்துள்ள திரு செல்வக்குமார் மற்றும் திரு அஸ்கர் ஆகிய இருவருடைய டெண்டர்களை 1 வருடத்திற்கு அனுமதித்து அங்கீகரிக்கப்படுகிறது.
யார் குறைவான சம்பளத்திற்கு சம்மதிக்கிறார்கள் என்ற முறையில் விடப்பட்டதாக கூறப்படும் இந்த விசித்திரமான டெண்டர் மூலம் இருவர் - ஓர் ஆண்டு காலத்திற்கு, துப்பரவு வாகன ஓட்டுனர்களாக நியமனம் செய்யப்பட்டார்கள்.
தொடர்ந்து, ஆகஸ்ட் 9, 2007 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - அப்போதைய 10வது வார்டு உறுப்பினரும், பின்னர் துணைத் தலைவருமான எம்.ஏ.கசாலி மரைக்கார், நகராட்சிக்கு தேவையான பணியாளர்கள் குறித்து ஒரு பொருளை முன் மொழிந்தார். அதில் சில பணிகளுக்கு நிரந்தர பணியாளர்கள் அரசு அனுமதிபெற்று நியமிக்க கோரியும், துப்பரவு பணிகளுக்கு 10 நபர்களை தற்காலிக அடிப்படையில் நியமிக்க கோரியும் கூறப்பட்டிருந்தது.
அப்போதைய துணைத் தலைவர் சி.எஸ்.சதக்கத்துல்லாஹ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் - அப்பொருள் - தீர்மானம் எண் 187ஆக நிறைவேற்றப்பட்டது.
மூன்று பகுதியாக இருந்த அந்த தீர்மானத்தின் முதல் பகுதியின் வாசகம்:
1. துப்புரவு பணியாளர்களை டெண்டர் (ஆண்கள் சுய உதவிக்குழு) மூலம் கோரி குறைந்த விலைப்புள்ளி கொடுத்துள்ள 10 நபர்களை தேர்வு செய்து பணி நியமனம் செய்ய தீர்மானிக்கப்படுகிறது.
ஆகஸ்ட் 9, 2007 அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம், ஆண்கள் சுய உதவிக்குழு மூலம், பணியாளர்களை நியமனம் செய்ய - நகராட்சிக்கு, அனுமதி வழங்கியது.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 8 மாதங்கள் கழித்து, மார்ச் 31, 2008 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில், கீழ்க்காணும் பொருள் இடம்பெற்றது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யிது அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார்.
பொருள் எண் 6:
காயல்பட்டணம் மூன்றாம் நிலை நகராட்சியில் மன்றம் தீர்மான் எண் 187இன் படி துப்புரவு பணிகளை ஆண்கள் சுய உதவிக்குழுக்கள் மூலம் தேர்வு செய்து துப்புரவு பணிகளை மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டதன்படி, கீழ்க்கண்டுள்ள ஆண்கள் சுய உதவிக்குழுக்களிடமிருந்து வரபெற்ற குறைந்த ஒப்பந்தப்புள்ளியை அங்கீகரித்தும், 1.10.2007 முதல் வழங்கிய தொகையினை அங்கீகரிக்கவும்
1. ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழு 10 நபர்கள் - நபர் ஒருவருக்கு மாதம் ரூபாய் 2900
2. காமராஜ் ஆண்கள் சுய உதவிக்குழு 10 நபர்கள் - நபர் ஒருவருக்கு மாதம் ரூபாய் 3000
மார்ச் 31, 2008 அன்று பரிசீலனைக்கு வைக்கப்பட்ட இப்பொருள் - நகர்மன்ற ஒப்புதல் பெறுவதற்கு முன்னரே, ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழு என்ற அமைப்பு மூலம் 10 நபர்கள், அக்டோபர் 1, 2007 முதல் பணியமர்த்தப்பட்டதாக தெரிவிக்கிறது. இதனை ஏற்று தீர்மானமும் (எண் 308) நகர்மன்றத்தால் நிறைவேற்றப்படுகிறது.
தீர்மானம் எண் 308:
ரோஜா ஆண்கள் சுய உதவி குழு கொடுத்துள்ள குறைந்த ஒப்பந்தப்புள்ளியினையும், 01.10.2007 மாதம் முதல் வழங்கிய தொகையினையும் மன்றம் அங்கீகரிக்கிறது.
மார்ச் 31, 2008 கூட்டத்தில் பரிசீலனை செய்யப்பட்ட காமராஜ் ஆண்கள் சுய உதவிக்குழுவின் பின்னணி தெளிவில்லை. ஆனால் ஒப்பந்தபுள்ளியினை பெற்ற ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழுவின் பின்னணி, இந்த தேர்வு, சட்டத்திற்கு புறம்பானது என்ற சந்தேகத்தை கிளப்புகிறது.
காட்டு தைக்கா தெரு விலாசத்தை கொண்ட ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழுவின் தலைவர் கே.ரமேஷ் என்பவர் என்றும், அதன் பொருளாளர் காஜா என்பவர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கே.ரமேஷ், அப்போது நகர்மன்றத்தின் 18வது வார்டு உறுப்பினராக இருந்த காசிராஜனின் மகன் என்றும், காஜா, அப்போது நகர்மன்றத்தின் 6வது வார்டு உறுப்பினர் என்றும் தெரிகிறது.
மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920, பிரிவு 50 (1)(d) - நகர்மன்ற அங்கத்தினர், நகராட்சி ஒப்பந்த பணிகளை பெறுவது - பதவி இழக்க செய்யும் குற்றம் என தெரிவிக்கிறது. இந்த விதி - ஒப்பந்தப்புள்ளியினை பெற்றது சம்பந்தப்பட்ட நகர்மன்ற அங்கத்தினரின் பெற்றோர்-பிள்ளைகளாக இருந்தாலும் பொருந்தும் என பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் தெரிவிக்கின்றன.
பிப்ரவரி 11, 2008 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் கீழ்காணும் பொருள் இடம்பெற்றது.
பொருள் எண் 15:
காயல்பட்டணம் நகராட்சி கணினியில் தட்டச்சு செய்து பிரிண்ட் எடுக்க திரு நசீர் கான் என்பவருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாதம் 2900/- வீதம் வழங்க மன்றத்தின் பார்வைக்கும், முடிவிற்கும்
செயல் அலுவலர் குறிப்பு:
கணினி பணி மிகவும் அவசியமாக இருப்பதால் உத்தரவு ஏதும் வழங்காமல் ஓராண்டுக்கு அனுமதிக்கலாம்.
இந்த பொருள் - நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யிது அப்துர் ரஹ்மான் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் தீர்மானம் எண் 260 ஆக நிறைவேற்றப்பட்டது.
இந்த தீர்மானம் இப்பணிக்கு நசீர் கான் எவ்வாறு தேர்வு செய்யப்பட்டார் (வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாகவா, ஒப்பந்தப்புள்ளி பெறப்பட்டா) என தெரிவிக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், விநோதமாக, உத்தரவு ஏதும் வழங்காமல் பணி வழங்கலாம் என்றும் கூறுகிறது. மேலும் இத்தீர்மானம் நிறைவேற்றபடுவதற்கு - நான்கு மாதங்களுக்கு முன்னரே இவர் நகராட்சியில் பணிப்புரிய துவங்கிவிட்டார் என்ற தகவலும் இந்த தீர்மானத்தில் இல்லை.
நான்கு மாதத்திற்கு முன்னரே இவர் பணியில் சேர்ந்ததை, செப்டம்பர் 25, 2008 அன்று நடந்த நகர்மன்ற கூட்டத்தில் இடம்பெற்ற பொருள் எண் 6 தெளிவுபடுத்துகிறது. அந்த பொருளின்படி, நசீர் கானின் ஓர் ஆண்டு ஒப்பந்த காலம் - 30.09.2008 அன்று நிறைவாகியது. அப்படி என்றால் இவரின் பணிக்காலம் 1.10.2007இல் துவங்கியிருக்கவேண்டும். ஆனால் இவர் குறித்த தீர்மானமோ - பிப்ரவரி 11, 2008 அன்று தான் நிறைவேற்றம் செய்யப்படுகிறது.
[தொடரும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
|