இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் சார்பில், இம்மாதம் 11ஆம் நாளன்று, இஃப்தார் - நோன்பு துறப்பு ஒன்றுகூடலுடன், பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியில் இலங்கை வாழ் காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டுள்ளனர்
இதுகுறித்து, காவாலங்கா சார்பில் அதன் செயலாளர் பி.எம்.ரஃபீக் வெளியிட்டுள்ள நிகழ்வறிக்கை:-.
அன்பின் மன்ற உறுப்பினர்கள் மற்றும் இலங்கை வாழ் காயலர்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும்.
வல்ல அல்லாஹ்வின் பேரருளால், எமது இலங்கை காயல் நல மன்றம் - காவாலங்கா அமைப்பின் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியுடனான பொதுக்குழுக் கூட்டம், இம்மாதம் 11ஆம் நாள் வெள்ளிக்கிழமை 17.00 மணியளவில், கொழும்பு - கொள்ளுப்பிட்டியிலுள்ள Buhary Communication இல்லத்தில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் ஹாஃபிழ் எம்.என்.முஹம்மத் அலீ கிராஅத் ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய மன்றத் தலைவர் ஹாஜி எம்.எஸ்.ஷாஜஹான் தலைமையுரையாற்றினார்.
இணைப்பொருளாளர் எஸ்.எச்.ஷாஹுல் ஹமீத் (ஏ.கே.எம்.) ஆண்டறிக்கையை சமர்ப்பித்ததோடு, எதிர்கால செயல்திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார்.
மன்றச் செயலாளர் பி.எம்.ரஃபீக், காயல்பட்டினத்திலிருந்து தொழில் நோக்கத்திற்காக இலங்கையில் வசிக்கும் மக்கள் எதிர்நோக்கும் அசவுகரியங்களைக் கருத்திற்கொண்டு, அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்வுகளை விளக்கிப் பேசினார்.
அண்மையில் காலமான காயல்பட்டினம் நகரப் பிரமுகர் ஹாஜி எம்.எம்.உவைஸ், இலங்கை காயல் நல மன்ற உறுப்பினர் முஹம்மத் லெப்பை ஆகியோரின் மஃபிரத் - பாவப் பிழைபொறுப்பிற்காக அனைவரும் துஆ - பிரார்த்தனை செய்யுமாறு கூட்டத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
இலங்கை அளுத்கம, பேருவல நகரங்களில் அண்மையில் நடைபெற்ற அசம்பாவிதங்களுக்கு இக்கூட்டத்தில் கண்டனமும், வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றங்களைத் தொடர்ந்து பின்வருமாறு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – நலத்திட்டங்கள்:
2014-2015ஆம் பருவத்திற்கான நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்திட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 2 – இமாம்-முஅத்தின் ரமழான் ஊக்கத்தொகை:
தாய்லாந்து காயல் நல மன்றம் (தக்வா) அமைப்பின் முன்னெடுப்பில் செயல்படுத்தப்படும் - காயல்பட்டினம் நகர பள்ளிகளின் இமாம் - முஅத்தின்களுக்கான ரமழான் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், காவாலங்காவின் பங்களிப்பாக இவ்வாண்டு இந்திய ரூபாய் 30 ஆயிரம் வழங்கிட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 3 – இக்ராஃவுடன் இணைந்து புலமைப் பரிசில்:
காயல்பட்டினம் இக்ராஃ கல்விச் சங்கத்துடன் இணைந்து புலமைப் பரிசில் வழங்குவதில் தொடர்ந்து பங்களிப்பதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
தீர்மானம் 4 – மருத்துவ உதவிகளை தனித்து செய்தல்:
ஷிஃபா மருத்துவக் குழுவின் அறிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது. உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், காவாலங்காவின் மருத்துவ உதவிகளை தனித்தே செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் அனைவருக்கும் பேரீத்தம்பழம், கறி கஞ்சி, வடை வகைகள், குளிர்பான வகைகள், பழ வகைகள் உள்ளிட்ட உணவுப் பதார்த்தங்கள் பரிமாறப்பட்டன.
இஃப்தார் நிகழ்ச்சியைத் தொடர்ந்து, மஃரிப் தொழுகை ஜமாஅத்தாக (கூட்டாக) நிறைவேற்றப்பட்டது. இலங்கை - கொழும்பு சம்மாங்கோட் பள்ளியின் முஅத்தின் ஹாஃபிழ் நியாஸ் தொழுகையை வழிநடத்தினார்.
அனைத்து நிகழ்ச்சிகளிலும், மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட காயலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) அமைப்பின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
இலங்கை காயல் நல மன்றம் (காவாலங்கா) தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |