பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
மார்ச் 5, 2014 அன்று நகர்மன்றத்தின் அவசர கூட்டம் நடைபெற்றது. இதில் மேஜை பொருளாக ஒப்பந்தப் பணியாளர்களின் பணி நீட்டிப்பு அறிமுகம் செய்யப்பட்டது. அக்கூட்டத்தில் அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களையும் (12) ரோஜா ஆண்கள் சுய உதவிக்குழுவின் கீழ் பணி நீட்டிப்பு வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தீர்மானம் எண் 794).
இதனை தொடர்ந்து நகராட்சி ஆணையர் ம.காந்திராஜ், மார்ச் 18 தேதியிட்ட கடிதம் மூலம், ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்து தணிக்கை தடைகள் - 2007-2008 முதல் உள்ளதை சுட்டிக்காட்டி, அறிவுரை தருமாறு - நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மு.சீனி அஜ்மல் கானிடம் கோரினார்.
அதற்கு மார்ச் 27 தேதியிட்ட பதிலில் - மண்டல இயக்குனர் சீனி அஜ்மல் கான், 1996ம் ஆண்டிற்கு பிறகு - ஒப்பந்தப் பணியாளர்களை பணியில் அமர்த்த தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் எவ்வாறு, காயல்பட்டினம் நகராட்சியில் 2007ம் ஆண்டு ஒப்பந்தப் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர் என வினவியிருந்தார்.
மண்டல இயக்குனரின் இந்த கேள்வியை தொடர்ந்து - காயல்பட்டினம் நகராட்சியின் ஒப்பந்தப் பணியாளர்களை, ஏப்ரல் 1 முதல் பணிக்கு வரவேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஒப்பந்தப் பணியாளர்களிடம் இருந்து எதிர்ப்பு வரவே, தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்த முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தேர்தலுக்கு பிறகு ஜூன் 10 அன்று நடந்த நகர்மன்றத்தின் சாதாரண கூட்டத்தில், ரோஜா ஆண்கள் சுய உதவி குழு ஒப்பந்தப் பணியாளர்களுக்கான பணி நீட்டிப்பு பொருள் இடம்பெறவில்லை. பணி நீட்டிப்பு பொருள் - கூட்டப்பொருளில் இல்லை என்பதற்கு எந்த உறுப்பினரும், கூட்டத்தின் போது ஆட்சேபனை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தொழில்நுட்ப உதவியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள செந்தில் குமார் என்பவருக்கு மட்டும் 89 நாட்களுக்கு, ஜூலை - செப்டம்பர் வரை பணி நீட்டிப்பு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பணி நீட்டிப்பு வழங்கப்படாத காரணத்தால், ஜூன் இறுதியில், ஒப்பந்தப் பணியாளர்களை - ஜூலை 1 முதல் பணிக்கு வரவேண்டாம் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இந்த அறிவிப்பினை எதிர்த்து - ஒப்பந்தப் பணியாளர்கள், குடும்பத்தினருடன் - நகராட்சியை முற்றுகை செய்தனர்.
ஜூன் மாதம் கூட்டப் பொருளில் பணி நீட்டிப்பு இடம்பெறாதபோது அமைதியாக இருந்த நகர்மன்ற உறுப்பினர்களும் - ஒப்பந்தப் பணியாளர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கிட தற்போது ஆதரவு தெரிவித்தனர்.
அக்டோபர் 30, 2012 அன்று நகராட்சி நடப்புகள் குறித்த கம்யூனிஸ்ட் கட்சி ஏற்பாட்டில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் - அக்கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவர், ஒப்பந்தப் பணியாளர்கள் குறித்து கீழ்க்கண்டவாறு பேசினார்:
மாதம் 10 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் ஊதியம் வாங்குவோர் கூட ஊர் சுற்ற நேரமின்றி இருக்கையில், வெறும் 2000 ரூபாய் அளவில் ஊதியம் பெறும் நகராட்சியின் ஊழியர் தினமும் மோட்டார் பைக்கில் கவலையின்றி ஊர் சுற்றுவதைப் பார்க்கும்போது மிகவும் வியப்பளிப்பதாக உள்ளது.
தங்கள் கட்சி விமர்சனம் செய்த அதே ஒப்பந்தப் பணியாளர்களுக்கு தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்படாதபோது, நகர கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர்கள் - ஆணையரை சந்தித்து, அவர்களை நீக்க வேண்டாம் என முறையிட்டுள்ளனர்!
முற்றுகை நடந்த காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்த காவல்துறையினர், திருச்செந்தூர் தாசில்தார் முன்னிலையில் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக கூறி - ஒப்பந்தப் பணியாளர்களையும், அவர்கள் குடும்பத்தினரையும் களைந்து செல்ல கூறினர்.
பணி நிமித்தமாக சென்னை சென்றிருந்த நகர்மன்றத் தலைவர், ஒப்பந்தப் பணியாளர்களால் நகராட்சி சந்தித்துள்ள பிரச்சனைகள் குறித்து - நகராட்சி நிர்வாகத் துறையின் உயர்மட்ட அதிகாரிகளிடம் பேசியதாக தெரிகிறது. மேலும் - மாவட்ட ஆட்சியருக்கும், இப்பிரச்சனைக் குறித்து விளக்கம் வழங்கியதாகவும் தெரிகிறது.
ஒப்பந்தப் பணியாளர்கள் தரப்பிலும் - தொடர்ந்து காயல்பட்டினம் நகராட்சியில் பணிப்புரிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அம்மா உணவகத்திற்கு அடிக்கல் நாட்ட காயல்பட்டினம் நகராட்சிக்கு வந்த சுற்றுலாத்துறை அமைச்சரும், தூத்துக்குடி மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதனிடம் ஒப்பந்தப் பணியாளர்கள் மனு வழங்கினர். ஜூலை 14 அன்று நடந்த மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைகேட்கும் கூட்டத்திலும் அவர்கள் மனு வழங்கியுள்ளனர்.
இருப்பினும் - ஓர் ஆண்டிற்கு என்ற தற்காலிக அடிப்படையில் 2007ம் ஆண்டு துவங்கி, கேள்விக்குரிய சூழல்களில் ஏறத்தாழ 7 ஆண்டுகள் வரை நீடித்த ஒப்பந்தப் பணியாளர்களின் பணிகள், நகராட்சிக்கு தொடர்ந்து தேவையில்லை என நகராட்சி சம்பந்தப்பட்ட அனைத்து மட்ட அதிகாரிகளும்
உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் - மாவட்ட நிர்வாகமும், நகராட்சியின் இம்முடிவில் தலையிட மறுத்துவிட்டதாகவும் தெரிகிறது.
[முற்றும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
|