பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
------------------------------------------
2013. புத்தாண்டு பிறந்தது. நகர்மன்றத் தலைவருக்கும், பெருவாரியான உறுப்பினர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் ஒரு புறம் தொடர்ந்தது. மறு புறம் - முறைக்கேடுகளும் தொடர்ந்து நடந்துக்கொண்டிருந்தன.
இக்காலகட்டத்தில் வங்கி கணக்கு உட்பட தனக்கு மறுக்கப்பட்ட ஆவணங்களை - நகர்மன்றத் தலைவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் கேட்க துவங்கியதாக தெரிகிறது. மேலும் - தூத்துக்குடியில் உள்ள உள்ளாட்சி நிதித்துறை தணிக்கை அலுவலகத்திற்கும், சென்னையில் உள்ள தலைமை உள்ளாட்சி நிதித்துறை தணிக்கை அலுவலகத்திற்கும் - நகர்மன்றத் தலைவர், முறைக்கேடுகள் குறித்து விசாரிக்க வேண்டுகோள் விடுத்து, கடிதங்கள் எழுதியதாகவும் தெரிகிறது.
ஜூலை 2013இல் காயல்பட்டினம் நகராட்சியில் ஆய்வுகள் மேற்கொண்ட உள்ளாட்சி தணிக்கை குழு - அன்றாடும் வசூல் ஆகும் தொகையை, வங்கி கணக்கில் செலுத்துவதில் முறைக்கேடு நடந்துள்ளதாக தெரிவித்தது. சுமார் 2.5 லட்ச ரூபாய் அளவிலான இந்த முறைக்கேடு மே 2011 முதல் நவம்பர் 2012 வரையிலான காலகட்டத்தில் உள்ளவை. இம்முறைக்கேடுக்கு - அக்காலகட்டங்களில் பதவியில் இருந்த ஆணையர் மற்றும் இளநிலை உதவியாளரும் தான் பொறுப்பு எனவும் தணிக்கை குழு தெரிவித்தது.
13 வெவ்வேறு தினங்களில் நடந்ததாக சுட்டிக்காட்டப்பட்ட இந்த முறைக்கேடுகளில், 12 தினங்களில் - இளநிலை உதவியாளராக இருந்தவர் முருகேசன். இவர் - இந்த முறைக்கேடுகளுக்கு தான் பொறுப்பில்லை என்றும், ஒப்பந்தப் பணியாளர்களான கணினி இயக்குனர் எம்.எஸ்.நசீர் கான் மற்றும் முஹம்மது அலி ஆகியோர் தான் பொறுப்பு என்றும் விளக்கம் கூறினார். இந்த குற்றச்சாட்டை அந்த இருவரும் (எம்.எஸ்.நசீர் கான் மற்றும் முஹம்மது அலி) மறுத்தனர்.
இளநிலை உதவியாளராக இருந்த முருகேசன் நகராட்சி ஆணையருக்கு வழங்கிய - ஆகஸ்ட் 12, 2013 தேதிய - விளக்க கடிதத்தில் இருந்து...
ஒப்பந்தப் பணியாளர்கள் சம்பந்தமாக எழுந்த சில பிரச்சனைகள்
நசீர் கானுக்கு காசோலை மூலமாக 1,19,800 ரூபாய்...
ஒப்பந்தப் பணியாளரான நசீர் கானுக்கு மார்ச் 27, 2013 அன்று 1,19,800 ரூபாய்க்கு காசோலை (SB 19747) வழங்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு கணினி வாங்கப்பட்ட வகைக்கு இந்த தொகை வழங்கப்பட்டிருக்கலாம் என நகராட்சி வட்டாரத்தில் சிலர் தெரிவித்தனர். இருப்பினும் - கணினி வாங்கப்பட்டிருந்தால், அதற்கான தொகை, காசோலையாக - ஒப்பந்தப்புள்ளி வழங்கிய நிறுவனத்தின் பெயருக்கு தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும், நகராட்சியின் பணிப்புரியும் ஒருவரின் பெயருக்கு வழங்கப்பட்டிருக்ககூடாது. எனவே - இப்பெரும் தொகை எதற்காக ஒப்பந்தப் பணியாளருக்கு காசோலை மூலமாக வழங்கப்பட்டது என்று தெளிவில்லை.
நகராட்சியில் உள்ள வாகனங்களுக்கு டீஸல் நிரப்பியதில் முறைக்கேடு
காயல்பட்டினம் நகராட்சிக்கு சொந்தமான வாகனங்கள் - ஜீப், லாரிகள் சேர்த்து ஐந்து உள்ளன. அவைகளுக்கு தேவையான டீஸல் KAYAL FUEL CENTRE என்ற நிறுவனம் மூலம் பல ஆண்டுகளாக நிரப்பப்பட்டு வருகிறது.
2012-13 காலகட்டத்தில் மட்டும் குறைந்தது 9 காசோலைகள் மூலம் இந்நிறுவனத்திற்கு 9,17,027 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
2013-14 காலகட்டத்தில் ஏப்ரல் - நவம்பர் மாதங்களில் (ஜூலை, ஆகஸ்ட் விபரம் இல்லை), 6 காசோலைகள் மூலம் மட்டும், 10,25,478 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் மூலம் பெறப்பட்ட ரசீதுகளை நகர்மன்றத் தலைவரும் சில உறுப்பினர்களும் பார்வையிட்டதில் - சந்தேகத்திற்குரிய வகையில், அதிகமான தொகை டீஸல் வகைக்கு வழங்கப்பட்டதாக கண்டறியப்பட்டது. இதன் காரணமாக - ஜனவரி 20, 2014 அன்று நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் - ஒப்பந்தப்பணியாளர்களுக்கு 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்கப்பட்டபோது,
ஜீப் வாகன ஓட்டுனர் (வண்டி என்) TN69 C 9148 திரு அஸ்கர் என்ற ஒப்பந்த பணியாளர் தவிர்த்து மற்ற ஒப்பந்த பணியாளர்களுக்கு 89 நாட்கள் பணி நீட்டிப்பு வழங்க மன்றம் தீர்மானிக்கிறது
என தீர்மானம் எண் 722 நிறைவேற்றப்பட்டது.
விபரம் அறியாத மக்களிடம் இருந்து முன்பணம் பெற்று முறையற்ற குடிநீர் இணைப்புகள் வழங்கியது
காயல்பட்டினம் நகராட்சியில் குடிநீர் விநியோகப்பணியில் உள்ள ஊழியர்களுக்கு துணையாக சில ஒப்பந்தப்பணியாளர்கள் வேலை செய்து வந்தனர். இவர்கள் - விபரம் அறியாத மக்களிடம் - குடிநீர் இணைப்பு தருவதாக கூறி, முன்பணம் பெற்று, அதனை நகராட்சிக்கு செலுத்தி ரசீது பெறாமல், முறையற்ற முறையில் குடிநீர் இணைப்புகள் வழங்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதனை - சில மாதங்களுக்கு முன், நகர்மன்றத் தலைவரும், உறுப்பினர் ஒருவரும், அதிகாரிகளும் - நகரின் புறநகர் பகுதிக்கு சென்றப்போது கண்டறிந்ததாகவும் தெரிகிறது.
இல்லங்களுக்கு சென்று வசூல் செய்யப்பட்ட வரிப்பணம் நகராட்சிக்கு செலுத்தப்படவில்லை
சில ஒப்பந்தப்பணியாளர்கள், வீடுகளுக்கு சென்று வரி வசூல் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக தெரிகிறது. அவ்வாறு வசூல் செய்யப்பட்ட சிலரின் வரிப்பணம், நகராட்சிக்கு செலுத்தப்பட்டு, அதன் ரசீது - பணம் கொடுத்த மக்களிடம் வழங்கப்படவில்லை என்ற புகார்களும் எழுந்ததாக தெரிகிறது.
இவ்வாறு பல்வேறு புகார்கள் எழுந்தும், அது குறித்து பல முறை நகர்மன்றத் தலைவர் உட்பட பலரால் தெரிவிக்கப்பட்டும் - நகராட்சி ஆணையரோ, மேலதிகாரிகளோ உரிய முடிவு எதுவும் எடுக்கவில்லை.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம், மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா) - ஜனவரி 6 அன்று, ஒப்பந்தப்பணியாளர்களின் செயல்பாடுகள் குறித்து புகார் மனு வழங்கியது. இதற்கும் - நகராட்சியின் அதிகாரிகள் சார்பாக பெறப்பட்ட பதில் - முழுமையாக இல்லை என்று தெரிகிறது. நகராட்சி நடப்புகள் குறித்து MEGA அங்கத்தினர் திரளாக சென்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்விகளையும் - நகராட்சி அலுவலர்களிடம் ஜனவரி 7 அன்று வழங்கினர்.
இத்தருணத்தில் நகர்மன்றத் தலைவர் - சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரிகளை சந்தித்து, நகராட்சி நடப்புகள் குறித்து தான் இதுவரை வழங்கியுள்ள புகார்கள் குறித்து எடுத்துக்கூறி, அவைகள் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் எழுந்துள்ள தொடர் பிரச்சனைகள் குறித்தும், குறிப்பாக - ஆணையரின் செயல்பாடுகளில் உள்ள குறைப்பாடுகள் குறித்தும், எடுத்துக்கூறியதாக தெரிகிறது.
அதனை தொடர்ந்து - காயல்பட்டினம் நகராட்சியின் ஆணையர் ஜி.அசோக் குமார், பிப்ரவரி மாதம் முதல் வாரம் மாற்றம் செய்யப்பட்டார். நகராட்சியின் புதிய ஆணையராக எம்.காந்திராஜ் - பிப்ரவரி 12 அன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
[தொடரும்]
------------------------------------------
பாகம் 1 | பாகம் 2 | பாகம் 3 | பாகம் 4 | பாகம் 5 | பாகம் 6
|