சவூதி அரேபியா-ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 80-வது செயற்குழு கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை :-
முதலாவது அமர்வு:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அளப்பெரும் கிருபையால் ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 80-வது செயற்குழு கூட்டம் கடந்த 11.07.2014 வெள்ளி மாலை 06:00 மணியளவில் ஜித்தா – ஷரஃபிய்யாவில் அமைந்துள்ள ஆர்யாஸ் உணவகத்தில் நடந்தேறியது.
இக்கூட்டதிற்கு மன்றத்தலைவர் சகோ.குளம்எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் தலைமை ஏற்க, அரபி எம்.அய்.முஹம்மது ஷுஅய்ப் இறைமறை ஓத,
சகோ.சொளுக்கு எஸ்.எம்.அய்.செய்யது முஹம்மது சாஹிபு அனைவரையும்
வரவேற்க கூட்டம் ஆரம்பமானது.
மன்ற செயல்பாடுகள்:
கடந்த கூட்டத்தில் பேசப்பட்ட செய்திகள் குறித்த மன்ற செயல்பாடுகள், தீர்மானங்கள் அதன் நிமித்தம் நடேந்தேறிய பணிகள் மற்றும் இதர தகவல்களை விபரமாக தந்தார் மன்றச்செயலர் சகோ சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்.
தலைவர் உரை:
சமீபத்தில் விடுப்பில் தாயகத்திலிருந்த சமயம் உலக காயல் நல மன்றங்களின் கூட்டமைப்பான “இக்ரஃ” மற்றும்“ஷிஃபா” வில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட செய்திகள், நகரின் நடப்புகள், நகர் நல மன்றப்பணிகளின் செயல்பாடுகள், மற்றும் ஏனைய நிகழ்வுகள் குறித்து விபரமாக எடுத்துச்சொன்னார் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன்.
இஃப்தார் நோன்பு துறப்பு:
பிரதான காயல் கறிகஞ்சி மற்றும் பொரியல்களுடன் இஃப்தார் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவரும் நோன்பு துறந்து வல்லோன் இறைவனை போற்றி புகழ்ந்து அவனுக்கு நன்றி செலுத்தினார்கள். தொடர்ந்து மஃரிப் தொழுகைக்கு பின்னர் சுவைமிகு காயல் தேநீர் பரிமாறப்பட்டது.
இரண்டாவது அமர்வு:
மன்றச்செயலர் சகோ.எம்.ஏ.செய்யிது இப்ராஹீம் ரமலான் நினைவுகளை பகிர்ந்ததோடு இம்மன்றம் இதுவரை வழங்கிய உதவிகள், செயல்பாடுகள் மற்றும் நிறைவேற்றிய பணிகள் குறித்த தெளிவான பார்வையை செய்தியாக தந்தார்.
நிதி நிலை:
மருத்துவம் மற்றும் கல்விக்கான நிதி ஒதுக்கம், சந்தா மற்றும் நன்கொடைகளின் வரவு மற்றும் இருப்பு விபரங்களை பட்டியலிட்டார் பொருளாளர் சகோ. எம். எஸ். எல். முஹம்மது ஆதம்.
மருத்துவ நிதி உதவி:
“ஷிஃபா” மருத்துவ கூட்டமைப்பு மூலம் மருத்துவ உதவி வேண்டிவந்த விண்ணப்பங்கள் வாசிக்கப்பட்டு மன்றத்துணைத்தலைவர் சகோ.மருத்துவர் எம்.ஏ.முஹம்மது ஜியாது மற்றும் மன்ற ஆலோசகர் சகோ.பொறியாளர் எஸ்.செய்யது பஷீர் ஆகியோரின் ஆலோசனையின் பேரில் புற்று நோய், இருதயம், எலும்பு, கிட்னி, இரு கைகளின் செயலின்மை, மூளை, கண் அறுவை, டி,பி., ஹிரனியா என பலதரப்பட்ட பிணியால் பாதிக்கப்பட்டுள்ள பதினெட்டு பயனாளிகளுக்கு மருத்துவ உதவி வழங்க முடிவு செய்து, அவர்களின் பூரண உடல் நலத்திற்கும் வல்ல இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
உயர் கல்வி நிதி உதவி:
கல்வி உதவி வேண்டி வந்த விண்ணப்பங்களும் வாசிக்கப்பட்டு பொறியியல், வேதியியல்,மனையியல், தொழிலியல் பயிலும் மாணவ மாணவிகள் 9 நபர்களுக்கு உயர் கல்வி உதவி வழங்க முடிவு செய்து அவர்களின் முயற்சி முழு வெற்றியடைவும் இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்கள்:
புனித உம்ரா கடமையை நிறைவேற்ற ஹாங்காங் மற்றும் தாயகத்திலிருந்து மக்கா வந்திருந்த காயலர்கள் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். ஹாங்காங் காயல் ஐக்கியப் பேரவையின் முன்னால் தலைவர் எஸ்.எஸ்.அப்துல் அஜீஸ் லெப்பை ஹாங்காங் பேரவையின் செயல்பாடுகள் குறித்து விபரமாக கூறினார். மேலும்;இம்மன்றத்தின் சீரிய பணிகளை வெகுவாக பாராட்டிய அவர், நிறைய சேவைகளை சிறப்பாக செய்கிறீர்கள் என்றும் உறுப்பினர்களின் கருத்துப்பகிர்வுகள் கலகலப்பாக இருக்கிறதென்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துரைத்த காயல் முத்துவாப்பா மன்றத்தின் பணிகள் அறிந்து சிலாகித்தார். நகரின் பிணி குறித்து மனம் வருந்திய அவர் இதுபோன்ற மன்றங்களின் சேவை நம் நகருக்கு அவசியம் தேவை என்றார்.
“ஜித்தாவில் தான் பணிபுரிந்த காலத்தில் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இம்மன்றத்தை 2004 ல் நம் சகோதரர்கள் உருவாக்கினார்கள் என்றும், அது இப்போது வளர்ந்து உயர்ந்து மிகபெரும் பணிகளை கையிலெடுத்து அல்லாஹ்வின் அருளால் செவ்வனே செய்கிறது என்பதை நினைத்து மனது பூரிப்படைகிறது என்ற அவர் மன்றத்தின் பணிகள் மேலும் நலமே அமைய வாழ்த்தி அமர்ந்தார்.
பிரார்த்தனை:
புண்ணியமிகுந்த ரமலான் மாதத்தில் உயர்ந்த பணிகளுக்காக நாமெல்லாம் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம். நம்மை இங்கு சந்திக்க வைத்த அல்லாஹ்வை போற்றி புகழும் இந்நேரத்தில்; இச்சிறப்பான மாதத்தில் நம் மன்றத்தின் அனைத்து நற்பணிகளையும், நம்மின் நல்லமல்களையும் வல்லவன் அல்லாஹ் ஏற்றுக்கொள்ளவும்; பிணியுற்றோர் சுகம் பெறவும், வறியோர் வளம் பெறவும், நோயற்ற நகரை தந்திடவும், மறுமையில் அவன் அருளை பெற்றிடவும் நாம் இறையிடம் இருகரமேந்துவோம் என்று கூட்டத்தில் கலந்துகொண்டோர் அனைவரின் பிரார்த்தனையாக இருந்தது.
யான்பு சகோதரர்கள்:
யான்பு நகரிலுருந்து சகோ.கலவா எம்.ஏ.செய்யது இப்ராஹீம் தலைமையில் புனித உம்ரா கடமையை நிறைவேற்ற மக்கா வந்திருந்த மன்ற உறுப்பினர்கள் வழியில் ஜித்தாவிற்கும் வருகை தந்து செயற்குழுவில் கலந்து சிறப்பித்தார்கள். பெறப்பட்ட மனுக்களின் பரிசீலனை, அதற்கு முறைப்படி வழங்கும் உதவிகள், கருத்துபரிமாற்றங்கள் இவைகளை நேரடியாக முதன்முறையாக காண்பதில் மிக்க மகிழ்ச்சி என்றார்கள்.
தீர்மானங்கள்:
1. மருத்துவ விண்ணப்பங்கள் கடந்த ஓராண்டாக உலக காயல் நல மன்றங்களின் மருத்துவ கூட்டமைப்பு "ஷிஃபா" விலிருந்து சீராக முறைப்படி பெறுவது போல், இனி வருங்காலங்களில் கல்விக்கான அனைத்து விண்ணப்பங்களும் முறையே சீராக ஒருங்கிணைக்கப்பட்டு உலக காயல் நலமன்றங்களின் கல்வி கூட்டமைப்பு "இக்ரஃ" கல்வி சங்கம் மூலம் செவ்வனே பெற முயற்சிகள் செய்யவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
2. நம் நகர் இறைஇல்லங்களில் பணியாற்றும் இமாம் மற்றும் முஅத்தின்களுக்கு தாய்லாந்து காயல் நற்பணி மன்றம் முயற்சியில் அளிக்கப்படும் ரமலான் மாத சிறப்பு உதவியில் நம் மன்றத்தின் பங்களிப்பாக மன்ற உறுப்பினர்கள் மனமுவந்து அளித்த நிதியில் இருந்து இவ்வாண்டு ரூபாய் 50.000/= ம் வழங்கிடவும், மற்றும் “ஷிஃபா”வின் அவசர கால மருத்துவ நிதி உதவி வகைக்காக ரூபாய் 5000/=ம் மன்றம் மூலம் வழங்கிடவும் முடிவு செய்யப்பட்டது.
3. எதிர்வரும் செப்டம்பர் 05 வெள்ளிக்கிழமையன்று மாலை 5-30 மணியளவில்
இம்பாலா கார்டன் உணவக கூட்டரங்கில் மன்றத்தின் 32-வது பொதுக்குழு
ஈத்மிலன் சந்திப்பாக இன்ஷாஅல்லாஹ் நடைபெறுமென்றும் தெரிவிக்கப்பட்டது.
இச்செயற்குழுவில் கலந்து சிறப்பித்த விருந்தினர்கள், யான்பு உறுப்பினர்கள் மற்றும் கலந்து கொண்ட அனைவருக்கும் மன்றத்தின் சார்பில் சகோ பாளையம் ஏ.ஜெ.ஷெய்கு அப்துல்லாஹ் சாஹிப் நன்றிகளை கூறினார்.
சகோ பிரபு,எஸ்.ஜெ.நூர்தீன் நெய்னா பிரார்த்திக்க துஆ கஃப்பாராவுடன் செயற்குழு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்.
நிகழ்வின் இறுதியில் சகோ.குளம் எம்.ஏ.அஹ்மது முஹ்யித்தீன் மற்றும் சகோ. வேனா எஸ்.எஸ்.அஹமது சித்தீக் ஆகியோரின் அனுசரணையில் நெய்ச்சோருடன்
காயலின் களரிகறி இரவு உணவாக பரிமாறப்பட்டது.
தகவல்:
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
16.07.2014.
|