கேரள மாநிலம் மலபார் காயல் நல மன்றம் (மக்வா) சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் காயலர்கள் பெருந்திரளாகப் பங்கேற்றுள்ளனர்.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் செய்யித் ஐதுரூஸ் (சீனா) வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
உறுப்பினர்கள் மகிழ்ச்சிப் பரிமாற்றம்:
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் எமது மலபார் காயல் நல மன்றத்தின் இஃப்தார் நோன்பு துறப்பு நிகழ்ச்சி, 13.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை, கேரள மாநிலம் - கோழிக்கோடு கல்லாய் ரோட்டில் அமைந்துள்ள சினேகாஞ்சலி கம்யூனிட்டி ஹாலில், எமது அமைப்பின் தலைவர் மஸ்ஊத் தலைமையில் நடைபெற்றது.
கனமழையையும் பொருப்படுத்தாமல் மக்வாவின் அழைப்பை ஏற்று கோழிக்கோடு மற்றும் மலபார் வட்டாரத்தில்லுள்ள மஞ்சேரி, படகர, தலிஷேரி, கண்ணனூர், பையனூர், போன்ற - கோழிக்கோடு நகர சுற்றுவட்டாரத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் வந்து, அன்று மாலை 05.00 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் அரங்கில் அனைவரும் குடும்பத்துடன் சங்கமித்தனர்.
பல மாதங்களுக்கும் மேலாக ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளாத நிலையில், தற்போது கிடைக்கப்பெற்றுள்ள இச்சந்திப்பில் மகிழ்ந்து போன மன்ற உறுப்பினர்கள் ஒருவரையொருவர் இன்முகத்துடன் வரவேற்று, தமக்கிடையில் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டதன் மூலம், இருக்கும் உறவுக்கு இன்னும் வலிமை சேர்த்தனர்.
துவங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் மலபார் வாழ் காயல் மக்களை ஒன்று சேர்த்து ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கும் மருத்துவ உதவி என்ற உயர்வான நோக்கத்துடன் செயல்பட்டு வரும் மக்வா, சிறப்பான முறையில் நம் நகர்நலப் பணிகளாற்றியும், உறுப்பினர்களின் - குடும்ப சங்கமம், இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, கல்வியில் சிறந்து விளங்கும் மாணவ மாணவியரைப் பாராட்டி பரிசுகள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்குவது, சிறுவர் சிறுமியருக்கான நிகழ்சிகள் போன்ற மனமகிழ் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகின்றது அல்ஹம்துலில்லாஹ்..
இதுபோன்று மென்மேலும் சிறப்பாக செயல்பட்டு தொய்வின்றி நகர்நலப் பணிகளாற்றிட வேண்டி கூட்டத்தில் பங்கேற்றுார் துஆ செய்தனர்.
துவக்க நிகழ்வுகள்:
கூட்டரங்க நுழைவாயிலில், கலந்துகொள்வோரின் விபரங்கள் சேகரிக்கப்பட்டது.
அரங்க நிகழ்ச்சிக்கு, மன்றத் தலைவர் மஸ்ஊத் தலைமை தாங்கினார். மன்றத்தின் துணைத் தலைவர் யு.எல்.செய்யித் அஹ்மத், செயலாளர் உதுமான் லிம்ரா, துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர், சாளை ஜலீல், சாளை அபுல் ஹசன் மற்றும் சிறப்பு விருந்தினர் ஐதுரூஸ் காக்கா (கிழக்கரை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்றத்தின் துணைச் செயலாளர் முஹ்யித்தீன் அப்துல் காதர் நிகழ்ச்சிகளை நெறிப்படுத்தினார். மன்றத்தின் பொதுக்குழு உறுப்பினர் அஃப்ரஸ் இறைமறையை ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார்.
வரவேற்புரை:
நிகழ்வுகளில் பங்கேற்க வந்திருந்த மன்ற உறுப்பினர்களையும், அவர்கள்தம் குடும்பத்தினர் மற்றும் விருந்தினர்களையும் மன்ற செயற்குழு உறுப்பினர் சாளை முஹம்மத் இப்றாஹீம் (ஸூஃபீ) மன்றத்தின் சார்பில் வரவேற்றுப் பேசினார்.
மழலையரின் மனமகிழ் நிகழ்ச்சி:
சிறுவர்-சிறுமியருக்கான இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சி நடைபெற்றது. கலந்துகொண்ட அனைத்து குழந்தைகளும் தமது திறமைகளை அழகுற வெளிக்காட்டி அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தனர். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட - கீழக்கரையைச் சேர்ந்த ஐதுரூஸ் காக்கா அனைத்துக் குழந்தைகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.
தலைமையுரை:
கூட்டத் தலைவரும் - மன்றத் தலைவருமான மஸ்ஊத் தலைமையுரையாற்றினார். பின்வரும் இரண்டு அம்சங்களை உள்ளடக்கி அவரது உரை அமைந்திருந்தது:-
(1) ஒற்றுமை:
மன்ற அங்கத்தினருக்கிடையிலான ஒற்றுமை குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர், மன்றத்தின் அனைத்துப் பணிகளிலும் – பொறுப்பாளர்கள் செய்வார்கள் என்று இருந்து விடாமல், அனைத்துறுப்பினர்களும் சம அளவில் பங்கெடுக்க முன்வந்தால், இன்னும் அதிகளவில் மன்றப் பணிகள் மெருகேறும் என்று கூறினார்.
(2) வெற்றி தரும் திட்டமிடல்:
மலபார் காயல் நல மன்றம் (MKWA) துவங்கப்பட்டது முதல், முறையான திட்டமிடல் அடிப்படையில் செயல்பட்டு வருவதால், அதன் அனைத்து செயல்திட்டங்களும் இறையருளால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், உறுப்பினர்களின் ஆக்கப்பூர்வமான பங்களிப்பால் மன்றம் - தேவையுடைய மக்களுக்கு இயன்றதைச் செய்வதில் எந்தத் தொய்வும் ஏற்படாது என்றும் கூறினார்.
இஃப்தார் - நோன்பு துறப்பு:
கூட்ட நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரங்கில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிக்கு அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு பேரீத்தம்பழம், காயல் கஞ்சி, சாலா வடை என உணவு ஏற்பாட்டுக் குழுவினரால் விமரிசையாகவும், சுவைபடவும் உணவுப் பதார்த்தங்கள் ஆயத்தம் செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
மஃரிப் தொழுகை:
இஃப்தார் நிறைவுக்குப் பின், மஃரிப் தொழுகை ஜமாஅத்துடன் (கூட்டாக) தொழப்பட்டது. மன்ற தலைவர் மஸ்ஊத் தொழுகையை வழிநடத்தினார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தின் இரண்டாம் அமர்வு நடைபெற்றது. துவக்கமாக அனைவருக்கும் சுவையான தேனீர் வழங்கப்பட்டது.
செயலர் சுருக்கவுரை:
அடுத்து, மன்றச் செயலாளர் உதுமான் லிம்ரா உரையாற்றினார்.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழைக்கிடையிலும் - மன்றத்தின் அழைப்பை ஏற்று குடும்பத்துடன் இந்த இஃப்தார் நிகழ்ச்சியில் இத்தனை பேர் கலந்துகொண்டுள்ளதைப் பார்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகக் கூறினார்.
நகர்நலனுக்காக மன்றத்தால் செய்து முடிக்கப்பட்ட நலத்திட்டப் பணிகளின் சாராம்சத்தையும், உதவிகள் கோரி மன்றத்திற்கு வந்த மனுக்கள் அவற்றுக்கு மன்றத்தால் ‘ஷிஃபா’ மூலம் முடிந்த அளவு உதவி செய்த விபரம் குறித்தும் அவர் சுருக்கமாக விளக்கிப் பேசினார்.
நகர்நலப் பணிகளுக்கு நன்கொடை சேகரிப்பு:
மக்வாவின் நகர்நலப் பணிகளுக்காக, இக்கூட்டத்தில் நன்கொடை சேகரிக்கப்பட்டது. கூட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களுமாக ஆர்வத்துடன் வழங்கிய நன்கொடைகளின் நிறைவில், ரூபாய் 37 ஆயிரம் நகர்நல நிதியாகப் பெறப்பட்டு, மன்றத்தின் கருவூலத்தில் சேர்க்கப்பட்டது.
மக்வா உறுப்பினர்களிடம் இருந்து துளிர் சிறப்புக் குழந்தைகள் பள்ளி வகைக்காக ரூபாய் 8 ஆயிரத்து 850 தொகை துளிர் உண்டியல் மூலம் பெறப்பட்டது.
விருந்தோம்பல்:
பின்னர், இரவு உணவுக்காக அனைவரும் அழைக்கப்பட்டனர். அங்கு, இடியாப்ப பிரியாணியும் சம்பலும் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
சுவைமிக்க சமையலுக்கு பாராட்டு:
காலை 08.00 மணிக்குத் துவங்கி, அயராமல் பணி செய்து, ருசியாக சமைத்து அனைவருக்கும் பரிமாறிய உணவு ஏற்பாட்டுக் குழு தலைவர் ஆப்தீன் பாய் மற்றும் குழுவினரை கூட்டத்திற்கு வந்தவர்கள் பாராட்டி துஆ செய்தனர்.
பங்கேற்றோர்:
கூட்டம் நடைபெற்ற நேரத்தில் பெருமளவில் மழை பெய்தது. கனமழையையும் பொருட்படுத்தாமல், அனைத்து நிகழ்வுகளிலும், ஆண்கள் - பெண்கள் - குழந்தைகள் என மொத்தம் சுமார் 250 பேர் வரை ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.
நெஞ்சம் மறப்பதில்லை...
மொத்தத்தில் இந்த இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்வுகள் மன்ற உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தாரின் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றுவிட்டது.
நன்றியுரை:
நிறைவாக மன்றத்தின் செயற்குழு உறுப்பினர் ஸிராஜ் நன்றி கூற, கஃப்ஃபாரா துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது, அல்ஹம்துலில்லாஹ். இரவு 08.15 மணியளவில், அனைவரும் தத்தம் வாகனங்களில் வசிப்பிடம் திரும்பினர்.
அனைத்து நிகழ்ச்சிகளின்போதும் பதிவு செய்யப்பட்ட அனைத்துப் படங்களையும், https://plus.google.com/photos/107093273045987051953/albums/6036142874087193441?banner=pwa என்ற இணையதள பக்கத்தில் சொடுக்கி தொகுப்பாகக் காணலாம்.
இவ்வாறு, மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலபார் காயல் நல மன்றத்தின் (மக்வா) சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
மலபார் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |