தமிழ்நாட்டில் ஜூலை 29 அன்று (இன்று) ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் என தமிழ்நாடு தலைமை காழீ (காஜி) முஃப்தீ ஸலாஹுத்தீன் அய்யூபீ நேற்றிரவு அறிவித்தார். அதனடிப்படையில் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இன்று நோன்புப் பெருநாள் கொண்டாடப்படுகிறது.
பெருநாளுக்கு ஆயத்தம்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தொழுகைக்கு செல்வதற்காக, அதிகாலையிலேயே குளித்து, புத்தாடை அணிந்து, வாசனைத் திரவியங்களைத் தேய்த்துக் கொண்டவர்களாக பொதுமக்கள் அவரவர் மஹல்லா ஜமாஅத்திலுள்ள பள்ளிவாசலில் நடைபெறும் தொழுகையில் கலந்துகொண்டனர். காலை 07.30 மணி துவங்கி, 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
தொழுகை நடைபெற்ற பள்ளிவாசல்கள்:
காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி, மரைக்கார் பள்ளி, அப்பா பள்ளி, கடைப்பள்ளி, தாயிம்பள்ளி, பெரிய ஷம்சுத்தீன் வலிய்யுல்லாஹ் பள்ளி, ஹாஃபிழ் அமீர் அப்பா தைக்கா பள்ளி, செய்கு ஹுஸைன் பள்ளி, புதுப்பள்ளி, மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளி, மேலப்பள்ளி, அரூஸிய்யா பள்ளி, முஹ்யித்தீன் பள்ளி, மகுதூம் ஜும்ஆ பள்ளி, ஹாஜியப்பா தைக்கா பள்ளி, ஆறாம்பள்ளி, காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, அஹ்மத் நெய்னார் பள்ளி, ஜாவியா, சிறிய குத்பா பள்ளி, பெரிய குத்பா பள்ளி, இரட்டை குளத்துப் பள்ளி, கோமான் மொட்டையார் பள்ளி, ஸெய்யிதினா பிலால் பள்ளி, கற்புடையார் பள்ளி, கடற்கரை முஹ்யித்தீன் பள்ளி ஆகிய பள்ளிகளில், இன்று காலை 07.30 மணி முதல் 10.30 மணி வரை நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது.
அந்தந்த பள்ளிவாசல்களின் இமாம்கள் தொழுகையை வழிநடத்தினர். பெருநாள் தொழுகை நிறைவுற்ற பின்னர், குத்பா பேருரையும் நிகழ்த்தப்பட்டது. அனைத்து பள்ளிவாசல்களிலும் நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையில் அந்தந்த ஜமாஅத்தைச் சேர்ந்த பொதுமக்கள் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் கடற்கரையில் இன்று காலை 07.30 மணியளவில் பெருநாள் தொழுகையும், குத்பா பேருரையும் நடைபெற்றது. அதிலும் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.
திக்ர் மஜ்லிஸ்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, முன்னதாக நேற்று (ஜூலை 28ஆம் நாள்) இரவில் நகரின் பெரும்பாலான பள்ளிவாசல்களில் ராத்திபத்துல் காதிரிய்யா திக்ர் மஜ்லிஸ் நடைபெற்றது.
பெண்கள் தைக்காக்களில் பெருநாள் தொழுகை:
காயல்பட்டினத்தின் அனைத்துப் பகுதிகளிலுமுள்ள சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்கள் தைக்காக்களில் பெண்களுக்கு தனியாக நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. அதற்கென நியமிக்கப்பட்டிருந்த தற்காலிக ஆண் இமாம்கள் ஆண்கள் பகுதியிலிருந்தவாறு தொழுகையை வழிநடத்த, அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் அவர்களுக்கான பகுதியில் இருந்தவாறு தொழுகையில் கலந்துகொண்டனர்.
கடற்கரையில் மக்கள் கூட்டம்:
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இன்று மாலையில் காயல்பட்டினம் கடற்கரைக்கு ஆண்களும், பெண்களும் தம் குடும்பத்தினர், நண்பர்கள் சூழ திரண்டு செல்வர். அங்கு, குழந்தைகள் ஓடியாடி விளையாட, பெரியோர் இணைந்தமர்ந்து தமக்குள் மகிழ்ச்சியான செய்திகளையும், வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொள்வர்.
காயல்பட்டினத்தில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நோன்புப் பெருநாள் தொழுகை நடைபெற்றது தொடர்பான தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |