தமிழகத்தில், இம்மாதம் 29ஆம் நாள் செவ்வாய்க்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது.
சென்னையில், காயலர்கள் அதிகளவில் வசிக்கும் பகுதியான மண்ணடியில், அங்கப்பன் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில், அன்று காலை 09.00 மணியளவில் நோன்புப் பெருநாள் தொழுகையும், அதனைத் தொடர்ந்து குத்பா பேருரையும் நடைபெற்றது.
பள்ளியின் தலைமை இமாம் மவ்லவீ ஹாஃபிழ் காரீ முஹம்மத் இல்யாஸ் காஸிமீ தொழுகையை வழிநடத்தி, குத்பா பேருரையாற்றினார். இந்நிகழ்வுகளில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த சுமார் 250 ஆண்கள் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்துகொண்டனர்.
தொழுகை நிறைவுற்ற பின்னர், அனைவரும் கட்டித் தழுவி, கைலாகு செய்து தமக்கிடையில் மகிழச்சியைப் பரிமாறிக்கொண்டனர். பின்னர் காயலர்களின் ஒன்றுகூடல் நடைபெற்றது.
அனைவரும் குழுப்படம் எடுக்கையில், சென்னை கல்லூரியில் பயின்று வரும் நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் சிலரும் காயலர்களுடன் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
மஹான் ஸதக்கத்துல்லாஹ் அப்பா அவர்களின் மூன்று ஆண் மக்களுள் இரண்டாமவரும், நடுவுள்ள லெப்பை, அமீருல் உலமா (மார்க்க விற்பன்னர்களின் தலைவர்) ஆகிய அடைமொழிகளால் அழைக்கப்பட்டவருமான சுலைமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்ததற்கிணங்க, நவாப் வாலாஜா அவர்கள், ஹிஜ்ரீ 1199 - கி.பி. 1784ஆம் ஆண்டில், சென்னை அங்கப்ப நாயக்கன் தெரு – மண்ணடி சந்திப்பில் பள்ளியொன்றை நிர்மாணித்து, வக்ஃப் செய்ததாகவும், அதுவே மஸ்ஜிதே மஃமூர் (மஸ்ஜிதுல் மஃமூர்) என்றழைக்கப்படுவதாகவும், அப்பள்ளியிலுள்ள கல்வெட்டு தெரிவிக்கிறது. (கடந்தாண்டு வெளியிடப்பட்ட தகவல் மற்றும் படம்.)
மர்ஹூம் சுலைமான் அவர்கள், மஹான் ஸதக்கத்துல்லாஹ் அப்பாவின் மூன்று ஆண் மக்களுள் இரண்டாமவர் (நடுவிலுள்ளவர்) என்பதால் ‘நடுவுள்ள லெப்பை’ என்றழைக்கப்பட்டு, பின்னர் ‘நடுவுளப்பா’ என அது மருவியதாகவும் அறியப்படுகிறது.
காயல்பட்டினம் புதுக்கடைத் தெருவில், அவர்களின் குடும்பத்தினரது வீடுகள் அமைந்திருந்த பகுதி இன்றளவும் ‘நடுவுளப்பா தலைவாசல்’ என்ற பெயரில் இருந்து வருகிறது.
தகவல் & படங்கள்:
சென்னை மண்ணடியிலிருந்து...
இஸ்ஸத்தீன் ஷாஹுல் ஹமீத்
கல்வெட்டு தகவல்:
காயல்பட்டினத்திலிருந்து...
M.H.செய்யித் முஹம்மத் ஸாஹிப் (ஹாங்காங்)
சென்னை மண்ணடி - மஸ்ஜிதுல் மஃமூர் பள்ளியில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடைபெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை மற்றும் காயலர் ஒன்றுகூடல் குறித்த தகவல்களடங்கிய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |