சஊதி அரபிய்யா தம்மாம், ரியாத், ஜித்தா, மக்கா காயலர்களின் பெருநாள் குடும்ப சங்கமம், சுற்றுலாப் பயணம் குறித்து பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
சஊதி அரபிய்யாவில் ஜூலை 28ஆம் நாள் திங்கட்கிழமை ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. மக்காவிலுள்ள காயலர்கள் புனித ஹரம் ஷரீஃபில் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்.
நோன்புப் பெருநாளை முன்னிட்டு, தம்மாம் - ரியாத் - ஜித்தா - மக்கா ஆகிய நகரங்களில் வசிக்கும் காயலர்கள் தம் குடும்பத்தினருடன் உல்லாச சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். சுற்றுலாக் குழுவினர் யான்போவில் சங்கமித்தனர்.
அங்கு, கலவா அபூபக்கர் அவர்களது ‘யான்போ காயல் ஹவுஸ்’ இல்லத்தில் அனைவருக்கும் சுவையான பெருநாள் விருந்து பரிமாறப்பட்டது.
அன்றிரவு யான்போவில், வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட எழில்மிகு கடற்கரைப் பூங்காவில் அனைவரும் ஒன்றுகூடினர். இதமான தென்றல் காற்று அனைவரையும் தழுவி, இரவு நடுநிசியானதைக் கூட உணர முடியாத அளவுக்கு இனம்புரியா மகிழ்ச்சியில் மூழ்கடித்தது.
யான்போ வாழ் காயலர்களுள் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தோர் பிரத்தியேகமாக தயாரித்துக் கொண்டு வந்திருந்த இரவுணவை அனைவரும் உட்கொண்ட பின்னர், பிரியவே மனமின்றி அனைவரும் பிரிந்து சென்றனர்.
புனித உம்ராவை நிறைவேற்றுவதற்காக தன் மனைவியுடன் வந்திருந்த - அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் காயல்பட்டினம் கிளை துணைத்தலைவர் காயல் முத்துவாப்பா அவர்களும் குடும்ப சகிதம் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
சஊதி அரபிய்யா - யான்போவிலிருந்து...
முஹம்மத் ஆதம் சுல்தான்
படங்கள்:
M.W.ஹாமித் ரிஃபாய்
மற்றும்
S.H.அப்துல் காதிர்
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) ரியாத், தம்மாம், யான்பு காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) மக்கா காயலர்களின் நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |