சிங்கப்பூரில் 28/07/2014 திங்கட்கிழமையன்று ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாள் கொண்டாடப்பட்டது. பெருநாளை முன்னிட்டு, சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் நடத்தப்பட்ட ஈத் மிலன் எனும் பெருநாள் ஒன்றுகூடல் தொடர்பாக பெறப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
பெருநாள் அறிவிப்பு:
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் பேரருளால் இந்த புனித ரமழான் மாதம் 29 நாட்களோடு கடந்த 27/07/2014 அன்று முடிவுக்கு வந்தது. அன்றைய தினம் மஃரிப் தொழுகைக்குப் பிறகு ஷவ்வால் பிறை ஒன்று என அறிவிக்கப்பட்ட நிலையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் தக்பீர் சொல்லப்பட்டு பெருநாள் முடிவு அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூரில் முஸ்லிம்கள் பெருமளவில் வசிக்கும் பெடூக், கெய்லாங், தம்பனிஸ் போன்ற பகுதிகளில் வண்ன விளக்குகளும் பெருநாள் வாழ்த்து தாங்கிய வாசகங்களும் அலங்கார வளைவுகளும் குதூகலத்துடன் கூடிய மக்கள் வெள்ளமும் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.
பெருநாள் ஒன்றுகூடல்:
அறிவிக்கப்பட்ட படி இன்று காலை 07:30 மணி முதல் 09:00 மணி வரை வெவ்வேறு நேரங்களில் சிங்கையில் உள்ள பல பள்ளிகளிலும் பெருநாள் தொழுகை நடத்தப்பட்டது. பெருநாள் தினத்தன்று இரவு மஃரிப் தொழுகைக்குப் பின்னர் பென்கூலன் மஸ்ஜித் வளாகக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் அமைந்துள்ள கேளரங்கில் வைத்து காயலர்களின் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடைபெறும் என மன்றத்தின் பொறுப்பாளர்களால் முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது.
காயலர் சங்கமம்:
அதன்படி பெருநாள் புத்தாடை அணிந்து மழலையர், பெண்கள், ஆண்கள் என உறுப்பினர்கள் தம் குடும்பத்தினருடன் வந்து சேர்ந்தனர். அனைவருக்கும் சுவையான ரோஸ்மில்க் குளிர்பானம் வழங்கப்பட்டது.
பெண்களுக்கு தனியிட வசதி செய்து கொடுக்கப்பட்டிருந்தது. மன மகிழ்ச்சியோடு அவர்கள் தமது தோழியர், உறவினர், அறிமுகமானவர் ஆகியோருடன் பெருநாள் வாழ்த்துச் சொல்லி உரையாடி மகிழ்ந்தனர். குழந்தைகளும் குதூகலத்துடன் ஓடியாடி விளையாடி மகிழ்ந்தனர். உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் முகமன் மற்றும் பெருநாள் வாழ்த்து கூறி தமது அன்பை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வில் சுமார் நூறு பேர் கலந்துகொண்டனர்.
பெருநாள் நன்கொடை:
இஷா தொழுகைக்குப் பின்னர் மீண்டும் ஒன்றுகூடிய உறுப்பினர்கள் அனைவரிடமும் நன்கொடை வசூலிப்பத்தற்காக கடித உறை வழங்கப்பட்டது. உறுப்பினர்கள் மனமுவந்து அளித்த நன்கொடைத் தொகைகள் மூலம் இந்திய ரூபாய் மதிப்பின் படி 52 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டது. இத்தொகை மன்றத்தின் நகர்நலப் பணிக்கான இருப்புக் கணக்கில் சேர்க்கப்பட்டது.
விருந்துபசரிப்பு:
அனைவருக்கும் காயல்பட்டினம் பாரம்பரிய களறி சாப்பாடு, கத்திரிக்காய்-மாங்காய் பரிமாறப்பட்டது. தாலம் பெரிதாக இருந்தமையால் சஹன் ஒன்றுக்கு நான்கு பேர் வீதம் அமர்ந்து உண்டனர். இரவு பத்து மணியளவில் உறுப்பினர்கள் சலாம் கூறி விடைபெற்று தத்தம் இருப்பிடங்களுக்குத் திரும்பினர்.
இறையருளால் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மன்றத்தின் ஆலோசகர் ஹாஜி பாளையம் முஹம்மத் ஹஸன் ஒருங்கிணைப்பில், தலைவர் எம்.அஹ்மத் ஃபுஆத், செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் மற்றும் பொறுப்பாளர் குழுவினர் செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ். ஈத் முபாரக்.
இவ்வாறு அந்த செய்தியறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
ஹிஜாஸ் மைந்தன்
செய்தித்தொடர்பாளர்
காயல் நல மன்றம் – சிங்கப்பூர்
சிங்கை காயல் நல மன்றத்தின் சார்பில் கடந்தாண்டு (ஹிஜ்ரீ 1434) நடத்தப்பட்ட நோன்புப் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கை காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |