சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டத்தில், நலிந்தோருக்கான நலத்திட்ட உதவியாக ரூபாய் 2 லட்சத்து 25 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து, அம்மன்றத்தின் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் வெளியிட்டுள்ள அறிக்கை:-
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் செயற்குழுக் கூட்டம், இம்மாதம் 08ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 19.45 மணியளவில், மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தலைமையுரை:
ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக் கிராஅத் ஓதி கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். தலைமை தாங்கிய மன்ற ஆலோசகர் பாளையம் முஹம்மத் ஹஸன் அனைவரையும் வரவேற்று தலைமையுரையாற்றினார்.
கடந்த நோன்புப் பெருநாளையொட்டி, சிங்கப்பூர் பென்கூலன் பள்ளியில் மன்றத்தால் நடத்தப்பட்ட பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி குறித்த நிறைகுறைகளை உறுப்பினர்களிடம் கேட்டறிந்தார். உறுப்பினர்கள் யாவரும் இந்நிகழ்ச்சி குறித்து தமது முழு திருப்தியை வெளிப்படுத்திப் பேசினர். அல்ஹம்துலில்லாஹ்.
எதிர்வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளையொட்டி, இன்ஷாஅல்லாஹ் வரும் அக்டோபர் 05ஆம் நாளன்று, சிங்கப்பூர் Fairy Point Chalet - 1இல் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளதாக அவர் அறிவித்தார்.
புதிய உறுப்பினர் அறிமுகம்:
மன்றத்தில் புதிய உறுப்பினராக தன்னை இணைத்துக்கொண்ட வஸீர் அஹ்மத் சிற்றுரையாற்றினார். தன்னை அறிமுகப்படுத்திப் பேசிய அவர், சிங்கை காயல் நல மன்றத்தில் உறுப்பினராவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும், சிங்கையில் தனக்குத் தகுந்த வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு அருள் புரிந்த எல்லாம்வல்ல அல்லாஹ்வுக்கும், துவக்கம் முதல் துணை நின்று வழிகாட்டி சிங்கை காயல் நல மன்றத்தினருக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
கூட்ட ஒருங்கிணைப்பாளர் உரை:
நடப்பு கூட்டத்தை ஒருங்கிணைத்த - துணைக் குழு உறுப்பினர் எம்.ஜெ.செய்யித் அப்துர்ரஹ்மான் சிற்றுரையாற்றினார்.
சிங்கை காயல் நல மன்றத்தின் 10 ஆண்டு கால சேவையின் பலனாக நகரில் நல்ல பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகக் கூறிய அவர், மன்றத்திடம் உதவி கோரி விண்ணப்பிப்போருக்கு, அவர்களது விண்ணப்பங்களின் நடப்பு நிலை குறித்து உரிய நேரத்தில் முறைப்படி அறியத் தருவதன் மூலம், ஒருவேளை அவர்களது விண்ணப்பங்கள் சிங்கை மன்றத்தால் ஏற்கப்படாவிடில், அவர்கள் மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொள்ள விண்ணப்பதாரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கூறினார்.
மன்றத்தின் கூட்ட நடவடிக்கைகள் மூலம் அதன் நகர்நல செயல்பாடுகளை அனைவரும் அறிந்திரும் பொருட்டு, செயற்குழுக் கூட்டங்களுக்கு அதிகளவில் பொதுக்குழு உறுப்பினர்களை சிறப்பழைப்பாளர்களாக அழைக்கலாம் என்ற தனது ஆலோசனையை வழங்கினார்.
செயலரின் கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
மன்றத்தின் கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கை, அக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து, மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் விளக்கிப் பேசினார். அவரது உரையில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்:
>>> கடந்த ரமழான் மாதத்தில், ‘அத்தியவாசிய சமையல் பொருளுதவி’த் திட்டத்தின் கீழ், நகரின் ஏழைக் 120 குடும்பத்தினருக்கு சமையல் பொருளுதவி வெற்றிகரமாக வினியோகித்து முடிக்கப்பட்டுள்ளது. அவற்றுள் 110 பேருக்கு சிங்கை காயல் நல மன்றமும், 10 பேருக்கு ஐக்கிய அரபு அமீரகம் - அபூதபீ காயல் நல மன்றமும் அனுசரணையளித்துள்ளனர்.
>>> மன்றத்தின், ‘முதியோர் நலத்திட்ட’த்தின் கீழ், 8 முதியோருக்கு 12 மாதங்களுக்கு உதவி வழங்குவதற்கேற்ப உதவித் திட்டம் பிரித்து வகைப்படுத்தப்பட்டு, உறுப்பினர்களிடம் அனுசரணை கோரப்பட்டது. அதனடிப்படையில், அறிவித்த சில நாட்களிலேயே உறுப்பினர்கள் ஆர்வத்துடன் அனுசரணையளித்ததன் பலனாக, வரும் 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இத்திட்டத்திற்கான நிதி ஏற்கனவே பெறப்பட்டுவிட்டது. அனுசரணையளித்த உறுப்பினர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.
(‘முதியோர் நலத்திட்ட’த்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் உதவிகள் குறித்து, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி கே.எம்.டி.சுலைமான் தொலைதொடர்பு மூலம் மன்றச் செயலரிடம் விவரித்தார். அடுத்த பருவத்திற்கும் இதே பயனாளிகளுக்கு உதவியைத் தொடரலாம் என அவர் பரிந்துரைத்தார்.)
>>> ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோஸியேஷன் என்ற பெயரில் மருத்துவ கூட்டமைப்பு உலக காயல் நல மன்றங்களால் துவக்கப்பட்டு இயங்கி வருவதால், மன்றத்தின் மருத்துவ உதவிகள் அனைத்தும் ஷிஃபா மூலமே செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை இந்திய ரூபாய் சுமார் 26 லட்சம் வரை - சிங்கை காயல் நல மன்றம் உள்ளிட்ட உலக காயல் நல மன்றங்களின் அனுசரணையுடன் மருத்துவ உதவி பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
>>> மன்றத்தின் ‘பயன்படுத்தப்பட்ட நல்லாடை வழங்கும் திட்ட’த்தின் கீழ், 60 கிலோ எடையளவில் மன்ற உறுப்பினர்களிடமிருந்து நல்லாடைகள் சேகரிக்கப்பட்டு, காயல்பட்டினத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேவையுடையோருக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக உதவிய மன்ற உறுப்பினர்கள், ஊரில் வினியோகப் பணிகளைச் செய்த சேவை உள்ளங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
இவ்வாறு செயலரின் அறிக்கையில் தகவல்கள் இடம்பெற்றன.
வரவு-செலவு கணக்கறிக்கை:
மன்றத்தின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை, மன்றப் பொருளாளர் கே.எம்.என்.மஹ்மூத் ரிஃபாய் கூட்டத்தில் சமர்ப்பித்தார். அதில் இடம்பெற்ற முக்கிய தகவல்கள்:-
>>> மன்றத்தின் நடப்பு நிதிநிலை குறித்து விளக்கப்பட்டது.
>>> பல்வேறு உதவிகள் கோரி காயல்பட்டினத்திலிருந்து மன்றத்தால் பெறப்பட்ட விண்ணப்பங்கள், ஷிஃபா மூலம் பெறப்பட்ட மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களுக்கான நிதியொதுக்கீடு குறித்து விளக்கப்பட்டது.
>>> உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட சந்தா, நன்கொடை தொகைகள் குறித்த கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டன.
>>> நடப்பு காலாண்டுக்கான உறுப்பினர் சந்தா நிலுவையிலுள்ளோருக்கு நினைவூட்டல் செய்யப்பட்டுள்ளது.
நிதியொதுக்கீடு:
மன்றத்தால் பெறப்பட்ட - உதவி கோரும் விண்ணப்பங்கள் மீது பரிசீலனைக்குப் பிறகான பரிந்துரை அறிக்கையை விண்ணப்ப பரிசீலனைக் குழுவினரான - மன்றச் செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத், நிர்வாக ஒருங்கிணைப்பாளர் ஹாஃபிழ் எம்.ஏ.சி.செய்யித் இஸ்மாஈல் ஆகியோர் இணைந்து சமர்ப்பித்தனர்.
பெறப்பட்ட பரிந்துரை அறிக்கையின் படி, கல்வி உதவி கோரி பெறப்பட்ட விண்ணப்பங்களுக்காக, ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் தொகையும், ஷிஃபா மூலமான மருத்துவ உதவி கோரும் விண்ணப்பங்களுக்காக ரூபாய் 65 ஆயிரம் நிதியும் இக்கூட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மருத்துவர் உரை:
இக்கூட்டத்தில், காயல்பட்டினத்தைச் சேர்ந்த இளம் மருத்துவர் டாக்டர் எம்.ஏ.அஷ்ஃபக் அஹ்மத் சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டு சிற்றுரையாற்றினார்.
மன்றத்தின் நகர்நலப் பணிகளைப் புகழ்ந்து பேசிய அவர், புற்றுநோயின் பல்வேறு வகைகள், அதற்கான காரணிகள், நோயின் தாக்கங்கள் குறித்துப் பேசியதோடு, காயல்பட்டினத்தில் புற்றுநோய் பரவலுக்கு அங்குள்ள டி.சி.டபிள்யு. தொழிற்சாலையின் தாக்கம் முக்கிய காரணமாக உள்ளதாகவும் கூறினார். உரையின் நிறைவில், உறுப்பினர்களின் மருத்துவ சந்தேகங்களுக்கு அவர் விளக்கமளித்தார்.
காயல்பட்டினம் எஸ்.ஏ.அஷ்ரஃப் இக்கூட்டத்தில் மற்றொரு சிறப்பழைப்பாளராகக் கலந்துகொண்டார்.
உறுப்பினர் கருத்துப் பரிமாற்றம்:
கூட்டத்தில் பங்கேற்றோர் கருத்துப்பரிமாற்றம் செய்ய நேரம் அளிக்கப்பட்டது. மன்றத்தின் இதுநாள் வரையிலான நகர்நலப் பணிகள் சிறப்புற செயல்படுத்தப்பட, அதன் பொருளாளராகவும், பின்னர் துணைச் செயலாளராகவும் இருந்து சேவையாற்றிவிட்டு, தற்போது சிங்கப்பூரிலிருந்து விடைபெற்று, கத்தர் நாட்டில் பணிபுரியச் சென்றுள்ள கே.எம்.டீ.ஷேக்னா லெப்பையின் பங்களிப்பு மகத்தானது என அனைவரும் புகழ்ந்துரைத்து, அவரது வருங்காலம் சிறக்கவும், கத்தர் நாட்டில் அவரது பணிக்காலம் எவ்வித அவதியுமின்றி சிறப்புற அமையவும் பிரார்த்தனை செய்தனர்.
மன்றத்தின் நிர்வாகப் பணிகளைப் பகிர்ந்துகொள்ளும் வகையில், புதிய துணைச் செயலாளராக ஜெ.அபுல் காஸிம் நியமிக்கப்பட்டார்.
மன்றத்தின் ‘உண்டியல் மூலம் நிதி திரட்டும் திட்ட’த்தின் கீழ், நடப்பு பருவத்தில் உறுப்பினர்களுக்கு உண்டியல்களை வழங்கி, நிதியுடன் அவற்றைச் சேகரிக்கும் பொறுப்பு எம்.எஸ்.அபுல் காஸிம், ஜெ.அபுல் காஸிம், வஸீர் அஹ்மத் ஆகியோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மன்றத்தால் அடுத்து வழங்கப்படவுள்ள கல்வி உதவித்தொகை அனைத்தும், உறுப்பினர்களின் உண்டியல் நிதியிலிருந்தே வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
ஹஜ் பெருநாளை முன்னிட்டு சமையல் பொருளுதவி:
எதிர்வரும் ஹஜ் பெருநாளையொட்டி அத்தியாவசிய சமையல் பொருளதவி செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டு, அதற்கான ஒருங்கிணைப்பாளராக ஏ.எச்.காதிர் ஸாஹிப் அஸ்ஹர் நியமிக்கப்பட்டார்.
சிங்கை நிறுவனத்துடன் இணைந்து செயல்திட்டம்:
"Singapore Workforce Skills Qualification" என்ற தலைப்பில், சிங்கப்பூர் அரசாங்கம் அந்நாட்டின் பணியாளர்களது திறனை மேம்படுத்த தொடர் வகுப்புகளை நடத்தி வருகிறது. அந்நாட்டிலுள்ள Eduquest International Institute நிறுவனத்துடன் சிங்கப்பூர் காயல் நல மன்றமும் இணைந்து, ‘உணவு மற்றும் சுகாதாரம்’ எனும் தலைப்பிலான வாராந்திர வகுப்பை நடத்திட இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இவ்வகுப்பின் மூலம், அந்நாட்டு மக்களுடன், அங்கு நிரந்தரக் குடியுரிமையுடன் பணிபுரியும் காயலர்களுக்கும் இவ்வகுப்பில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கூட்ட ஒருங்கிணைப்பாளர்:
மன்றத்தின் அடுத்த செயற்குழுக் கூட்ட ஒருங்கிணைப்பாளராக ஹாஃபிழ் எம்.ஐ.அபூபக்கர் ஸித்தீக் நியமிக்கப்பட்டார்.
விவாதிக்க வேறம்சங்களில்லா நிலையில், ஹாஃபிழ் எம்.எஸ்.அபுல் காஸிம் துஆவுடன் 21.40 மணியளவில் கூட்டம் இறையருளால் இனிதே நிறைவுற்றது. எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இரவுணவு விருந்துபசரிப்பைத் தொடர்ந்து அனைவரும் வசிப்பிடம் திரும்பினர்.
இவ்வாறு, சிங்கப்பூர் காயல் நல மன்ற செயலாளர் எம்.எம்.மொகுதூம் முஹம்மத் தனதறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தகவல் & படங்கள்:
M.N.L.முஹம்மத் ரஃபீக் (ஹிஜாஸ் மைந்தன்)
செய்தி தொடர்பாளர்
செய்தி தமிழாக்கம்:
எஸ்.கே.ஸாலிஹ்
சிங்கப்பூர் காயல் நல மன்றத்தின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
சிங்கப்பூர் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |