தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், காயல்பட்டினம் அலியார் தெருவின் தென்பகுதியில், குட்டியப்பா பள்ளிக்கு சற்று முன்பாக அமைந்துள்ளது மஸ்ஜிதுத் தவ்ஹீத் பள்ளிவாசல். இப்பள்ளி, 13.07.2012 அன்று திறக்கப்பட்டது.
நிர்வாகம்:
இப்பள்ளிக்கென தனி நிர்வாகம் கிடையாது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் கிளை தலைவர் எஸ்.ஷம்சுத்தீன், துணைத்தலைவர் ஹனீஃப், செயலாளர் ‘லக்கி கூலர்’ மக்கீ, துணைச் செயலாளர் அபூதாஹிர், பொருளாளர் ‘ஜப்பான்’ சுலைமான் ஆகியோரைக் கொண்ட நிர்வாகக் குழு இப்பள்ளியை நிர்வகித்து வருகிறது.
செயல்பாடுகள்:
நாள்தோறும் ஐவேளை தொழுகை நடத்தப்பட்டு வரும் இப்பள்ளியில், ரமழான் அல்லாத காலங்களில் நாள்தோறும் ஃபஜ்ர் தொழுகைக்குப் பின் சில நிமிடங்கள் திருக்குர்ஆன் விளக்கவுரை நடத்தப்படுகிறது. வாரந்தோறும் புதன்கிழமை பின்னேரம் ஹதீஸ் வகுப்பும், சனி பின்னேரம் திருக்குர்ஆன் வகுப்பும் மஃரிப் தொழுகைக்குப் பின் நடத்தப்பட்டு வருகிறது.
சிறுவர் - சிறுமியருக்காக இப்பள்ளியில் திருக்குர்ஆன் ஓத பயிற்றுவிப்பதற்கென மக்தப் நடத்தப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை 07.00 மணிக்கும், மாலை 05.00 மணிக்கும் நடத்தப்படும் இந்த மக்தபில், உள்ளூரைச் சேர்ந்த சிறுவர் - சிறுமியர் பயின்று வருகின்றனர்.
பள்ளி செல்லும் மாணவ-மாணவியர் தமது வாராந்திர விடுமுறையைப் பயனுள்ள வகையில் கழித்திடச் செய்வதற்காக, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் தீனிய்யாத் – மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்றுவிக்கப்படுகிறது. இதில் சுமார் 100 மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர்.
ஆண்டுதோறும் கோடை விடுமுறையை முன்னிட்டு மே மாதத்தில், நகர பள்ளி மாணவ-மாணவியருக்கான கோடைகால மார்க்க அடிப்படைக் கல்வி பயிற்சி முகாம் (Summer Course) நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டுதோறும் ஹஜ் பெருநாளையொட்டி த.த.ஜ. நகர கிளை சார்பாக செய்யப்பட்டு வரும் உள்ஹிய்யா ஏற்பாடுகள், ரமழான் இறுதியில் ஏழை - எளியோருக்கு வழங்கப்படும் ஃபித்ரா உணவுப் பொருட்கள் வினியோகம் உள்ளிட்ட செயல்திட்டங்கள் கடந்த ஆண்டு முதல் இப்பள்ளி வளாகத்திலேயே செய்யப்பட்டு வருகிறது.
ஏழை - எளியோருக்கு உதவும் நோக்குடன் ஜகாத் - ஸதக்கா நிதி சேகரிக்கப்பட்டு, “பைத்துல்மால்” பிரிவும் இப்பள்ளி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது.
ரமழான் மாதத்தில் நாள்தோறும் லுஹர் தொழுகைக்குப் பின் மிஷ்காத் வகுப்பு, மாலையில் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி, இரவுத் தொழுகை, அதன் பின்னர் தொடர் சொற்பொழிவும் நடத்தப்படுகிறது.
இமாம் - பிலால்:
இப்பள்ளியின் கத்தீபாக - ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த மவ்லவீ அப்துல் மஜீத் உமரீ பணியாற்றி வருகிறார். இங்கு நடத்தப்படும் மார்க்க விளக்கவுரை வகுப்புகள் அனைத்தையும் இவரே நடத்தி வருகிறார். பள்ளியின் இமாம் மற்றும பிலால் பொறுப்புகளை காயல்பட்டினம் சொளுக்கார் தெருவைச் சேர்ந்த ஸாம் ஷிஹாபுத்தீன் ஏற்று பணியாற்றி வருகிறார்.
நடப்பாண்டு ரமழான் மாதத்தில் இஷா தொழுகை 20.30 மணிக்கும், இரவுத் தொழுகை 21.00 மணிக்கும் துவங்கின. இரவுத்தொழுகையை ஹைதராபாத்தைச் சேர்ந்த சமீஉல்லாஹ் வழிநடத்தினார்.
இஃப்தார் ஏற்பாடுகள்:
வழமை போல நடப்பாண்டிலும் ரமழானை முன்னிட்டு, நாள்தோறும் நோன்புக் கஞ்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டது. மாலையில் ஊற்றுக்கஞ்சி வினியோகதில், சுமார் 75 குடும்பங்கள் பெற்றுச் சென்றனர்.
இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி இப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நகரின் பல பகுதிகளைச் சேர்ந்த முதல் 60 முதல் 80 ஆண்களும், சுமார் 20 பெண்களும் பங்கேற்றனர். பெண்களுக்கு நோன்பு துறக்க தனியிட வசதி செய்யப்பட்டிருந்தது.
இஃப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பேரீத்தம்பழம், தண்ணீர், வடை வகைகள், குளிர்பானம், அவ்வப்போது பழங்கள் பரிமாறப்பட்டன.
14.07.2014 அன்று இங்கு நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியின் படப்பதிவுகள் வருமாறு:-
காயல்பட்டினம் நகரிலேயே - இப்பள்ளியிலும், கோமான் மொட்டையார் பள்ளியருகிலுள்ள பெண்கள் தைக்காவிலும் மட்டுமே பெண்களுக்கும் இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
இப்பள்ளியின் கடந்தாண்டு இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சி குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
நகர பள்ளிகளில் நடைபெற்ற இஃப்தார் நிகழ்ச்சிகள் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |