காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.
அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் கோமான் மேலத்தெரு, கோமான் நடுத்தெரு, கோமான் கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடத்திற்கு, இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இருவர் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.
கோமான் ஜமாஅத் சார்பாக பொது வேட்பாளரை அறிவிப்பதற்கான ஜமாஅத் கூட்டம், 31.08.2014 அன்று கோமான் மொட்டையார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து எஸ்.ஐ.அஷ்ரஃப், நெய்னா முஹம்மத் ஆகியோர் மனு அளித்திருந்தனர். ஜமாஅத் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில், ஏ.ஐ.அஷ்ரஃப் ஜமாஅத் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
காயல்பட்டினம் - 28/65, கோமான் நடுத்தெரு என்ற முகவரியைச் சேர்ந்த எஸ்.ஐ.அஷ்ரஃபுக்கு வயது 49. 05ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். காலஞ்சென்ற கே.எம்.செய்யித் இஸ்மாஈல் - ஆபிதா பீவி தம்பதியின் மகனான இவருக்கு, நூர் ஜஹான் என்ற மனைவியும், மொகுதூம் அனீஸா என்ற மகளும் உள்ளனர்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யைச் சேர்ந்த அமலக்கனி வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.
44 வயதான இவர் 05ஆம் வகுப்பு வரை பயின்றுள்ளார். ஏ.மரிய அந்தோணி - மரிய செல்வி தம்பதியின் மகளான இவர், எஸ்.மெல்கிஸ் என்பவரின் மனைவியாவார். இவருக்கு 4 ஆண் குழந்தைகளும், 1 பெண் குழந்தையும் உள்ளனர்.
மீனவ மகளிர் கூட்டுறவு சங்கத் தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக பொறுப்பு வகித்து வருகிறார்.
அமலக்கனி, நாளை (செப்டம்பர் 03) காலை 11.00 மணியளவிலும், எஸ்.ஐ.அஷ்ரஃப் காலை 11.30 மணியளவிலும், காயல்பட்டினம் நகராட்சியில் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளதாகத் தெரிகிறது. |