சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்ற செயற்குழுவில், நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரத்து 650 தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:-
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருளால் ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் (RKWA) 43ஆவது செயற்குழுக் கூட்டம், 29.08.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், மன்ற துணைத் தலைவர் ஹாஜி முஹம்மத் நூஹ் இல்லத்தில், மன்ற ஆலோசனைக் குழு உறுப்பினர் ஹாஜி ஹைதர் அலீ தலைமையில் நடைபெற்றது.
மன்றத் தலைவர் ஹாஃபிழ் ஷெய்கு தாவூத் இத்ரீஸ் இறைமறை வசனங்களையோதி கூட்டத்தைத் துவக்கி வைக்க, பொறியாளர் முஹ்யித்தீன் ஸதக்கதுல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் கூட்டத் தலைவர் ஹைதர் அலி தனது தலைமையுரையில்....
சில நாட்களுக்கு முன் நமதூரில் ஒரு சிலரால் திட்டமிட்டு இரண்டு சமுதாய மக்களையும் சதி வலையில் சிக்க வைத்து, பெரும் கலவர பூமியாக மாற்ற நினைத்த அனைத்து செயல்களையும் கண்டுபிடித்துக் களைந்து, அமைதிக்கு வழிவகுத்து, இரண்டு தரப்பினருக்குமிடையில் சுமூகமான நல்லிணக்கத்தை உருவாக்கித் தந்த அரசு தரப்பு அதிகாரிகள், முஸ்லிமல்லாத சகோதரர்கள், மாவட்ட நிர்வாகம், வட்ட நிர்வாகம், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை, அதனுடன் தோளோடு தோள் நின்று போராடிய அரசியல் கட்சிகள், அனைத்து சமூக அமைப்புகள், அவர்களோடு ஒற்றுமையாக நின்ற ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும், எல்லாவற்றுக்கும் மேலாக எல்லாம்வல்ல இறைவனுக்கும் எண்ணிலடங்கா நன்றி.... அல்ஹம்துலில்லாஹ்.
அடுத்து நமதூரில் பெண்கள் சுய தொழில் - குறிப்பாக ஆயத்த ஆடைகள் தைத்து ஏற்றுமதி மற்றும் உள்நாட்டு வணிகம் செய்வதற்கு நமதூர் சமூக அமைப்புகள் முன்வந்து, சமூக நலக்கூடம் உருவாக்க முனைந்தால், எமது நற்பணி மன்றம் தன்னாலியன்ற ஆக்கமும், ஊக்கமும் தரும். அதற்கான ஆயத்தப் பணிகளைச் செய்திட நமதூர் சமூக அமைப்புக்கள் முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். இவ்விரு கருத்துக்களும் இக்கூட்டத்தில் தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டன.
நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
மன்ற துணைப் பொருளாளர் சகோதரர் ஷம்சுத்தீன், இருப்பு நிதிநிலை பற்றி தெரிவித்தார், அதனடிப்படையில் ஷிஃபா மூலம் பெறப்பட்ட கடிதங்கள் சக உறுப்பினர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, ரூபாய் 1 லட்சத்து 38 ஆயிரத்து 650 தொகை மருத்துவ தேவைகளுக்கும், கல்வி உதவி கோரி நேரடியாகப் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு ரூபாய் 45 ஆயிரம் தொகையும், சிறுதொழில் வகைக்கு ரூபாய் 44 ஆயிரம் தொகையும், இதர வகைக்கு ரூபாய் 5 ஆயிரம் தொகையும் என - மொத்தம் ரூபாய் 2 லட்சத்து 32 ஆயிரத்து 650 தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.
துணைச் செயலாளர் முஹ்சின், கடந்த ரமலான் உணவுப் பொருள் வழங்கும் திட்டம் சிறப்பாக நிறைவுற்றதை தெரிவித்து, அதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து உறுப்பினர்களுக்கும் நன்றி கூறினார்.
மன்றத்தின் கூடுதல் துணைப் பொருளாளர் வெள்ளி சித்தீக், மன்றம் இவ்வாண்டு வழங்கிய cut off விழிப்புணர்வு பரிசுத்தொகை விபரத்தை அனைத்து உறுப்பினர்களின் முன் சமர்ப்பித்தார்.
இக்ராஃவின் செயல்பாடுகள்:
மன்றத் தலைவரும், இக்ராஃ கல்விச் சங்க தலைவருமான ஹாஃபிழ் ஷெய்கு தாவூத் இத்ரீஸ், நம் ஏனைய உறுப்பினர்களின் வேண்டுகோளுக்கினங்க இக்ராவின் செயல்பாடுகள், இதுவரை ஏழை எளிய மக்கள் பயனடைந்த விபரங்களைப் பரிமாறிக் கொண்டார். அத்தோடு இக்ராவிற்கு ரியாத் மன்றம் சார்பாக அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என உறுதி பட தெரிவித்தார். அப்பொறுப்பை செயற்குழு உறுப்பினர் முஹம்மது நியாஸ் இடம் ஒப்படைத்து, அனைத்து சக உறுப்பினர்களின் ஆதரவையும் கோரினார்.
அத்தோடு, தான் தலைமை பொறுப்பேற்றதற்கு ஜித்தா மற்றும் உலக மன்றங்கள் வாழ்த்து கூறியதற்கு நன்றியை தெரிவித்ததோடு, அனைத்து மன்றங்களின் மேலான ஒத்துழைப்பையும் கேட்டுக்கொண்டார்.
ஷிஃபா செயல்பாடுகள்:
உலக காயல் நல மன்றங்களின் மருத்துவக் கூட்டமைப்பான ஷிஃபாவின் செயற்குழு கூட்டம் கடந்த நோன்புப் பெருநாள் விடுப்பில் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கெடுத்ததன் அடிப்படையில், அதன் சாரம்சத்தை மன்ற துணைத் தலைவர் முஹம்மது நூஹ் சக உறுப்பினர்களோடு பகிர்ந்து, சில சந்தேகங்களுக்கும் விளக்கமளித்தார்.
48ஆவது பொதுக்குழுக் கூட்டம்:
மன்றத்தின் 48ஆவது பொதுக்குழுக் கூட்டம், கடந்த ரமலான் மாதத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு, இறுதி கட்டத்தில் நடத்த இயலாமலாகவிட்ட காரணத்தினால், இன்ஷாஅல்லாஹ் நடப்பு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில், ரியாத் பத்ஹாவிலுள்ள ஷிஃபா அல் ஜசீரா பாலி க்ளினிக் ஆடிட்டோரியத்தில் நடைபெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ரியாத் மாநகருக்கு புதிதாக வந்திருக்கும் நமதூர் அன்பர்கள் இதையே தக்க அழைப்பாக ஏற்று, இதுவரை நமது அமைப்பில் இணையாத அன்பு உள்ளங்கள் அனைவரும் ஊரின் நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டு செயல்படும் இக்கூட்டத்தில் அவசியம் கலந்து சிறப்பிக்க அன்புடன் கேட்டுக் கொள்கிறது.
இச்செயற்குழு கூட்டம் ஒருங்கினைப்பாளர்களான சகோதரர்கள் எம்.இ.எல்.நுஸ்கீ, கூஸ் அபூபக்கர், நஈமுல்லாஹ், கே.எஸ்.எம்.அப்துல் காதர், எஸ்.எல்.சதக், ஏ.டீ.சூஃபீ ஆகியோரின் அனுசரணையோடு நடாத்தப்பட்டது.
சிறப்புப் பார்வையாளர் உரை:
இச்செயற்குழு கூட்டத்திற்கு சிறப்புப் பார்வையாளராக சகோதரர் சதக் ஷமீல் அழைக்கப்பட்டிருந்தார். அவர் பேசுகையில், எம் மன்றம் சிறப்பாக செயல்படுவதாகவும், அதே நேரத்தில் உறுப்பினர்களின் சந்தா ஏதும் நிலுவையிருந்தால் 10 பேர் கொண்ட குழு அமைத்து அதை வசூலிக்க வகை செய்யலாம் என்றும் கூறினார்.
அதற்கு தலைவர் மற்றும் செயலாளர் நன்றி தெரிவித்து பதில் கூறுகையில், ரியாத் காயல் நல மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படுவதால், அத்தருணங்களில் உறுப்பினர்கள் தமது நிலுவைத் தொகைகளை முறையாக செலுத்தும் நிலையுள்ளதாகவும், எனவே நிலுவை பெரும்பாலும் இருப்பதில்லை என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் எஸ்.எல்.சதக்கதுல்லாஹ் நன்றி கூற, ஹாஃபிழ். பீ.எஸ்.ஜெ.ஜைனுல் ஆப்தீன் துஆ ஓத, நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் ஓதப்பட்டு, அத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல் & படங்கள்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர் - ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் காயல் நல மன்றத்தின் 42ஆவது செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
[செய்தி திருத்தப்பட்டது @ 14:13 / 03.09.2014] |