காயல்பட்டினம் நகராட்சியில் வெற்றிடமாக உள்ள 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பு உட்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி மன்ற வெற்றிடங்களுக்கும் தேர்தல் அறிவிப்பு மறு ஆணை, கடந்த ஆகஸ்ட் 28 அன்று வெளியானது.
அதன்படி செப்டம்பர் 4 வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்றும், செப்டம்பர் 18 தேர்தல் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
காயல்பட்டினம் நகராட்சியின் கோமான் மேலத்தெரு, கோமான் நடுத்தெரு, கோமான் கீழத்தெரு, அருணாச்சலபுரம், கடையக்குடி (கொம்புத்துறை) ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 01ஆவது வார்டு உறுப்பினர் பொறுப்பிடத்திற்கு, இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின்படி இருவர் போட்டியிடவுள்ளதாகத் தெரிகிறது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், காயல்பட்டினம் கடையக்குடி (கொம்புத்துறை)யைச் சேர்ந்த அமலக்கனி வேட்பாளராக அண்மையில் அறிவிக்கப்பட்டார்.
இன்று (செப்டம்பர் 03) காலை 11.55 மணியளவில் அவர் காயல்பட்டினம் நகராட்சி அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்தார். நகராட்சி ஆணையரும் - தேர்தல் நடத்தும் உதவி அலுவலருமான ம.காந்திராஜ் வேட்பு மனுவைப் பெற்றுக்கொண்டார்.
பின்னர் அவருக்கு, அக்கட்சியைச் சேர்ந்தவரும் - காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவருமான ஐ.ஆபிதா ஷேக், அதிமுக காயல்பட்டினம் நகர துணைச் செயலாளர் கே.ஏ.ஷேக் அப்துல் காதிர், காயல் மவ்லானா ஆகியோர் சால்வை அணிவித்தனர்.
ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர், அதிமுக சிறுபான்மைப் பிரிவு மாவட்ட செயலாளர் எம்.ஜெ.செய்யித் இப்றாஹீம், அதிமுகவினரும் - நகர்மன்ற உறுப்பினர்களுமான ஜெ.அந்தோணி, எம்.எஸ்.எம்.ஷம்சுத்தீன் மற்றும் கட்சியினர் இதன்போது உடனிருந்தனர்.
கோமான் ஜமாஅத் வேட்பாளரான எஸ்.ஐ.அஷ்ரஃப் நாளை (செப்டம்பர் 04) காலையில் வேட்பு மனு தாக்கல் செய்வார் என தெரிகிறது. |