பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது.
பகல் 2.25 மணியளவில் பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பை வழங்கினார். சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா,
சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதாக நீதிமன்றம் அறிவித்தது.
தற்போது தண்டனை காலங்கள் குறித்த விவாதங்கள் நடைபெற்று வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
அடுத்து என்ன?
(1) ஜெயலலிதா முதலமைச்சராக தொடரலாமா?
கடந்தாண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஒன்றின் படி, குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டவர் உடனடியாக தனது பதவியை இழக்கிறார்.
எனவே ஜெயலலிதா முதலமைச்சராக தொடர முடியாது.
(2) அமைச்சரவை தொடருமா?
அமைச்சரவை என்பது முதலமைச்சரால் நியமிக்கப்படுவது. எனவே அமைச்சர்கள் பதவி இழப்பார்கள். அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள்
மீண்டும் கூடி - புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்த முதல்வராக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர்
செந்தில் பாலாஜி, முன்னாள் நிதி அமைச்சர் நெடுஞ்செழியன் மனைவி விசாலாட்சி நெடுஞ்செழியன், முன்னாள் தலைமை செயலர் ஷீலா
பாலக்கிருஷ்ணன் பெயர்கள் பேசப்படுகின்றன.
(3) ஜெயலலிதா சிறை செல்லவேண்டுமா?
தற்போதைய வழக்கில் - நிருபனமான குற்றங்களுக்கு குறைந்த தண்டனை ஓர் ஆண்டு சிறை; அதிக பட்சம் ஏழு ஆண்டுகள் சிறை.
மூன்றாண்டுகளுக்கு குறைவாக நீதிபதி தண்டனை
வழங்க முடிவெடுத்தால், மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கி - அவரே தண்டனையை நிறுத்தலாம். அதன் மூலம் மேல் முறையீட்டில்
தீர்ப்பு வரும்வரை சிறை செல்ல தேவையில்லை.
மூன்றாண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை வழங்க நீதிபதி முடிவெடுத்தால், மேல் முறையீட்டிற்கு தண்டனை பெற்றவர்
உயர் நீதிமன்றம் செல்லவேண்டும். அது வரை சிறை செல்ல வேண்டும்.
(4) ஜெயலலிதா மீண்டும் முதல்வராகலாமா?
என்ன நடந்தாலும், மீண்டும் தேர்தலில் நின்று, சட்டமன்ற உறுப்பினராகி தான் முதல்வராக அவர் தேர்வு செய்யப்பட முடியும். தீர்ப்பினை தொடர்ந்து - அவர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார்.
சட்டமன்ற உறுப்பினராக இல்லாவிட்டாலும், 6 மாதம் வரை ஒருவர் முதல்வராக இருக்கலாம் என சட்டம் அனுமதித்தாலும், அவ்வாறு நியமனம் செய்யப்படுபவர், இடைத்தேர்தலில் சட்டமன்ற உறுப்பினராக எந்த தடையும் இருக்க கூடாது என உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஒன்று கூறுகிறது. தற்போதைய வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் (அதற்கு தடை வழங்கப்படும் வரை), ஜெயலலிதா சட்டமன்ற உறுப்பினராக தகுதி இழக்கிறார். எனவே - 6 மாத சலுகை அவருக்கு பொருந்தாது.
மேல்முறையீட்டில் - நீதிமன்றம், தண்டனைக்கு மட்டும் தடை வழங்காமல், தீர்ப்புக்கும் தடை வழங்கினால் - அவர் மீண்டும், போட்டியிட்டு, தேர்வாகி முதல்வராகலாம். ஆனால் - தண்டனைக்கு மட்டும் தடைவிதித்து, தீர்ப்புக்கு தடை விதிக்கவில்லை என்றால் - அவரால் தேர்தலில் மீண்டும் நிற்க முடியாது.
(5) தண்டனை காலத்திற்கு பின் முதல்வராகலாமா?
தண்டனை காலத்திற்கு பின் ஆறு ஆண்டுகள் பதவிகள் வகிக்க சட்டம் அனுமதிக்காது.
[செய்தி திருத்தப்பட்டது @ 5:00 pm / 27.09.2014] |