பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இச்சூழலில் அடுத்த முதல்வரை தேர்வு செய்வது குறித்து விவாதிக்க நிதியமைச்சர் பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. அதில் தமிழகத்தின் அடுத்த முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து முக்கிய நிர்வாகிகளுடன் மாலை 6 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம் தமிழக ஆளுனர் ரோசய்யாவை சந்திக்க செல்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பதவியேற்பு - நாளை நடைபெறும் என்றும், அவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்பர் என்றும் தெரிகிறது.
கட்சியின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வம் 1951ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி தேனி மாவட்டம் பெரியகுளத்தில் பிறந்தார்.
இவர் 1996ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பெரியகுளம் நகராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் 2001 சட்டசபை தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து, முதன்முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001 மே 19ம் தேதி, ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய் துறை அமைச்சராக பதவியேற்றார். பின் முதல்வராக இருந்த ஜெயலலிதா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்புபடி, பதவியில் இருந்து ராஜினாமா செய்தார்.
இதையடுத்து செப்டம்பர் 21ம் தேதி முதல்வராக பதவியேற்றார். 2002 மார்ச் 1ம் தேதி வரை பதவியில் இருந்தார். பின் முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றவுடன் இவர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தார்.
2006 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., ஆட்சியை இழந்தது. இத்தேர்தலில் பெரியகுளம் தொகுதியில் இருந்து மீண்டும் எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் பதவிவகித்தார்.
2011 சட்டசபை தேர்தலில் போடி தொகுதியில் இருந்து 3வது முறையாக எம்.எல்.ஏ., வாக தேர்ந்தெடுக்கப்ட்டார். இம்முறை நிதி அமைச்சராக பொறுப்பேற்றார்.
தகவல்:
தினமணி, தினமலர், தினகரன் |