பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து நேற்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதா - சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதல்வர் பதவிகளை இழந்துள்ளார்.
இதனை அடுத்து புதிய முதலமைச்சரை தேர்வு செய்ய நேற்று அதிமுக எம். எல்.ஏ-க்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஆட்சி அமைக்க உரிமை கோரி நேற்று ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்று ஆளுநர் ரோசையா ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார்.
இதனை அடுத்து இன்று ஓ. பன்னீர்செல்வம் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்றார். சென்னையில் ஆளுநர் மாளிகையில் எளிய முறையில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆளுநர் ரோசய்யா முன்னிலையில் ஓ.பன்னீர் செல்வம் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டார்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இருந்த 30 பேரும் அமைச்சராக பதவியேற்றனர். பன்னீர் செல்வத்தை தொடர்ந்து நத்தம் விஸ்வநாதன் அமைச்சராக பதவியேற்றார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி, வளர்மதி, மோகன், பழனியப்பன், அமைச்சராக பதவியேற்றனர். செல்லூர் ராஜு, காமராஜ், தங்கமணி, செந்தில் பாலாஜி ஆகியோரும் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.
பதவியேற்பில் தலைமை செயலர் உள்பட உயர் அதிகாரிகள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால் பதவியேற்புக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதிய அமைச்சராக அக்ரி கிருஷ்ண மூர்த்தி பதவியேற்றார்.
புகைப்படம்:
NDTV
தகவல்:
தினகரன் |