பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து இன்று (செப்டம்பர் 27) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றிலிருந்து (செப்டம்பர் 27) இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பேருந்துகள் அரிதாகவே இயக்கப்பட்டு வருகிறது.
இன்று இரவு வரையிலான நிலவரப் படி, நெடுந்தொலைவுப் பேருந்துகள் குறுந்தொலைவுக்கே இயக்கப்படுகின்றன. பேருந்துச் சேவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளதை அறிய முடிகிறது.
நடப்பு பதட்டச் சூழலைக் கருத்திற்கொண்டு பலர் தம் பயணத்தை ஒத்தி வைத்துள்ள காரணத்தால், இயக்கப்படும் பேருந்துகளில் பெரிய அளவில் நெருக்கடி எதுவும் இல்லை.
பொதுச் சொத்துக்களுக்கு யாரும் சேதம் விளைவித்து விடக்கூடாது என்பதைக் கருத்திற்கொண்டு, பெட்ரோல் பங்குகளில், வாகனங்களை நேரடியாகக் கொண்டு சென்றால் மட்டுமே எரிபொருள் நிரப்பப்படுகிறது. அதுவன்றி - பாட்டில், கேன் ஆகியவற்றில் எரிபொருட்கள் வாங்கச் செல்வோர், அவ்வாறு தர மறுக்கப்பட்டு வருவதால் - போன வேகத்தில் திரும்பி வந்துகொண்டிருக்கின்றனர். |