காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழுக் கூட்டத்தில், 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவு மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்க நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், வரும் ஈதுல் அழ்ஹா - ஹஜ் பெருநாளை முன்னிட்டு, பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கூட்ட நிகழ்வுகள் குறித்து அவ்வமைப்பின் சார்பில், அதன் செயலாளர் எம்.செய்யது அஹமது வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
இறையருளால் எமது காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங் அமைப்பின் செயற்குழு கூட்டம் 30.09.2014 செவ்வாய்கிழமையன்று, அமைப்பின் தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் இல்லத்தில் நடைபெற்றது.
இரங்கல் தீர்மானம்:
ஹாஃபிழ் இர்ஷாத் அலி கிராஅத் ஓதி, கூட்ட நிகழ்வுகளைத் துவக்கி வைத்தார். கூட்டத்தின் முதலாவதாக அண்மையில் காலமான அமைப்பின் முன்னாள் தலைவர் எம்.எம்.எஸ்.காழி அலாவுத்தீன் மகன் ஹாஃபிழ் கே.ஏ.முஹம்மத் அபூபக்கர் மற்றும் முன்னாள் செயற்குழு உறுப்பினர் எம்.ஜெ.ஸிராஜுத்தீன் என்ற ஜமீல் ஸிராஜ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றபட்டது.
வரவேற்புரை:
கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய பேரவைத் தலைவர் கிழுறு முஹம்மத்த ஹல்லாஜ் வரவேற்புரையாற்றினார்.
பேரவையின் அங்கத்தினர், பார்வையாளர்கள் உள்ளிட்டோரை வரவேற்றுப் பேசிய அவர், பேரவையின் உறுப்பினர் எண்னிக்கையை அதிகரிக்க அனைவரும் முயற்சி மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.
கடந்த கூட்ட நிகழ்வறிக்கை:
அடுத்து, செயலாளர் எம்.செய்யது அஹமது கடந்த செயற்குழுக் கூட்ட நிகழ்வறிக்கையை வாசித்தார்.
வரவு - செலவு கணக்கறிக்கை:
பின்னர், பேரவையின் இதுநாள் வரையிலான வரவு-செலவு கணக்கறிக்கையை பொருளாளர் பி.எஸ்.ஏ.அஹமது கபீர் சமர்ப்பித்தார்.
தீர்மானங்கள்:
அடுத்து, நகர்நலன் குறித்த உறுப்பினர்கள் கருத்துப் பரிமாற்றத்திற்குப் பின், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன:-
தீர்மானம் 1 – நலத்திட்டங்களுக்கு நிதியொதுக்கீடு:
காயல்பட்டினத்தைச் சேர்ந்த - பொருளாதாரத்தில் நலிவுற்றுள்ள பயனாளிகளுக்கு சிறுதொழில் உதவி உபகரணங்கள் வழங்குவதற்காக ரூபாய் 1 லட்சத்து 50 ஆயிரம் ஒதுக்கப்பட்டது.
தீர்மானம் 2 - மருத்துவ உதவிக்கு நிதியொதுக்கீடு:
ஷிஃபா மருத்துவ விண்ணப்பங்களுக்கு உதவ நிதி ஒதுக்கப்பட்டது.
தீர்மானம் 3 - புற்றுநோய் பரிசோதனை இலவச முகாம்:
எதிர்வரும் அக்டோபர் மாதம் 12ம் தேதி, கத்தர் காயல் நல மன்றம், ஷிஃபா, கே.எம்.டி. மருத்துவமனை, ரோஸ் கார்டன் புற்றுநோயாளிகள் அரவணைப்பகம் ஆகியவற்றுடன் ஹாங்காங் பேரவையும் இணைந்து நடத்தவிருக்கும் புற்றுநோய் பரிசோதனை இலவச முகாமை நடத்திட முழு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டது.
தீர்மானம் 4 - ஹஜ் பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி:
பெருநாள் ஒன்றுகூடல் நிகழ்ச்சி, அக்டோபர் மாதம் 05ஆம் தேதி ஹஜ் பெருநாளன்று 18.30 மணிக்கு, ஹாங்காங் Middle Road Park (Sindhi Park) இல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. ஹாங்காங் - மக்காவ் - சீனா ஆகிய பகுதிகளில் வசித்து வரும் காயலர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரும் கலந்த்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தீர்மானம் 5 - சிற்றுலா ஏற்பாடு:
வரும் நவம்பர் மாதத்தில் பேரவை சார்பில் சிற்றுலா செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக குழு அமைக்கப்பட்டது.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலாளர் எம்.செய்யது அஹமது நன்றி கூற, கம்பல்பக்ஷ் ஹாஜி எஸ்.எச்.பாக்கர் ஸாஹிப் துஆவுடன் கூட்டம் நிறைவுற்றது. இக்கூட்டத்தில், பேரவையின் செயற்குழுவினர் மற்றும் சிறப்பழைப்பாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.
பங்கேற்ற அனைவருக்கும் சுவையான சிற்றுண்டி தலைவர் ஜனாப். ஏ.டபிள்யூ. கிலுர் முஹம்மது ஹல்லாஜ் அவர்கள் குடும்பத்தினரால் வழங்கி உபசரிக்கப்பட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங்காங் பேரவையின் முந்தைய செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ஹாங்காங் பேரவை தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |