ஹஜ் பெருநாளையொட்டி பெருநாளன்றும், அதற்கடுத்த - அய்யாமுத் தஷ்ரீக் என்றழைக்கப்படும் மூன்று நாட்களிலும், ஆடு, மாடு, ஒட்டகம் உள்ளிட்டவற்றை அறுத்துப்பலியிடுவது (உள்ஹிய்யா கொடுப்பது) இஸ்லாம் வலியுறுத்திய ஒரு கிரியையாகும்.
ஆட்டுக்கு ஒருவரும், மாடு மற்றும் ஒட்டகத்திற்கு ஏழு பேரும் பங்குதாரர்களாக இருக்கலாம். உள்ஹிய்யா கொடுக்கப்படும் அப்பிராணிகளின் இறைச்சியில் குடும்பத் தேவைக்கு எடுத்துக்கொண்டது போக, உற்றார் - உறவினருக்கும், ஏழை - எளியோருக்கும் அன்பளிப்பாக வழங்கப்படுவது வழமை.
அந்த அடிப்படையில், காயல்பட்டினம் நகரின் பள்ளிவாசல்கள் மற்றும் பொதுநல அமைப்புகள் சார்பாக, கூட்டு முறையில் உள்ஹிய்யா நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இவை ஒருபுறமிருக்க, தனி நபர்களாக ஆடு, மாடு, ஒட்டகம் வாங்கி உள்ஹிய்யா கொடுக்கும் வழமையும் உள்ளது. அந்த அடிப்படையில், காயல்பட்டினம் சித்தன் தெருவைச் சேர்ந்த ஒருவர், உள்ஹிய்யா கொடுப்பதற்காக ஹைதரபாத்திலிருந்து, சுமார் 70 ஆயிரம் ரூபாய் மதிப்பில் ஒட்டகத்தை வரவழைத்துள்ளார்.
நகரில் அரிதாகவே தென்படும் இவ்விலங்கைக் காண சுற்றுவட்டாரத்திலுள்ள சிறுவர்-சிறுமியர் கூட்டங்கூட்டமாக வந்து சென்றவண்ணம் உள்ளனர்.
|