காயல்பட்டினம் கற்புடையார்பள்ளி வட்டத்தில், கற்புடையார் பள்ளியின் தென்பகுதிக்கு எதிரில், கற்புடையார் பள்ளி சாலை - ஈக்கியப்பா தைக்கா தெரு சாலை சந்திப்பில் அமைந்துள்ளது மத்ரஸா தர்பிய்யத்தில் அத்ஃபால்.
திருமறை குர்ஆனை தஜ்வீத் முறையில் பார்த்து ஓத - மனனம் செய்ய பயிற்றுவித்தல், மார்க்க அடிப்படைக் கல்வியைக் கற்பித்தல் ஆகியவற்றை அடிப்படை நோக்கங்களாகக் கொண்டு அமையப்பெற்றுள்ள இந்த மத்ரஸாவின் துவக்க விழா இன்று 17.00 மணியளவில், காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா சபை நிர்வாகிகளுள் ஒருவரான சாளை முஹம்மத் அப்துல் காதிர் தலைமையில் நடைபெற்றது. ஹாஃபிழ் அரபி எம்.ஏ.சி.முஹம்மத் முஹ்யித்தீன் திருக்குர்ஆன் வசனங்களை கிராஅத்தாக ஓதி நிகழ்ச்சிகளைத் துவக்கி வைத்தார். மத்ரஸா நிறுவனரும், ஆசிரியருமான ஹாஃபிழ் ஏ.ஷெய்க் அப்துல் காதிர் என்ற எஸ்.ஏ.சி. ஹாஃபிஸா அனைவரையும் வரவேற்றுப் பேசியதுடன், மத்ரஸா அறிமுகவுரையாற்றினார்.
அல்ஜாமிஉல் கபீர் - பெரிய குத்பா பள்ளியின் கத்தீபும், முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரிகளின் நிறுவனருமான மவ்லவீ ஹாஃபிழ் எச்.ஏ.அஹ்மத் அப்துல் காதிர் மஹ்ழரீ வாழ்த்துரையாற்றினார்.
தொடர்ந்து, ஆசிரியரிடம் சில காலம் பயின்ற மாணவரிடம் அவரது பாடம் குறித்து சோதனை செய்யப்பட்டது. திருமறை குர்ஆனில் அவர் மனனம் செய்த ஏதேனும் ஒரு வசனத்தை ஓதிக் காண்பிக்க, அம்மாணவர் - அந்த வசனம் இடம்பெற்றுள்ள அத்தியாயம், வசன எண், திருக்குர்ஆன் வரிசைப்படி அத்தியாய எண், இறக்கப்பட்ட வரிசைப்படி அத்தியாய எண், அந்த அத்தியாயத்திலுள்ள மொத்த வசனங்களின் எண்ணிக்கை, ஒரே மாதிரியாக வரும் வசனங்கள் எங்கெங்கு வருகின்றனவோ அவை பற்றிய விபரங்கள் என அனைத்தையும் சொல்லிக் காண்பித்தார்.
பின்னர், மத்ரஸாவில் புதிதாக இணைந்துள்ள அனைத்து மாணவர்களுக்கும், திருமறை குர்ஆனின் முதல் அத்தியாயமான ஸூரத்துல் ஃபாத்திஹா ஓதிக்கொடுக்கப்பட்டு, புதிய பாடம் துவக்கி வைக்கப்பட்டது.
பெரிய - சிறிய குத்பா பள்ளிகளின் தலைவர் ஆர்.எஸ்.முஹம்மத் அப்துல் காதிர் துஆவுடன் நிகழ்ச்சிகள் யாவும் நிறைவுற்றன. சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
நிறைவில், ஆசிரியருடன் அனைத்து மாணவர்களும் குழுப்படம் எடுத்துக்கொண்டனர்.
|