சஊதி அரபிய்யா - ரியாத் காயல் நல மன்றத்தின் 44ஆவது செயற்குழுக் கூட்டத்தில், நலிந்தோருக்கான நலத்திட்ட உதவிகளுக்காக ரூபாய் 1 லட்சத்து 55 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூட்ட நிகழ்வுகள் குறித்து அம்மன்றத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-
எல்லாம்வல்ல அல்லாஹ்வின் நல்லருளால், எமது ரியாத் காயல் நல மன்றத்தின் (RKWA) 44ஆவது செயற்குழுக் கூட்டம், 31.10.2014 வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்குப் பின், பொறியாளர் மீரா சாஹிப் இல்லத்தில், மன்ற துணைத்தலைவர் ஹாஜி .பீ.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை தலைமையில் நடைபெற்றது.
செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் எஸ்.ஏ.சி.சாலிஹ் இறைமறை ஓதி, கூட்ட நிகழ்ச்சிகளைத் துவக்கி வைக்க, செயற்குழு உறுப்பினர் ஷஃபீயுல்லாஹ் வரவேற்புரையாற்றினார்.
நலத்திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு:
ஷிஃபா மூலம் பெறப்பட்ட கடிதங்கள் சக உறுப்பினர்களின் முன்னிலையில் வாசிக்கப்பட்டு, ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் நிதி மருத்துவ உதவித்தொகையாக ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதுபோல, கல்வி உதவி கோரி மன்றத்தால் நேரடியாகப் பெறப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்பட்டு, அவ்வகைக்காக ரூபாய் 35 ஆயிரம் தொகை நிதியொதுக்கீடு செய்யப்பட்டது.
தலைமையுரை:
கூட்டத் தலைவர் பீ.எம்.எஸ்.முஹம்மத் லெப்பை தலைமையுரையாற்றினார். அவரது உரைச்சுருக்கம்:-
கடந்த வருடம் 2013 செப்டம்பர் திங்கள் ஷிஃபா அமைப்பு துவங்கிய நாள் முதற்கொண்டே RKWAவின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்து வருகிறது, ஆனாலும் நாம் யாவரும் நமதூர் மக்கள் நோய் நொடியின்றி வாழ எல்லாம் வல்ல இறைவனிடம் இருகரமேந்திப் பிரார்த்திக்க வேண்டும்.
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவி கொண்டும், மற்றும் மன்றத்தின் நாடி துடிப்பான எங்களது உறுப்பினர்களின் சந்தா மற்றும் நன்கொடைகளை கொண்டே இத்தகைய நற்காரியங்கள் செய்யப்பட்டு வருகிறது என்பதை இத்தருணத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்...
இவ்வாறு அவரது உரை அமைந்திருந்தது.
எம் மன்றத்தில் இது வரை இணையாத காயல் சகோதரர்களையும், நீண்ட நாள் தொடர்பில் இல்லாத உறுப்பினர்களையும் தொடர்பு கொண்டதை செற்குழு உறுப்பினர்களுடன் இக்குழு பகிர்ந்துகொண்டது.
மாதாந்திர உணவுத் திட்டம்:
Monthly Food Program என்னும் உணவு வழங்கும் திட்டத்தின் கீழ், குறிப்பாக எவ்வித உதவியும் இன்றி தவிக்கும் வறிய குடும்பங்கள் கண்டறியப்பட்டு, கடந்த செப்டம்பர் மாதம் முதல் 8 குடும்பங்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக எம் மன்றச் செயலர் ஏ.டீ.ஸூஃபீ விரிவாக எடுத்துக்கூறியதுடன், இத்திட்டத்தை இன்னும் சிறப்புற செய்திட அதிகமான அனுசரணை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கடந்த பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்ற விதம், அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தை - பெரும்பான்மை உறுப்பினர்களின் வேண்டுகோளின் படி, இஸ்திராஹாவில் (பொழுது போக்கு) நடத்த கேட்டுக்கொண்டது குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதுகுறித்து, முஹ்ஸின், ஹஸன் ஆகியோரால் விளக்கப்பட்டது.
சிறப்பழைப்பாளர்கள் கருத்துரை:
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பொறியாளர் மீரா சாஹிப் பேசுகையில், இவ்வளவு சிறப்பாக செயல்படும் இம்மன்றத்தில் தாமும் இணைந்து செயல் பட வேண்டும் என்ற ஆவல் மேலோங்கி இருப்பதாகக் கூறினார்.
மற்றொரு சிறப்பழைப்பாளரான அய்யம்பேட்டை அன்ஸாரீ பேசுகையில், மன்றத்தின் சேவைகளை வெகுவாகப் பாராட்டியதோடு, தமது ஊருக்கும் இதுபோன்ற அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருவதாகவும், ரியாத் காயல் நல மன்றம்தான் அதற்கு வழிகாட்டி என்றும் கூறினார்.
மருத்துவ உதவிக்காக ஆண்டொன்றுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை ரியாத் காயல் நல மன்றம் உதவுவது பாராட்டுக்குரியது என்றாலும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் குறித்து ஊர் மக்களுக்கு விளக்கிக் கூறி, போதிய விழிப்புணர்வூட்டி, அவர்களைப் பயனடையச் செய்வது இன்னும் சிறந்ததாக இருக்கும் என்றும், குறிப்பாக - தொடர்சிகிச்சை பெற்றுவரும் நோயாளிக்கு அது மிகுந்த பயனளிக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.
நன்றியுரை:
செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.அப்துல் காதிர் நன்றி கூற, மன்றத் தலைவர் ஹாஃபிழ் எம்.ஏ.ஷெய்க் தாவூத் இத்ரீஸ் துஆ ஓத, சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது ஸலவாத் சொல்லப்பட்டு, நாயனின் நல்லருளால் நனிசிறப்புடன் நிறைவடைந்தது எம் மன்றத்தின் செயற்குழுக் கூட்டம்.
பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு விருந்துபசரிப்பு செய்யப்பட்டது. உணவு ஏற்பாடுகளுக்கு, மன்றத்தின் முன்னாள் தலைவர் எம்.என்.மின்ஹாஜ் முஹ்யித்தீன் அனுசரணையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே - அல்ஹம்துலில்லாஹ்!
இவ்வாறு, அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்:
நோனா செய்யித் இஸ்மாஈல்
செய்தி தொடர்பாளர்
காயல் நல மன்றம் - ரியாத்
ரியாத் காயல் நல மன்றத்தின் 43ஆவது செயற்குழுக் கூட்டம் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!
ரியாத் காயல் நல மன்றம் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |