எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி நெல்லையில் நவம்பர் 13 அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின்போது அவர் கூறியதாவது:
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் செயல்பட்டுவரும் டி.சி.டபுள்யூ கெமிக்கல் ஆலை வெளியேற்றும் கழிவுகளால் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஆறுமுகநேரி, பேயன்விளை மற்றும் காயல்பட்டினம் ஆகிய பகுதிகளில் வசித்துவரும் மக்கள் புற்றுநோய் உட்பட கொடிய நோய்களால் பாதிக்கப்படுவதுடன், இப்பகுதியிலுள்ள மீன்வளம், உப்பள தொழில் முற்றிலும் நசிந்து வருகிறது.
இப்பகுதி மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தியும் ஆலை நிர்வாகம் மக்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்காமல் உள்ளது. நிபுணர் குழுவை கொண்டு ஆலையின் கழிவு வெளியேற்றும் தன்மையை பரிசோதனை செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உள்ளூர் மக்களுடன் எஸ்.டி.பி.ஐ கோரிக்கை வைத்தது. ஆனாலும் தமிழக அரசு போதிய கவனம் செலுத்தாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.
ஆகவே இந்த பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளது. அதன் முதல்கட்டமாக டிசம்பர் 30 அன்று டி.சி.டபுள்யூ ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது. மேலும் இதுதொடர்பாக நடந்துவரும் போராட்டங்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி தனது முழு ஆதரவை தெரிவிப்பதோடு, இந்த பிரச்சனையை தேசிய அளவிலான ஒரு விழிப்புணர்வு பிரச்சாரமாக கொண்டு செல்லவும் முடிவுசெய்துள்ளது.
மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே தமிழக-கர்நாடக எல்லையான மேகேதாடு என்ற இடத்தில் குடிநீர் திட்டத்திற்காக அணை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் தெரிவித்துள்ளார். குடிநீர் திட்டத்திற்கான அணை என்றாலும் பின்னாளில் அணையை நீர் மின் நிலையமாக மாற்றவும் கர்நாடகா அரசு ஆய்வு செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதற்காக மத்திய சுற்றுச்சூழல், நீர்வள அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளதாகவும் அம்மாநில அரசு தெரிவிக்கிறது.
காவிரியின் குறுக்கே அணைகள் கட்டும் இந்த திட்டத்தை கர்நாடகம் நிறைவேற்றினால் தமிழ்நாட்டிற்கு காவிரி நதிநீர் வரத்து குறைந்து காவிரி டெல்டா பகுதிகளில் விவசாயம் அழிந்துவிடும் சூழல் உருவாகும். நீரின்றி காவிரி டெல்டா பகுதியே வறண்டு போகும் நிலை உருவாகிவிடும். ஏற்கனவே காவிரி நடுவர்மன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு 192 டி.எம்.சி. தண்ணீர் அளிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும்பாலும் கர்நாடகா அரசால் மீறப்படும் நிலையில், இந்த குறுக்கணைகள் மேலும் காவிரி நதிநீர் பங்கீட்டில் சிக்கலை உருவாக்கும் என்பதால் இந்த திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது.
இதேப்போல் கேரளா மாநிலம் பட்டிச்சேரி என்ற இடத்தில், பாம்பாற்றில் சுமார் 26 கோடி ரூபாய் செலவில் தடுப்பணை கட்ட கேரள அரசு அடிக்கல் நாட்டியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பாம்பாறுதான் அமராவதி அணையின் நீர் ஆதாரம். அமராவதி ஆற்றின் மூலம்தான் திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயம் மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
ஆகவே அமராவதி அணையின் நீர் ஆதாரத்தை தடுக்கும் வகையில் கேரள அரசால் மேற்கொள்ளப்படவிருக்கும் அணை திட்டத்தை மத்திய அரசு தலையிட்டு உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். மேலும் காவிரி நடுவர் மன்றத்தில், காவிரியின் கிளை நதியான அமராவதியும் உள்ளடங்கி இருப்பதால், அந்த அமைப்பின் ஒப்புதல் இன்றியும், தமிழக அரசின் ஒப்புதல் இன்றியும் அணை கட்டும் கேரளா மீது உரிய நடவடிக்கையினை மேற்க்கொள்ள வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் நலனை பாதுகாக்கும் இந்த விசயத்தில் தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்க்கொண்டு கேரள அரசின் முயற்சியை தடுக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் இந்த இரண்டு மாநில அணைக்கட்டு திட்டங்களுக்கு எதிராக கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைந்து போராட வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நடந்த கிராணைட் குவாரி, கனிம மணல் குவாரி முறைகேடுகள் குறித்து உயர்நீதிம்னறத்தால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் குழுவுக்கு மதுரை மாவட்டத்தில் விசாரணை நடத்த மட்டுமே தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த முறைகேடுகள் தமிழகம் தழுவிய அளவில் நடந்துள்ளதால் அந்த விசாரணையை தமிழகம் முழுவதும் நடந்த சகாயம் குழுவுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும். மேலும் கிராணைட் குவாரி முறைகேடு போன்று, நெல்லை, குமரி மாவட்டங்களில் நடந்த கனிம மணல் குவாரி முறைகேடு குறித்தும் விசாரணை நடத்த சகாயம் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையின் காரணமாக பல இடங்களில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நீர்நிலைகளின் கரை உடைந்து வயல்வெளிகளும், குடியிருப்புகளும் நீரில் மூழ்கி வருகின்றன. தொடர் மழையின் காரணமாக ஏராளமான விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி அழிந்து வருகின்றன. இதுகுறித்து தமிழக அரசு முறையான கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணத்தை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தமிழக மீனவர்கள் தூக்கு விவகாரத்தில் இலங்கையுடன் பாஜக அரசு சேர்ந்து நாடகமாடுவது போல் தெரிகிறது. தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து போராடி வரும் நிலையில், பாஜக தலைவர்களின் அறிக்கையும், இலங்கையின் அறிக்கையும் பல சந்தேகங்களை ஏற்படுத்துகிறது, அரசியல் லாபத்திற்காக அரங்கேற்றப்படும் நாடகங்களுக்கு தமிழக மீனவர்களை பலிகடா ஆக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது, இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இவ்வாறு அவர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக், மாவட்டத் தலைவர் ஐ.உஸ்மான் கான், மாவட்ட பொதுச்செயலாளர் ஜாகீர் உசேன், மாவட்ட துணைத் தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி, காஜா முகைதீன், மாவட்ட செயலாளர் மஜீத் மற்றும் தூத்துகுடி மாவட்ட பொறுப்பு குழு தலைவர் அஸ்ரஃப் அலி பைஜி ஆகியோர் உடனிருந்தனர்.
|