சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் 82-வது செயற்குழு கூட்டம் சென்ற 14.11.2014 வெள்ளி மாலை மஃரிப் தொழுகைக்குப்பின் ஜித்தா, ஷரஃபிய்யாவிலுள்ள இம்பாலா கார்டன் உணவக கூட்டரங்கில் நடந்தேறியது.
மன்றத்தின் துணைத்தலைவர் மருத்துவர் சகோ.M.A.முஹம்மது ஜியாது தலைமையில் சகோ.Y.M.முஹம்மது ஸாலிஹ் அனைவரையும் அகமகிழ வரவேற்க, சகோ. S.I. செய்யது நூஹு அப்துல் பாஸித் இறை மறை ஓதிட கூட்டம் ஆரம்பமானது.
மன்ற செயலாளர்கள் உரை:
சென்ற கூட்டங்களின் தீர்மானங்கள் மற்றும் அளிக்கப்பட்ட உதவிகள் பயனாளிகளின் விபரம் மேலும் மன்றத்தின் இதர சமூக நலப்பணிகள் குறித்த தெளிவான செய்திகளை
விபரமாக தந்தார் செயலாளர் சகோ.சட்னி S.A.K.செய்யிது மீரான்.
இறைவன் உதவியால் நம் மன்றப்பணிகள் தொய்வின்றி நடந்து வருவது சந்தோஷமளிக்கிறதென்றும், சமீபத்தில் தாயகம் சென்று இருந்த சமயம் தாம் கலந்து கொண்ட பல அமைப்புகளின் ஆலோசனை கூட்டங்கள் குறித்தும் அது நிமித்தம் நடந்தேறிய செயல்பாடுகள் பற்றியும், மேலும்; நம் மன்றத்தின் கலந்தாலோசனைகள் மூலம் நிறைய செய்திகளை நம்மால் பரிமாற முடிகிறதென்றும் நம் மன்றப்பணிகளை இன்னும் வீரியமாக முன்னெடுக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் செயலாளர் சகோ.M.A.செய்யிது இப்ராஹீம்.
நிதிநிலை அறிக்கை :
இதுவரை நாம் பயனாளிகளுக்கு அளித்தது, சந்தா, நன்கொடைகளின் வரவு, மன்றத்தின் தற்போதைய இருப்பு தொகைகள் குறித்த விபரங்களை பொருளாளர் சகோ.M.S.L.முஹம்மது ஆதம் அறியத்தந்தார்.
சமீபத்தில் விடுப்பில் தாயகம் சென்று திரும்பிய சகோ.சட்னி முஹம்மது லெப்பை, தாம் கலந்துகொண்ட கூட்டங்கள், "இக்ரஃ" மற்றும் "ஷிஃபா" அமைப்புகளின் செயல்பாடுகள், மேலும்; நகர் நடப்புக்கள் குறித்து விளக்கினார்.
இதனை தொடர்ந்து உறுப்பினர்களின் கலந்தாலோசனைகள், கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.
மனுக்கள் வாசிப்பு மற்றும் பரிசீலனை:
மருத்துவம் மற்றும் உயர்கல்வி உதவி வேண்டி வந்த மனுக்கள் வாசிக்கப்பட்டது. பயனாளிகள் தம் தேவைகளை அறிந்து வரையப்பட்ட அந்த மனுக்கள் அவர்களின் வாழ்வாதாரத்தை கண்முன் நிறுத்தி நம் கண்களை கண்ணீர் சிந்த வைத்தது.
உதவிகள்:
மன்ற துணைத்தலைவர் சகோ மருத்துவர் M.A.முஹம்மது ஜியாது முன்னிலையில் மருத்துவ மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு சிறுநீரக கோளாறு, மூளை புற்று, கல்லீரல் புற்று, கர்ப்பப்பை அறுவை சிகிச்சை, விபத்தில் ரணமான கால் சிகிச்சை போன்றவைகளில் பாதிக்கப்பட்டு துயருறும் மொத்தம் 5 பயனாளிகளுக்கு மருத்துவ உதவிகளும், பொறியியல் மற்றும் தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு 5 பயனாளிகளுக்கு கல்வி உதவிகளும் வழங்க முடிவு செயப்பட்டது.
மேலும் ஒரு மாணவரின் மூன்றாண்டு கால படிப்பு முழுச்செலவையும் மன்றம் ஏற்றுக்கொண்டு அதை "இக்ரஃ" மூலம் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
நோயுற்றோர் விரைந்து குணமடையவும், மேற்படிப்பில் நுழைந்தோர் அவர்கள் இலக்கில் வெற்றி பெறவும் வல்ல இறையிடம் பிரார்த்திக்கப்பட்டது.
சிறப்பு விருந்தினர்:
சிறப்பு விருந்தினராக ரியாத் காயல் நல மன்ற ஆலோசகர் சகோ.M.E.L.முஹம்மது நுஸ்கி கலந்து சிறப்பித்தார். மன்றத்தின் நற்பணிகளை வாழ்த்தியும், நல்லதோர் ஆலோசனைகளையும் வழங்கி மன்றத்தின் பணி மென்மேலும் சிறக்க பிரார்த்தித்து அமர்ந்தார்.
தீர்மானங்கள்:
1.சவூதி தலைநகர் ரியாது சர்வதேச இந்திய பள்ளியின் ஆட்சி மன்றக்குழு (Chairman) புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டு பொறுப்பேற்றிருக்கும் நமதூரைச்சார்ந்த
சகோ.எஸ்.ஹைதர் அலி அவர்களை இம்மன்றம் மனதார வாழ்த்தி தம் பணியில் நல்லதோர் சேவையாற்றிட வல்ல இறையிடம் பிரார்த்திக்கிறது.
2. யான்பு நகரில் வசிக்கும் நம் மன்ற உறுப்பினர்களின் கலந்தாலோசனை கூட்டம் சந்திப்பு நிகழ்வாக இன்ஷாஅல்லாஹ் எதிர் வரும் 28.11.2014 வெள்ளி அன்று யான்புவில் நடாத்திட இம்மன்றம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஒருங்கிணைப்பு பணியை சகோ ஏ.எம்.செய்யது அஹமது தலைமையிலான குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இனிய இந்நிகழ்வில் யான்பு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வாழும் நம் காயல் சொந்தங்கள் தவறாது கலந்து சிறப்பிக்கவும் அன்புடன் வேண்டிக்கொள்ளப்படுகிறது.
3. மன்றத்தின் 83-ஆவது செயற்குழு கூட்டம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 12-12-2014 வெள்ளி மாலை மக்ரிபுக்குப்பின் நடாத்திடவும் முடிவு செய்யப்பட்டது.
சகோ. அரபி M.I.முஹம்மது ஷுஅய்ப் நன்றி கூற, சகோ. S.S. ஜாஃபர் சாதிக் துஆ கஃப்பாராவுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது அல்ஹம்துலில்லாஹ்!
மன்றத்தலைவர் சகோ.குளம் M.A.அஹ்மது முஹ்யித்தீன் அனுசரைனையுடன் இரவு உணவு பரிமாறப்பட்டது.
தகவல்:
சட்னி எஸ்.ஏ.கே.செய்யது மீரான்
அரபி எம்.ஐ. முஹம்மது ஷுஅய்ப்
காயல் நற்பணி மன்றம்,
ஜித்தா- சஊதி அரபிய்யா,
17.11.2014.
|