காயல்பட்டினம் நகராட்சியின் சுகாதார ஆய்வாளர் பொன்வேல்ராஜ் பருவ மழைக்காலத்தில் மேற்கொள்ளவேண்டும் முன்னேசெரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் தெரிவித்திருப்பதாவது:
அன்பான காயல் நகர பொதுமக்களுக்கு வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்வதென்னவெனில்...
நம்நகர் பகுதியில் மிகஅதிகபட்சமாக மழை பெய்து வருவதால், ஆங்காங்கே மழைநீர் தேங்கிய வண்ணம் உள்ளது. அவைகளை அப்புறப்படுத்த நகராட்சி துரித நடவடிக்கை எடுத்துவரும் நேரத்திலும், சில இடங்களில் மழைநீர் தேங்கிநிற்கும் நிலையே உள்ளது.
இத்தருணத்தில் சுகாதாரத்தை பேணும் பொருட்டு, வீட்டில் சேரும் குப்பைகளை, தங்களது பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைத் தொட்டியின் உள்ளே போடும்மாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
குப்பைத் தொட்டி இல்லாத பகுதிகளில் உள்ளவர்கள், மழைநீர் தேங்கியுள்ள நீர்நிலைகளில் குப்பைகளை போடாமல், தங்களது பகுதிக்கு குப்பை வண்டிகள் வரும் சமயம் கொடுத்துதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வீடுகளில் மழைநீர் தேங்கும் வகையில் உள்ள உடைந்த பிளாஸ்டிக் பொருள்கள்,தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், பயண்படுத்தப்படாமல் வீட்டில் வைக்கப்பட்டிருக்கும் ஆட்டுரல் ஆகியவைகளை மழைநீர் தேங்காதவண்ணம் அப்புறப்படுத்தி, டெங்கு கொசு உருவாகுவதை தடுத்திட உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
மேலும் வீட்டு கிணறு மற்றும் தொட்டிகளில் உண்டாகும் கொசுபுழுவை தடுக்கும் பொருட்டு, நகராட்சியால் மருந்து தௌிக்க அனுப்பப்படும் பணியாளர்களுக்கு முழுஒத்துளைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மழைகாலமாக உள்ளதால் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறோம்.
திறந்த நிலையில் விற்கப்படும் உணவு பண்டங்களை திண்பதனை தவிர்த்திடுமாறும், ஹோட்டல்களில் உணவு உண்பவர்களுக்கு காய்ச்சிய குடிநீரை வழங்குமாறு ஹோட்டல் உரிமையாளர்களை கேட்டுக்கொள்கிறோம்.
குழந்தைகள் தேங்கிய மழைநீரில் விளையாடுவதை தவிர்த்திட பெற்றோர்கள் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|